வெள்ளி, 6 அக்டோபர், 2017

தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது... 2 நாட்கள் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தினத்தந்தி : தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.
சென்னை, நாடு முழுவதும் 9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்(தென் மண்டலம்) துணை தலைவர் பி.வி.சுப்பிரமணி, சென்னை சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் பி.கே.அகர்வால் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ஜி.எஸ்.டி. வரி, டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் ஆகியவற்றால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள 327 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். மத்திய அரசுக்கு இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் இயங்காது. தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். (2 நாளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி).

வேலைநிறுத்த போராட்டத்துக்கு பிறகு மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக