சனி, 21 அக்டோபர், 2017

அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து 8 பஸ் ஊழியர் நசுங்கி பலி: நாகை பொறையாரில் அதிகாலை

தினகரன் :தரங்கம்பாடி: நாகை மாவட்டம் பொறையாரில் அரசு பஸ் பணிமனை கட்டிடம் இடிந்து டிரைவர், கண்டக்டர் 8 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக அமைச்சர், கலெக்டரை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நாகை மாவட்டம் பொறையாரில் சத்திவிலாஸ் என்ற பெயரில் ஒரு தனியார் பஸ் கம்பெனி இயங்கி வந்தது. அந்த பஸ் கம்பெனிக்காக 1943ல் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் பேருந்துகள் அரசுடமையாக்கபட்டபோது சத்தி விலாஸ் பஸ்களும் அரசுடைமை ஆக்கப்பட்டது. அதை தொடர்ந்து பஸ் கம்பெனி இயங்கி வந்த இடமும், கட்டிடமும் அரசு கையகப்படுத்தியது. அதை தொடர்ந்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளை அலுவலக பணிமனை (டெப்போ) அந்த இடத்தில் இயங்கி வருகிறது.  இங்கிருந்து 28 வழி தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதில் 6 வழித்தடங்களில் நகர பேருந்துகளும், 22 வழித்தடங்களில் நாகை, வேளாங்கண்ணி, சிதம்பரம், சென்னை உள்ளிட்ட மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. டெப்போவில் 160 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு பஸ் டிரைவர், கண்டக்டரும் மதியம் பணிக்கு வந்து, மறுநாள் மதியம் வரை பஸ் இயக்குவார்கள். இரவு நேரத்தில் பணிமனையில் படுத்து கொள்வார்கள். தினமும் 30 பேர் இரவில் தங்குவார்கள்.

நேற்று முன்தினம் இரவு டிரைவர், கண்டக்டர்கள் 25 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் முதல்தளத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து, படுத்திருந்த தொழிலாளர்களுடன் கீழே விழுந்தது. கட்டிடம் இடிந்த உடன் கண்விழித்த டிரைவர், கண்டக்டர்கள் அய்யோ, அம்மா என்று மரண ஓலமிட்டனர். அவர்கள் அபாயக்குரல் கேட்டு மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொக்லைன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 8 ேபர் சடலமாக மீட்டனர்.  மேலும் 3 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இறந்த 8 பேரில் டிரைவர்களான பெரம்பூரை சேர்ந்த முனியப்பன் (42), காளஹஸ்திநாதபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (54), பாலு (52), திருக்குவளை மனக்குடியை சேர்ந்த அன்பரசன் (25), கிடங்களை சேர்ந்த மணிவன்னண்(53), பொறையாரை சேர்ந்த தனபால்(52) மற்றும் கண்டக்டர் ராமலிங்கம்(57), டிரைவர் சந்திரசேகர் (48)ஆகியோர் என்று அடையாளம் தெரிந்தது.

மேலும் கண்டக்டர்கள் வெங்கடேசன்(42), செந்தில் (37), டிரைவர் பிரேம்குமார் (40) ஆகியோர் பலத்த காயங்களுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு நாகை கலெக்டர் சதீஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் பூம்புகார் பவுன்ராஜ், மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர். தகவல் அறிந்து தொழிலாளர்களும், பொதுமக்களும் டெப்போவை முற்றுகையிட்டனர். சம்பந்தபட்ட அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கு பதில் சொல்லிவிட்டுதான் கலெக்டர் செல்ல வேண்டும் என்று கலெக்டரை வெளியே விட மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர். கலெக்டரின் கார், டெப்போவில் இருந்து வெளியே வந்த போது காரை வழிமறித்து அதை வெளியே செல்ல முடியாமல் கேட்டை மூடினர். ஆனால் காரில் கலெக்டர் இல்லை என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து கலெக்டர் காரை வெளியே விட்டனர். கலெக்டர், எம்.எல்.ஏ. பவுன்ராஜ் காரில் முன்கூட்டியே சென்று விட்டது தெரியவந்தது. ஆனால் பொதுமக்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அந்தநேரத்தில், அமைச்சர் ஓஎஸ் மணியன் வந்தார். அப்போது, பொதுமக்கள் ஆக்ரோஷமாக கோஷமிடுவதை கண்டதும், ரோட்டில் இருந்தே பார்த்து விட்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இறந்தவர்களின் உடல்களை பார்த்து புறப்பட்டுவிட்டார்.

அதைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசி மூலம்  தொமுச பொதுசெயலாளர் சண்முகத்திடம் பேசினார். முதலமைச்சர் நிவாரணம்  அறிவித்துள்ளார். மற்ற விஷயங்களை நேரில் பேசி தீர்வு காணலாம் என்று  கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திலும், மருத்துவனையிலும் போராட்டம் கைவிடப்பட்டு இறந்தவர்கள் உடல்கள் அவர்களது  வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டது.  மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், தஞ்சை எஸ்.பி.  செந்தில்குமார், திருவாரூர் எஸ்பி. மயில்வாகனன் (பொறுப்பு), டி.எஸ்பிக்கள்  சேகர் வெங்கடேசன், உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

இடம் மாறி படுத்ததால் உயிர் தப்பியவர் பேட்டி: அரசு போக்குவரத்து கழகம் இடிந்து விழுந்தபோது அதே தளத்தில் மற்றொரு பகுதியில் படுத்திருந்த டிரைவர் மாதவன் கூறும்போது, `நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் படுத்திருந்தோம். இடிந்த பகுதியில் 11 பேரும், பக்கத்தில் உள்ள பகுதியில் 10 பேரும் படுத்திருந்தோம்.  அதிகாலை 3.15 மணியளவில் மடமட வென சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலும் கேட்டது. கீழே ஓடி வந்து பார்த்தோம். இடிபாடுகளில் சிக்கி தவித்து கொண்டிருந்தார்கள். நானும் அங்கே படுத்திருக்க வேண்டியவன்தான் அங்கே படுக்க இடம் இல்லாததால் தள்ளி வந்து படுத்தேன்’ என்று கூறினார்.

அரசின் அலட்சியம்: சம்பவ இடத்திற்கு வந்த தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், நிருபர்களிடம் கூறுகையில், `இந்த அரசு மக்களை பற்றியோ தொழிலாளர்களை பற்றியோ கவலைப்படாத அரசு. இந்த அரசு மக்களை அலட்சியப்படுத்தி வருவதற்கு இந்த 8 பேர் இறப்பே உதாரணமாகும். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 375 டெப்போக்களிலும் சீர் செய்ய வேண்டும் என்று பல முறை தொமுச சார்பில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். அதை எல்லாம் இந்த அரசு அலட்சியப்படுத்தி விட்டது. அப்படி அலட்சியபடுத்தியதன் காரணமாகத்தான் இந்த  சம்பவம் நடந்துள்ளது’ என்றார்.

துண்டு போட்டு இடம்பிடித்தவர்கள்: பஸ் கண்டக்டராக உள்ள பாஸ்கரன் கூறும்போது, `இடிந்து விழுந்த இடத்தில்தான் பெரிய மின்விசிறி உள்ளது. அந்த இடத்தில் படுப்பதற்கு போட்டா போட்டி இருக்கும். துண்டு போட்டு இடம் பிடிப்பார்கள். நேற்று நான் அந்த இடத்தில் படுக்கவில்லை. அங்கு படுக்கும்போது ்சம்பவம் நடந்திருந்தால் நானும் பலியாகி இருப்பேன்’ என்று கூறினார்.

நிவாரண உதவி: சம்பவ இடத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் சென்று, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரண நிதி வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக