புதன், 18 அக்டோபர், 2017

போலீசுக்குதான் உண்மையான தீபாவளி ! சகல காவல் நிலையங்களுக்கும் எடப்பாடியின் லஞ்சம் ! கவர்கள் சென்றன!

ஊரெங்கும் வெடிச்சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “ஆளுங்கட்சியினர் விழுந்து விழுந்து கவனித்த காரணத்தால் காவல் துறையினருக்கு சந்தோஷ தீபாவளியாக இருக்கிறது. மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், ஒன்றிய செயலாளர்கள் மூலமாக ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் கவர்கள் போயிருக்கிறது. ஒன்றிய செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரையிலும் கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் 30 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையிலும் கொடுத்திருக்கிறார்கள். இத்துடன் சுவீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸும் கொடுத்தார்களாம். பெரும்பாலான காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட பணத்தை சரி சமமாக பங்கிட்டுக் கொண்டார்களாம். ஆனால், ஒரு சில காவல் நிலையங்களில் கொடுப்பட்ட பணத்தை பங்கு போடாமல் மொத்தமாக இன்ஸ்பெக்டர்களே எடுத்துக் கொண்டு நகர்ந்த கதையும் நடந்திருக்கிறது.
ஜெயலலிதா இருந்தவரையில் கட்சியில் உள்ள நிர்வாகிகளை தீபாவளி சமயத்தில் கவனித்த மாவட்டச் செயலாளர்கள், இந்த ஆண்டு காவல் நிலையத்துக்கு மட்டும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு கமுக்கமாக இருந்துவிட்டனர். அதுவும் கூட அவர்களாக கொடுக்கவில்லையாம். நேற்று காலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேசிய ஒருவரின் உத்தரவைத் தொடர்ந்தே இந்த பட்டுவாடா நடந்ததாக சொல்கிறார்கள்.
“ என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. லொக்கேஷன் சேலம் காட்டியது.
“கடந்த வாரம் சேலத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போது, வீட்டில் எதேச்சையாக ஜெயா டிவியில் செய்திகளைப் பார்த்தபடி இருந்திருக்கிறார். ஜெயா டிவி செய்தியில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியை டேமேஜ் செய்யும்படியாகவே போயிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு எதோ யோசித்தவராக, உடனே போனில் யாருடனோ பேசியிருக்கிறார். அதன் பிறகு சென்னைக்கும் கிளம்பிவிட்டார். இந்த சூழ்நிலையில், கடந்த 15-ம் தேதி சேலத்தில் உள்ள கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு ஒரு போன் வந்திருக்கிறது. ‘இனி சேலத்தில் ஜெயா டிவியோ அதனோட சப் சேனல்களோ கேபிளில் வரக் கூடாது. உடனே கட் பண்ணுங்க..’ என சென்னையில் இருந்து வந்திருக்கிறது உத்தரவு. உடனே சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவியின் குழும சேனல்கள் அத்தனையும் கேபிளில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. ’அதிமுக ஆட்சியில் ஜெயா டிவி கேபிளில் வரவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது’ என்று கேபிள் ஆப்ரேட்டர்களே சொல்லி சிரிக்கிறார்கள்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக