ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதை எதிர்த்து மேற்கு வங்க அரசு வழக்கு

nakkeeran : ஆதார் எண்ணை தொலைபேசி எண்ணுடன் இணைப்பதற்கு மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், மேற்கு வங்க அரசு சார்பில் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்காள அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குறிப்பாக செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை கடுமையாக குறைகூறிய மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தனது இணைப்பை துண்டித்தாலும் தனது செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்கமாட்டேன் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன், மேற்கு வங்க அரசின் மனுவும் 30-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக