திங்கள், 30 அக்டோபர், 2017

சென்னையில் 2 ரூபாய் வைத்தியர் ... திருவேங்கடம் வீரராகவன் MBBS,

மின்னம்பலம்: வடசென்னையைச் சேர்ந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மக்களுக்கு இரண்டு ரூபாய்க்குச் சிகிச்சை அளித்துவருகிறார்.
1973ஆம் ஆண்டு திருவேங்கடம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்தார். இதையடுத்து, ஏழை மக்கள் அதிகளவில் வசித்துவரும் வியாசர்பாடியில் உள்ள மக்களுக்கு இரண்டு ரூபாய்க்குச் சிகிச்சை பார்த்து வருகிறார். இவ்வாறு, கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார்.
ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சை பார்த்து வந்தார். பின்னர், ஐந்து ரூபாய் வாங்கினர். தற்போது மீண்டும் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கு அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு குறைந்தது 100 ரூபாய் வாங்க வேண்டும் என இவரை வலியுறுத்தினர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், அதற்கு மருத்துவர் திருவேங்கடம் ஒத்துப்போகவில்லை.

இதுகுறித்து மருத்துவர் திருவேங்கடம் கூறுகையில், “எந்த கட்டணமும் இல்லாமல் நான் படித்தேன். அதற்கு நான் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அதனால், என்னைத் தேடி வரும் நோயாளிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதில்லை. 2015ஆம் ஆண்டில் பெய்த மழைக்குப் பின்னர் வியாசர்பாடியில் இருந்து வெளியேறினேன். ஆனால், அங்குள்ள கிளினிக்கில் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வருகிறேன். வியாசர்பாடி குடிசைப் பகுதி மக்களுக்கு என்று ஒரு மருத்துவமனை கட்டி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே என் கனவு. தினமும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை எருக்கஞ்சேரியில் உள்ள கிளினிக் மற்றும் வியாசர்பாடியில் அசோக் பில்லர் அருகில் இருக்கும் கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வருகிறேன்.
எனது மனைவி ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். எனது மகன் தீபக் மற்றும் மகள் ப்ரீத்தி மொரீஷியஸில் மருத்துவம் படித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு மருத்துவமனை கட்ட உதவியாக இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இவருடன் படித்த மற்றவர்கள் வெளிநாட்டில் மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக