புதன், 4 அக்டோபர், 2017

தகுதி நீக்க வழக்கு: என்ன நடக்கும் இன்று? தினகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர்களின்

மின்னம்பலம் : அக்டோபர் 4 ஆம் தேதியான இன்றைய நாளினை ஜனநாயக தேவதையும், நீதி தேவதையும் ஒரு சேர எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களோடு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்ற திசை நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரையும், ‘ஆளுனரை சந்தித்தார்கள்’ என்ற காரணம் காட்டி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இதற்கு முன்னரே... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவர் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.கஸ்டாலின்.
இந்த வழக்கினிடையே அப்போது சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு வாதிட்டார். அதன் பின்னர் வெற்றிவேல் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட... அவர்கள் தொடுத்த வழக்கும், ஏற்கனவே ஸ்டாலின் தொடுத்த வழக்கும் இணை கோடுகள் போல சென்றுகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி துரைசாமி, அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அதுவரை 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இதேபோல ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் ஏற்கனவே விசாரித்த நீதிபதி துரைசாமிக்கு பதிலாக நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரிக்க இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நீதிபதி மட்டுமல்ல, இந்த வழக்கில் வாதாடப் போகும் வழக்கறிஞர்களும் மாறியிருக்கிறார்கள்.

அன்று தினகரன் தரப்புக்காக வாதாட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். இன்று தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக தவேக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகிறார். இவர் தவே விட இதுபோன்ற அரசியல் சட்ட வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இதேபோல மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞராக ஏற்கனவே வாதாடிய கபில் சிபலுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் சரண் வாதிடுகிறார். சரண் ஏற்கனவே இதே வழக்குக்காக கபில் சிபலுடன் வந்தவர்தான். இவர் இந்த வழக்கினை ஒத்த அரசியல் சட்ட வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர். உச்சநீதிமன்றத்தில் இதுபோன்று நடந்த 12 அரசியல் சட்ட வழக்குகளில் 9-ல் ஆஜரானவர் சரண். அந்த அனுபவத்தோடு இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக ஆஜர் ஆகிறார்.
அரசுத் தரப்பில் அரிமா சுந்தரம், சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களோடு மூத்த வழக்கறிஞர் திரிபாதியும் இன்று இணைகிறார்.
இன்று காலை 11.30-க்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக வாதாட வரும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக சபாநாயகரின் நடவடிக்கை சட்ட ரீதியாக தவறானது என்பதை நிறுவ மூன்று மணி நேரம் வாதம் செய்யத் தயாராக இருக்கிறாராம். நீதிபதி மாறிய நிலையில் புதிய நீதிபதியின் முதல் அமர்வில், அவருக்கு இவ்வளவு நேரம் கொடுக்கப்படுமா என்பதும் எதிர்பார்ப்புக்கு உரியதாகியிருக்கிறது.
இப்படி சட்ட ஜாம்பவான்கள் மோதும் இந்த வழக்கில் செப்டம்பர் 20 போலவே இன்றும் விசாரணையைக் காண அதிக வழக்கறிஞர்களும், பொதுமக்களும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லுமா செல்லாதா என்ற கேள்விக்கு விடை இன்றே கிடைக்குமா... அல்லது சஸ்பென்ஸ் தொடருமா என்பது இன்று பகலில் தெரிந்துவிடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக