சனி, 28 அக்டோபர், 2017

தி.மு.க முன்னாள் எம்.பி செல்வகணபதியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

vikatan : மு.ஹரி காமராஜ் சேலம் மாவட்ட தி.மு.க-வில் வீரபாண்டி ராஜா மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய இரு கோஷ்டியின் பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக நேற்று இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதையொட்டி சேலத்தில் 27 வது வார்டு அரிசிப்பாளையத்தில் ராஜேந்திரன் தரப்பினர் தி.மு.க உறுப்பினர் படிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீரபாண்டி ராஜா ஆதரவாளரான செல்வகணபதி தரப்பினரும் உறுப்பினர் படிவம் சேர்த்துக்கொண்டிருக்கத் தொடங்கினர். இதனால் அங்கு மோதல் நிலை உருவானது. உச்சபட்சமாக இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். இதில் ராஜேந்திரன் தரப்பில் சுரேஷ், பிரகாஷ் என்பவர்களும் டி.எம்.செல்வகணபதி தரப்பில் வினோத்குமார், வரதன் ஆகியோருக்கும் கத்திக் குத்துப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது நேற்று நடந்து பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது வீரபாண்டி ராஜா அணியில் இருக்கும் முன்னாள் எம் பி செல்வகணபதி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலை மேற்கொண்டார்கள். குண்டு வெடிப்பில் செல்வகணபதி வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் எரிந்து சேதமடைந்துள்ளது. செய்தி அறிந்த சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர், இது குறித்து விசாரித்து வருகின்றனர். திமுகவின் உட்கட்சி மோதலே இந்த குண்டுவீச்சுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக