ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பாஜக : எங்களுக்கு எப்போ வசதியோ வாய்ப்போ அப்போ அதிமுக ஆட்சியை கலைப்போம்! வீரமணி கடும் கண்டனம்!

tamilthehindu : அதிமுக ஆட்சி கவிழ்ந்தால், அதன் பயன் திமுகவுக்கே சாதகமாக ஆகிவிடும் என்பதால், அதற்கு இடந்தர மாட்டோம். எங்களுக்கு எப்போது வசதியோ, வாய்ப்போ அப்போது அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம். தேர்தலில் கூட்டு வைத்துக் கொள்வோம் என்று பாஜக தேசிய தலைவர் முரளிதர ராவ் கூறிய கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மோடி பிரதமரான பின்பும்கூட அவர் தொடர்ந்து பெற்ற தேர்தல் வெற்றிகளில்கூட, 2014-ல் அவரது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை!<0> 2014-ல் வேலை வாய்ப்புக்கும், மாற்றத்திற்கும் ஏங்கிய 18 வயது இளைஞர்கள், அப்போது மோடியின் தேன் தடவிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பினர்; வாக்களித்து இன்று ஏமாந்து கைபிசைந்து, கண் பிதுங்கி இருந்த வேலை வாய்ப்பினையும்கூட ஐ.டி. போன்ற துறைகளில் இழந்து வேதனைத் தீயில் வெந்து கருகுகின்றனர்!

நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்லாமல் தளர்ச்சியாகவும், நாளும் கீழிறக்கத்தை அடைந்து வருகிறது என்பதை, அக்கட்சியைச் சேர்ந்த வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மத்திய நிதியமைச்சராக அவரது அமைச்சரவையில் இருந்த யஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் 3 ஆண்டு பொருளாதார வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.
1. வேலை வாய்ப்பு இல்லை 2. ஏற்றுமதி குறைவு 3. தனியார் முதலீடு குறைவு 4. ஜி.டி.பி. வீழ்ச்சிபோன்றவைதான் மோடி ஆட்சியின் சாதனை என்று சுட்டிக்காட்டியுள்ளார்!
ஏற்கெனவே அருண்ஷோரி, அமர்த்தியா சென் போன்றவர்களும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் போன்றவர்களும், பிரபல லண்டன் பொருளாதார வார ஏடான தி எகானமிஸ்ட், ஜப்பான் டைம்ஸ், மற்ற அமெரிக்க நாளேடுகளும்கூட சுட்டிக்காட்டியுள்ளன!
தென்னாட்டில் பாஜக ஆளும் மாநிலம் எதுவுமே தற்போது இல்லை என்பதால், (ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு) எப்படியாவது கர்நாடகத்திலாவது வரும் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சி ஏற்பட சாம, பேத, தான, தண்ட முயற்சிகள் அனைத்தையும் கையாளுவதோடு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் ஆணைய நியமனம், உரிய நீர்ப் பங்கீடு போன்றவற்றிலும் மத்தியில் உள்ள மோடி அரசு கர்நாடகத்திற்கே சட்ட விரோத முறையில் உதவிடும் பகிரங்க அரசியல்தனத்தில் ஈடுபட்டு வருகிறது!
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுள்ள அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான முரளிதரராவ் நேற்று (29.9.2017) தி இந்து ஆங்கில ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறிய பதில்களில் சில கோடிட்டுக் காட்டப்பட்டால்தான், பாஜக - ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டில் கால் பதிக்க எப்படிப்பட்ட வியூகத்தினை வகுத்துச் செயல்பட்டு வருகின்றன என்பது எவருக்கும் விளக்கும்!
வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்தே நின்று (பாஜக) போட்டியிடுவார்களாம். ஏனெனில் அதன் செல்வாக்கை தமிழ் மண்ணில் பரவலாக்கிட பாஜக விரும்புகிறதாம். மத்திய அரசு பலம், பண பலம், பத்திரிகை பலத்தை நம்பி (மக்கள் பலத்தை அல்ல) இறங்கிடத் திட்டமிட்டுள்ளனர் போலும்!
அப்படியானால், வரும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் கூட்டணி வைத்துக் கொள்வதில் அரசியல் சிக்கல் ஏற்படாதா? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில் முரளிதரராவ் என்பவர் கூறுகிறார்:
அதெல்லாம் ஏற்படாது; சட்டமன்றத் தேர்தல் அண்மையில் வராது; 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை தற்போதைய அதிமுக அரசு தொடரவே நாங்கள் துணை நிற்போம்; காரணம், இதனை ஏதாவது செய்து அதிமுக ஆட்சி கவிழ்ந்தால், அதன் பயன் திமுகவுக்கே சாதகமாக ஆகிவிடும் என்பதால், அதற்கு இடந்தர மாட்டோம் என்று கூறியுள்ளார். எங்களுக்கு எப்போது வசதியோ, வாய்ப்போ அப்போது அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம்! தேர்தலில் கூட்டு வைத்துக் கொள்வோம் என்கிறார். தங்கள் ஆட்சியே மறைமுகமாக ஏதாவது ஒரு முகமூடி அணிந்த பாஜகவின் பொம்மலாட்ட ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
போடு தோப்புக் கரணம் என்று பாஜக அரசு சொல்வதற்குள், எண்ணிக் கொள்ளுங்கள் எத்தனை என்று காதைப் பிடித்து தோப்புக் கரணம் போடும் வசதியானதொரு ஆட்சி முன்பு எக்காலத்திலும் பாஜகவுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே கிடைக்கவில்லையே!
எனவே, இதன்மூலம் தமிழ்நாட்டுப் பிரதான எதிர்க்கட்சியாகிய திமுக அதன் தோழமைக் கட்சியினர், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள், அனைவரும் இணைந்து, வெறும் நீதிமன்றங்களையோ, ஆளுநர், குடியரசுத் தலைவர்களையோ நம்பிக் கொண்டிராமல், மக்களைத் திரட்டி, ஜனநாயகம் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்! என்ற ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தினை, அனைவரும் இணைந்து ஓரணியில், ஓர் குரலில் பட்டாங்கமாய் இறங்கி நடத்தினாலொழிய விடியலுக்கு வேறு வழியே இல்லை!
எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமுனைப்பட்டுத்திரண்டு, மக்களாட்சியின் மாண்பினைக் காத்து, தமிழ் மண்ணில் காவிச் சாயம் கரைந்தோடி கடலில் கலக்க ஆவன செய்ய முனைப்புடன் ஒன்றுபடட்டும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக