தமிழகத்தில் கிட்டத்தட்ட பத்து வருடமாக தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த 'நீயா நானா' என்ற விவாத நிகழ்ச்சி, சர்ச்சைக்குரிய தலைப்பு ஒன்றின் கீழ் ஒளிபரப்பாகவிருந்த அத்தியாயத்தை திடீரென நிறுத்தியுள்ளது. 'யார் அழகு? கேரளத்துப் பெண்களா அல்லது தமிழகப் பெண்களா' என்ற தலைப்பிலான அத்தியாயம் கடந்த ஞாயிறன்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருந்தது. இதன் முன்னோட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியானபோது பலர் இதனை கண்டித்தனர். பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் இது என பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் பல்வேறு புகார்கள் காவல்துறைக்கு சென்றது. பெண்ணிய அமைப்புகளும் இதனை விமர்சித்து புகார் தெரிவித்தன.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இந்த தலைப்பில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.< நீயா நானாவின் இந்த அத்தியாயம் நிறுத்தப்பட்டது குறித்து சிலர் வரவேற்பு தெரிவித்தனர்.
இது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல் ஆகாதா? ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை பார்ப்பதற்கு முன்னரே தடை செய்வது ஆபத்தான போக்கல்லவா என சிலர் விமர்சித்தனர். சர்ச்சைக்குரிய தலைப்பு குறித்தும், அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதன் நோக்கம், அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எவ்வாறு அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது தடை செய்யப்பட்டது என்பன குறித்தும் நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்.
''நீயா நானா பல தலைப்புகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இது ஒரு வாழ்வு முறை சார்ந்த நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் வாழ்வு முறை எப்படி ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறதோ அதைப் பொறுத்து துறை சார்ந்த நபர்கள் கலந்துகொள்ளக் கூடிய நிகழ்ச்சி. உதாரணமாக மருத்துவர்கள் பற்றிய தலைப்பு எனில் அது சார்ந்த நபர்களும், ஃபேஷன் பற்றிய தலைப்பு எனில் மாடலிங் செய்பவர்கள் போன்ற துறை சார்ந்த நபர்களும் பேசுவார்கள். அது போலவே இந்த நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது."
"எப்போதுமே நாங்கள் குடும்பத்துக்கான விஷயங்களை பேசியிருக்கிறோம். அதில் மாணவ மாணவிகள், கல்லூரிகள் சார்ந்த விஷயங்களும் அடக்கம். பருவ வயதினருக்கான நிகழ்ச்சி என்பது அவசியம். அதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். ஏனெனில் பதின்பருவ வயதினருக்கான புத்தகங்கள், நிகழ்ச்சிகள் தமிழில் இல்லை."
"தமிழில் கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகளுமே நாற்பது வயதை கடந்தவர்களுக்கானவையாக இருக்கின்றன. ஆனால் பருவவயதினர் தான் இங்கே அதிகம். அவர்களுடன் உரையாட வேண்டியது அவசியம். அவர்கள் அஜித், விஜய்யை பற்றிப் பேசுவார்கள்."
"ஆனால் அவர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் உலகத்தை அறிய வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். எனவே நீயா நானாவில் பருவ வயதினருக்கான விஷயங்கள் குறித்த பல்வேறு தலைப்பில் பலமுறை பேசியிருக்கிறோம்." என்கிறார் ஆண்டனி.
''நாங்கள் சமீபத்தில் கல்லூரிகளுக்கு செல்லும்போது குறிப்பாக 'ஜிமிக்கி கம்மல்' விஷயத்துக்கு பிறகு அழகு குறித்த ஒரு விவாதம் இருப்பதை கவனித்தோம். அவர்கள் உலகத்தை வெளியே காட்டவேண்டுமெனில் இப்படியொரு தலைப்பை வைத்துத்தான் ஆக வேண்டும். இது கல்லூரி கேம்பஸுக்கான ஒரு தலைப்பு. அவர்களுடைய உடை அழகு, நகை அழகு உட்பட புகைப்படத்திற்கான அழகாக அவர்கள் என்னவெல்லாம் கருதுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அவர்களின் உளவியலை பேசும் ஒரு தலைப்பு இது."
"இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு முன்னோட்டம் மட்டும் வெளியானது. அதில் அவர்கள் உடை அழகு குறித்து மட்டும் பேசியவை இடம் பெற்றிருந்தன. உடனே சில பெண்ணிய அமைப்புகள் அழகு குறித்து எப்படி பேசலாம் என்ற ஒற்றை வாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு புகார் தந்துள்ளனர். அந்தப் புகார் வைரல் ஆனது. அவர்கள் காவல்துறையிடம் சென்றதையடுத்து தடை செய்யப்பட்டது'' என கூறினார் ஆண்டனி.<>காவல்துறைதான் தடைக்கு காரணமா?
''காவல்துறையல்ல. பெண்ணிய அமைப்புகள் கொடுத்த புகார் காரணம். காவல் துறையினர் என்னிடம் பேசவில்லை. அவர்கள் சேனலின் சட்ட நிபுணர்களிடம் பேசி விஷயத்தைச் சொல்லி ஒளிபரப்பாவதை நிறுத்தியுள்ளனர். அவர்கள் எழுத்துப்பூர்வமாக தடை உத்தரவு கொடுத்தார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது".
"முதலில் ஒரு விஷயத்தைப் பற்றி பார்க்காமலே தடைகோருவதே இங்கே பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் சரி, பார்த்த பிறகு சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் பார்க்கவே இல்லை என்பதுதான் இங்கே நிலைமை. பெண்ணை ஒரு காட்சிப்பொருளாக்குகிறார்கள் என்ற ஒற்றை விவாதத்தை மட்டுமே அவர்கள் வைக்கிறார்கள்''
பரபரப்புக்காக மட்டுமே இந்த தலைப்பு வைக்கப்பட்டதா? என்ற கேள்வியை ஆன்டனியிடம் வைத்தோம்.
ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் முக்கியம். தலைப்பு என்பது நிராகரிக்கப்பட வேண்டியதாகவும் அமையலாம், நல்ல தலைப்பாகவும் அமையலாம். நாம் உள்ளடக்கத்தை கவனிக்க வேண்டும். தலைப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுவது அல்ல. ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்து மக்களுக்கு கருத்து இருக்கும். அந்த உள்ளடக்கம் பாதை மாறினால்தான் பிரச்னை. இதையே நீங்கள் எங்கள் நிகழ்ச்சியிலும் அணுக வேண்டும். இதுவரை பெண்களுக்கு எதிராக ஏதாவது தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா என ஆன்டனி கேள்வி எழுப்புகிறார்.
"கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிறைய தலைப்புகள் உண்டு. அழகைப் பற்றி தத்துவார்த்த ரீதியாக பேச முடியாதா? எப்போதுமே ஒரு தலைப்பில் விவாதிக்கும்போது மெல்லிய வகையில் கையாண்டு அதை வேறொரு வகையில் 'நீயா நானா' பேச விரும்புகிறது. அவ்வளவே” என்று கூறுகிறார் ஆண்டனி.
"இந்த தடைக்கு காரணம் இடதுசாரி உயரடுக்கு பெண்ணியவாதிகள். அவர்கள் நோக்கம் குறித்து என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் அவர்கள் குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறார்களோ... அடுத்த கட்டத்துக்கு நகரவில்லையோ என தோன்றுகிறது அதாவது ஒரே கண்ணோட்டத்துடன் மட்டுமே பெண் சார்ந்த விஷயங்களை அணுகிறார்களோ என தோன்றுகிறது" என்றார் அவர்.
இந்த தடை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
''எப்போதுமே தடை எல்லா அமைப்புகளாலும் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. ஆனால் இதுவும் கடந்துதான் போகும். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட வலது சாரி, இடது சாரி என எல்லா அமைப்புகளும் ஒருவித தடையை கோரிக்கொண்டேதான் இருக்கும். அதைத்தாண்டித் தான் இயங்க வேண்டும். சில இடங்களில் தடை கோருவதில் நீதி இருக்கலாம், சிலவற்றில் இல்லாமல் இருக்கலாம். தடையே இல்லாத உலகத்தை நான் பார்க்கவில்லை. எனவே சமாளித்துதான் இயங்கவேண்டும். அதுதான் உலக எதார்த்தம்''.
''எனக்கு இந்த விஷயத்தில் தடை கோரியது வேடிக்கையாக இருந்தது. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவெனில் எந்த அமைப்பு கருத்து சுதந்திரம் பற்றி பேசியதோ அதே அமைப்பு நிகழ்ச்சியை பார்க்காமலே இப்போது தடை கோரியது. முன்னோட்டத்தில் கூட என்ன தவறு கண்டார்கள் என புரியவில்லை. உடை அழகு பற்றி பேசுவது தவறா?''
''இளைஞர்களை பற்றிப் புரிந்து கொள்ள அவர்களது உலகத்துக்குச் செல்ல வேண்டும். அவர்களை மதித்துதான் அவர்களது உலகத்துக்குள் செல்ல முடியும். புரிந்துதான் ஆக வேண்டும். அவர்களது எண்ணத்துக்கான காரணத்தை கண்டுபிடித்தால் மட்டுமே ஆரோக்கியமான விஷயங்களை அவர்களுக்குள் விதைக்க முடியும்'' என அவர் தரப்பு விளக்கம் தந்தார் ஆண்டனி . <> நீயா நானாவின் சர்ச்சைக்குரிய இந்த அத்தியாயத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டத்திலிருந்து தொடர்ந்து விமர்சித்துவந்த பத்திரிகையாளர் இந்துஜா ரகுநாதன் பிபிசி தமிழிடம் பேசினார்.
'' கேரள பெண்கள் அழகா அல்லது தமிழகப் பெண்கள் அழகா' என்ற தலைப்பானது பெண்களை காட்சிப்பொருளாக்குவதன் உச்சம் என சமூகவலைதளங்களில் முன்னோட்ட காணொளி வெளியான போதே கண்டித்து டிவீட் செய்தேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தனியார் சேனல் தொடர்ந்து இதே தலைப்பில் சமூகவலைதளத்தில் ஓட்டெடுப்பையும் நடத்தியது.
"நெட்வொர்க் ஆஃப் வுமன் இன் மீடியா, இந்தியா (NWMI) எனும் அமைப்பின் சென்னையிலுள்ள பெண்கள் ஊடகவியலாளர்கள் சார்பாக இது குறித்து அந்நிகழ்ச்சியை நடத்தும் துணை இயக்குனரிடம் பேசினோம்.
மேலும் தொடர்ந்தவர் ''சனிக்கிழமை இரவு முன்னோட்ட காணொளியையும் வாக்கெடுப்பையும் நிறுத்திவிட்டார்கள். அந்நிகழ்ச்சியும் நிறுத்தப்படும் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து முறையான பதில் வரட்டும் என காத்திருந்தோம். ஆனால் சேனல் நிர்வாகத்திடம் இருந்து முறையான அறிக்கை ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மறுநாள்தான் எங்களுக்கு பல அமைப்புகளிடம் இருந்தும் காவல்துறைக்கு புகார் சென்றதும் அதையடுத்து நிகழ்ச்சி ஒளிபரப்பானது தடுத்து நிறுத்தப்பட்டதும் தெரியும். எந்த காரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என சேனல் நிர்வாகம் அறிக்கை ஏதும் தரவில்லை.
ஆனால் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “இடதுசாரி பெண்ணியவாதிகள்'' இந்தத் தடைக்கு காரணம் என ஒரு விமர்சனம் வைத்திருந்தார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக