ஞாயிறு, 1 அக்டோபர், 2017

விஜயகாந்த் : நான்கு நாட்களில் ஆட்சி கவிழும் ( சுப்பிரமணியம் சாமி சொல்லிருப்பார்லே)

மின்னம்பலம்: காரைக்குடியில்  நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், ‘இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என்று தெரிவித்துள்ளார். நான்கு நாள்களில் ஆட்சி கவிழும்: விஜயகாந்த்தேமுதிக மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பி.எல்.பி. திருமண மண்டபத்தில் விஜயதசமி தினமான நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. எப்போதும் இல்லாத அளவுக்குச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. சீருடை அணிந்த தொண்டர்கள் நூறு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளே வருபவர்கள் பல சோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தீப்பெட்டி, பீடி, சிகரெட், குறிப்பாக செல்போன், கேமராவுக்கு உள்ளே அனுமதியில்லை. எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்துப் பொருள்களையும் கார்களிலும், பேருந்துகளிலும் பத்திரப்படுத்திவிட்டு காலை 9 மணியளவில் மண்டபத்துக்குள் சென்றனர்.

விஜயகாந்த் பொதுக்குழு மேடைக்கு வரும்போது மண்டபம் அதிரும் அளவில் வாழ்த்திக் கோஷமிட்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்குழுவைத் தொடங்கியவர்கள், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்கு ஒரு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
பொதுக்குழுவில் விஜயகாந்த் பேசுகையில், “மத்திய அரசு ஜி.எஸ்.டி, வரியை நாடு முழுவதும் கொண்டுவந்ததுபோல், நாடு முழுவதும் சமச்சீர் கல்வியைக் கொண்டுவர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாயவரத்தில் நீராடி பாவத்தைக் கழிப்பவர். அவர் கெலவரப்பள்ளி அணை நிரம்பிவரும் ஆற்றில் குளிக்க வேண்டியதுதானே. அவர் எந்த தண்ணீரில் குளித்தாலும் பாவம் போகாது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சி பணியைச் சிறப்பாக செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. தமிழ்நாட்டுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது. ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் பணத்துக்கானது. ஆனால், எனக்குக் கூடும் கூட்டம் அப்படியல்ல. விஜயதசமி அன்று ஆளுநர் வந்துள்ளார். இன்னும் நான்கு நாள்களுக்குள் அதிமுக ஆட்சி கலைந்துவிடும்” என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷுக்குத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்திராவுக்கு மற்றொரு துணைச் செயலாளர் பதவியும், மாநில பொருளாளர் பதவி தர்மபுரி டாக்டர் இளங்கோவனுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்போது புதிய பொருளாளர் இளங்கோவன் எழுந்து “அனைவருக்கும் பதவி பொறுப்பு கொடுக்கறீங்க. ஆனால், கஷ்டப்படும் அண்ணி ஒருவருக்கு மட்டும் பதவி கொடுக்க மாட்டங்கறீங்க” என்றபோது மண்டபமே அமைதியாகவிருந்தது. மேடையிலிருந்த பிரேமலதாவும், விஜயகாந்தும் மௌன சிரிப்பு சிரித்தார்கள்.
பொதுக்குழுவில் பிரேமலதாவின் பேச்சுதான் ஸ்டார் பேச்சாக இருந்தது. “நமது கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஜெயலலிதா மூஞ்சை உடைப்பதுபோல் நேருக்கு நேர் கேள்விகளைக் கேட்டார், இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். செயல்படாத கட்சிக்குச் செயல் தலைவராம். ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி கேட்பதில்லை; வாய் திறப்பதில்லை.
தமிழ்நாட்டுக்கு நிரந்தரமான கவர்னர் வேண்டும் என்று நாம் போட்டுள்ள தீர்மானம் டெல்லிக்குத் தெரிந்துதான், உடனடியாக நிரந்தரமான கவர்னரை அறிவித்துள்ளது மத்திய அரசு. எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிய போகிறது. கவர்னர் ஆட்சி வரப்போகிறது. அதனால்தான் நிரந்தரமான கவர்னரை நியமித்துள்ளார்கள். தற்போது 60 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதை நீங்கள் ஒரு கோடியாக உயர்த்த வேண்டும். வெற்றி நமதே. கேப்டனை பகைத்துக்கொண்டவர்கள் அரசியலில் காணாமல் போய் விடுவார்கள்” என்று பேசினார்
பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்களுக்கு புரட்டாசி சனிக்கிழமை என்பதால் மதிய உணவாக சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, காலிஃப்ளவர் பக்கோடா, ஸ்வீட் என்று தனித்தனி டப்பாவில் அடைக்கப்பட்டு, விஜயகாந்த் படம் பதித்த பையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக