வெள்ளி, 20 அக்டோபர், 2017

அம்பேத்கரைப் பாராட்டி, பெரியாரைத் தூற்றுவதில் உள்ள அரசியல்!

மின்னம்பலம் :புனித பாண்டியன்
சிறப்புக் கட்டுரை: அம்பேத்கரைப் பாராட்டி, பெரியாரைத் தூற்றுவதில் உள்ள அரசியல்!நான் இருபதாண்டுகளுக்கும் மேல் தலித் செயல்பாட்டாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறேன். பாபா சாகேப் அம்பேத்கர், பெரியார் இருவருமே என்னை மிகவும் கவர்ந்தவர்கள். சமீபகாலமாக பி.ஏ.கிருஷ்ணன், கல்யாணராமன் போன்றவர்கள் எழுதிய சில கட்டுரைகள் அம்பேத்கரை உயர்த்தியும் பிராமண வெறுப்பாளர் என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் கிடையாது என்பது போல பெரியாரைக் குற்றம்சாட்டியும் வெளிவருகின்றன.
20 ஆண்டுகளுக்கும் மேல் நான் தலித் முரசு தமிழ் இதழின் ஆசிரியராக இருந்து வருகிறேன். இதன் ஒவ்வோர் இதழிலும் சாதிக்கு எதிரான போராளிகளான இந்த மகத்தான இருவரின் ஒரே கருத்துகளைக்கொண்ட பேச்சுகள், எழுத்துகள் வெளிவருகின்றன. சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களாகத் தமிழ்ப் பத்திரிகை கலாசாரத்தில் மிகவும் பரிச்சயமான பி.ஏ.கிருஷ்ணன், கல்யாணராமன் ஆகியோர் இந்தக் கட்டுரைகளைக் கவனிக்கவில்லை என்பது வியப்பூட்டுகிறது. அல்லது, இதையெல்லாம் அவர்கள் கவனிக்காதிருப்பதில் வியப்பொன்றுமில்லை என்றும் சொல்லலாம்.

ஒரு தலித் செயல்பாட்டாளராக என் நிலைப்பாடு மிகவும் எளிமையானது. என்னை ஒரு தலித்தாக உருவாக்கியது பெரியாரல்ல, பிராமணிய இந்து மதம்தான். நான் பெரிய பணக்காரனாகவோ, பூசாரியாகவோ ஆகியிருந்தாலும்கூட, தொடர்ந்து ஒரு தலித்தாகவும் தாழ்ந்தப்பட்ட நபராகவும்தான் அடையாளம் காணப்படுவேன். இதற்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாதி ஒழிப்புக்காக அம்பேத்கரைப் போலவே இறுதிவரை அயராமல் போராடியதுதான் சாதிக்கும் அவருக்கும் உள்ள ஒரே தொடர்பு. அம்பேத்கரின் அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட் மற்றும் அவரது பல எழுத்துகளையும் பேச்சுகளையும் தனது பத்திரிகையில் தமிழில் வெளியிட்டதும் பெரியார்தான் என்பது கிருஷ்ணன், கல்யாணராமன் ஆகிய இருவருக்குமே நன்றாகத் தெரியும்.
அம்பேத்கரைப் போல அல்லாமல், பெரியார் பிராமணியத்தை வெறுக்கவில்லை பிராமணர்களைத்தான் வெறுத்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், பிராமணர்களைக் குறித்து அம்பேத்கரின் கூற்றை வைத்துப்பார்த்தால் இந்தக் குற்றச்சாட்டுக்கு அர்த்தமே இல்லை என்பது புரியும்.
“வரலாறு ரீதியாக அவர்கள் (பிராமணர்கள்) மொத்த இந்துக்களில் 80 சதவிகிதம் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மிகவும் கண்மூடித்தனமான எதிரியாகவே இருந்து வருகின்றனர். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் இவ்வளவு பின்தங்கியும், இந்தளவு சிறுமைபடுத்தப்பட்டும், நம்பிக்கை, இலக்கு எதுவும் இல்லாதவர்களாக இருப்பதற்கு முழுக்க முழுக்க பிராமணர்களும் அவர்களது தத்துவங்களும்தான் காரணம். இந்தத் தத்துவத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கைகள் பின்வருமாறு: (1) பல்வேறு வகுப்புகளுக்கிடையே கட்டமைக்கப்பட்ட சமத்துவமின்மை (2) சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் ஆயுதங்களைத் தொடக் கூடாது (3) சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்கு எந்தக் கல்வியும் வழங்கப்படக் கூடாது (4) ஆட்சி, அதிகாரத்தில் சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் இடம்பெறக் கூடாது. (5) சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்கு நில உரிமை கிடையாது (6) பெண்களை முழுமையாக அடிமைப்படுத்தி ஒடுக்கப்பட வேண்டும்.” (பி.ஆர். அம்பேத்கர், எழுத்துகள், பேச்சுகள் பகுதி 9, பக்கம் 215).
பிராமணியத்தை நிலைநிறுத்துவதில் பிராமணர்களின் பங்களிப்பு குறித்த அம்பேத்கரின் கருத்துகள் இத்துடன் முடியவில்லை:
“…அறிவுசார் வகுப்புகள் எனக் குறிப்பிடப்படும் பிராமணர்கள் கல்வியைத் தங்கள் ஏகபோக உரிமையாக நிலைநாட்டியதோடு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்வி பெறுவதை நாக்கு வெட்டப்படுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது உள்ளிட்ட தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்த ஒரே நாடு இந்தியாதான். மேலும், பிராமணர்கள் ஆதரவு தராத ஒரு சமூகக் கேடோ அல்லது சமூகத் தவறோ கிடையாது. ஒரு மனிதனிடம் வேறொரு மனிதன் காட்டும் மனிதாபமானமற்ற தன்மை, சாதி உணர்வு, தீண்டாமை உணர்வு, அணுக முடியாமல் இருப்பது ஆகியவைதான் இவர்களது மதம். உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் பிராமணர்கள் ஆதரவு அளித்துள்ளனர். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சடங்கின் பெயரால் விதவைகள் உயிரோடு எரிக்கப்பட்டனர். சதிக்குத் தங்களது முழு ஆதரவை பிராமணர்கள் வழங்கியுள்ளனர். விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கோட்பாட்டுகளுக்குப் பிராமணர்கள் தங்கள் முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். பெண்கள் 8 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கப்பட்டனர். இதற்கும் பிராமணர்கள் தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் பெண்கள் ஆகியோருக்கான சட்டங்களை வழங்குபவர்களாக பிராமணர்கள் பிறப்பித்த சட்டங்கள் உலகில் வேறு எந்தப் பகுதியிலும் அறிவுசார் பிரிவினர் வகுத்த சட்டங்களோடு ஒப்பிடும்போது ஆகக் கொடுமையானவை. வேறு யாருமே தங்களுக்குக் கீழுள்ள மக்களை இந்த அளவு நிலையான அறியாமையிலும், ஏழ்மையிலும் வைத்திருக்கவில்லை. சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களுடனான பிராமணர்களின் அணுகுமுறை யூதர்களுடனான ஜெர்மானியர்களின் அணுகுமுறை, நீக்ரோக்களிடம் வெள்ளையர்களின் அணுகுமுறை முதலானவை போன்றது. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்கள் பிராமணர்களுக்கு அந்நியம் என்பதோடு அவர்களுடன் விரோதப் போக்கு கொண்டவர்களாகவும் உள்ளனர். இவர்கள் விஷயத்தில் மனசாட்சிக்கோ அல்லது நீதி நியாயத்துக்கோ எந்த இடமும் இல்லை. (அதே நூல், பக்கம் 215 - 216)
பெரியாரைக் குறித்த இன்னொரு குற்றச்சாட்டு, அவர் காலனியாதிக்கத்தின் ஆதரவாளர் என்பது, சுதந்திர இந்தியாவைப் பற்றி அம்பேத்கர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்க்கலாம்:
“… சுயராஜ்ஜியம் என்பது இந்துக்களை அதிக அதிகாரமுடையவர்களாகவும் தீண்டத்தகாதவர்களை மேலும் நிராதரவானவர்களாகவும் மாற்றும். மேலும் சுயராஜ்ஜியம் இந்துக்களுக்கு வழங்கும் பொருளாதார நன்மைகளால், தீண்டாமையை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விரிவடையச் செய்யவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.” (அதே நூல் பக்கம் 198)
மேலும் அவர், “இந்தியா தனித்த இறையாண்மை கொண்ட சுதந்திர அரசாக மாறினால் என்ன நடக்கும் என்று ஒருவர் கேட்கலாம். நிர்வாகம் செய்யும் பிரிவினர் சுயராஜ்ஜியம் என்ற மந்திரக் கோலால் மறைந்துவிட மாட்டார்கள் என்ற ஒரு விஷயம் இதில் நிச்சயம். அது இப்போது இருப்பதைப் போலவே தொடரும் என்பதோடு இப்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அதிக வலுவோடும், வேகத்தோடும் காணப்படும்” என்றும் எச்சரித்துள்ளார். (அதே நூல் பக்கம் 212).
பொருளாதார மேம்பாட்டு அல்லது சமூக மேம்பாடு எதுவுமே நாட்டில் நிலவும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படையான சமூகத்தில் நிலவும் சாதிப் பாகுபாட்டை முற்றிலுமாக ஒழிக்காது என அம்பேத்கரும் பெரியாரும் தொடர்ந்து குறிப்பிட்டுவந்துள்ளனர். சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களை உள்ளடக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அம்பேத்கர் இப்படிக் கூறுகிறார்:
“தனக்கென ஓர் இறையாண்மை கொண்ட சுதந்திர இந்திய நாட்டில் வாழ்க்கைத் தத்துவமாகவும் சமூக ஒழுங்காகவும் பிராமணியம் இருப்பது முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சமூக மேம்பாடு பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. சமூக அமைப்பின் காரணமாக இவர்கள் அனுபவித்துவரும் அவமானங்களோடும் இழிவுகளுடனும் ஒப்பிடுகையில் வறுமை என்பது ஒன்றுமேயில்லை. உணவு அல்ல, கவுரவம்தான் இவர்களுக்கு மிகவும் தேவை.” (அதே நூல் பக்கம் 212-213)
அம்பேத்கரைப் போலவே சமூக, அரசியல் லட்சியங்களைக் கொண்ட பெரியார், அவற்றை வெளிப்படுத்த ‘சுய மரியாதை இயக்கம்’ என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தார். சாதி வன்முறைகள் சார்ந்த தனிச் சம்பவங்களை எதிர்ப்பதைக் காட்டிலும் அந்த வன்முறைகளை நீடிக்கச்செய்வதோடு, சமுதாயத்தை ஜனநாயகப்படுத்தும் திட்டத்துக்கு மிகவும் அவசியமான சகோதரத்துவம் உருவாவதைத் தடுக்கும் சித்தாந்தங்கள் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று இருவருமே கருதினார்கள். ஒவ்வொருவருடைய பிறவியிலிருந்தே இந்த ஜனநாயகத்தன்மையை உருவாக்க வேண்டும் என்றால் சாதி ஒழிக்கப்பட்டால்தான் அது சாத்தியம் என்று இருவரும் கருதினார்கள். 2012இல் மேற்கொள்ளப்பட்ட மனிதவள மேம்பாட்டு ஆய்வின்படி தீண்டாமையை நடைமுறையில் பின்பற்றிவரும் அதிகமான குடும்பங்கள் பிராமணக் குடும்பங்கள்தான் (52%) என்பது தெரியவந்தது http://ihds.info/blog/so-who-practicinguntouchability-india.

புத்தரிலிருந்து தொடங்கி ஜோதிபா புலே, அம்பேத்கர், பெரியார் போன்ற பலர் சாதிக்கு எதிரான போராட்டங்களை நடத்திவந்தாலும் பிராமணர்கள், உயர்மட்ட அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மிகப் பெரிய பங்கினைப் பெற்று வருகிறார்கள். சட்டமியற்றும் மன்றங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஓரளவு தலித்துகளுக்கும் இடம் கிடைத்துவருகிறது. இந்த நிலையில் அம்பேத்கரை உயர்த்தியும் பெரியாரைத் தாழ்த்தியும் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? பிரித்தாளும் சூழ்ச்சி என்பது இந்திய ஆளும் வர்க்கத்தினரின் ஆகிவந்த உத்தி. தவிர, அம்பேத்கரை உயர்த்திப் பேசுவதும் கொண்டாடுவதும் இவர்களுக்கு வாக்கு வங்கியை வழங்குகிறது. ஆனால் பெரியாரைப் பொறுத்தவரை எந்த அரசியல் லாபமும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
ஆனால், இத்தனை காலம் கழித்து ஏன் இதைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் கூட்டணிகள் உருவாகிவருவது அதிகாரத்தில் உள்ளவர்களைக் கவலைகொள்ள வைக்கிறது என்பதுதான் காரணம் என்று நான் கருதுகிறேன். இன்றைய இந்துத்துவ ஆட்சியில் பிராமண - பனியா (தொழில்சார் சாதியினர்) கூட்டணியின் வளர்ச்சி வெளிப்படையானது. இந்தக் கூட்டணியின் ஆதிக்கம் குறித்து அம்பேத்கரும் பெரியாரும் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார்கள். இந்த பிராமண - பனியா கூட்டணியால் லாபம் பெற்றுவருபவர்கள் ஒடுக்கப்பட்டவர்களிடையே உருவாகிவரும் கூட்டணிகளைத் தங்களுக்கான அச்சுறுத்தலாகப் பார்ப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு பிராமணர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளைத் தடுக்க, மக்களிடம் அமைதி காக்கும்படி கோரிக்கை விடுப்பதற்காக அகில இந்திய வானொலி நிலயத்திலிருந்து தனக்கு வந்த அழைப்பை ஏற்றுச்சென்றவர் பெரியார். மேலும், கல்விக்கான கோரிக்கையில் பிராமணர்களை உள்ளடக்கிய விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தையே இவர் கோரினார். அவர்களுக்கு உரிய சமூகப் பங்கை பெரியர் என்றுமே மறுத்ததில்லை.
தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான சாதிக் கொடுமைகள் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் கல்யாணராமன் (இதற்கான புள்ளிவிவரம் எதையும் அவர் தரவில்லை), இது பெரியார் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் தோல்வி என்கிறார். உத்தரப்பிரதேசத்தில் மூன்று முறை தலித் முதலமைச்சர் ஆண்ட பிறகும் அங்கே தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை என்று சொல்வதைப் போன்ற தவறான வாதம்தான் இது. அம்பேத்கர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் தலித்துகளுக்கு எதிரான சாதிக் கொடுமைகள் குறையவில்லை என்றும் வாதிடலாம். தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்துப் பேசும் பி.ஏ.கிருஷ்ணனும் கல்யாணராமனும் அதே தமிழகத்தில் கல்வி முதலான துறைகளில் தலித்துகள் மத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்துப் பேசுவதில்லை.
தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே பெரியார் சாதி குறித்த கேள்விகளை எழுப்பினார். சாதி ஒழிப்பு முயற்சி என்பது செங்குத்தான மலையில் கால்களுக்குப் பிடிமானம் இல்லாத நிலையில் ஏறுவதற்கு முயற்சி செய்வது போலத்தான் என்று விவரித்துள்ளார். தான் பெரிய சித்தாந்தங்களை முன்வைத்துவிட்டதாகப் பெரியார் என்றுமே சொல்லிக்கொண்டதில்லை. அதேசமயம், அம்பேத்கரின் மேதமையைப் பலமுறை வியந்திருக்கிறார். அவரைத் தன் தலைவர் என்றும் சொல்லியிருக்கிறார். சாதி ஒழிப்புக்கான தன் முனைப்புகளைப் பெரிய சாதனையாகவோ அல்லது சுலபமாக எட்டிவிடக்கூடிய இலக்காகவோ அவர் எப்போதுமே நினைத்ததில்லை. ஒற்றை முடியால் மலையைப் பிடித்து இழுப்பது போலத்தான் இந்த முயற்சி என்று கூறியுள்ளார். மேலும் செறிவான அறிவார்த்த அணுகுமுறையுடனும் திட்டவட்டமான செயல்களுடனும் அடுத்தடுத்த தலைமுறைகள் முன்னெடுக்க வேண்டிய பணி இது.
(புனித பாண்டியன்... எழுத்தாளர், இதழியலாளர். தலித் முரசு இதழின் ஆசிரியர்)
நன்றி: Thewire.in
சுருக்கமாகத் தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக