செவ்வாய், 3 அக்டோபர், 2017

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

dailythanthi :சென்னை, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால், நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குனர் டாக்டர் ப.உமாநாத், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் பாஸ்கரன்,
பேரூராட்சிகள் துறை இயக்குனர் பழனிசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனர் டாக்டர் பானு, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் (இ.எஸ்.ஐ.) துறை இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்குவது குறித்தும், டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமாக விளங்கும், நல்ல தண்ணீரில் உருவாகும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களை ஒழிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நல்வாழ்வுத்துறையை பொறுத்தமட்டில் எந்த நிலையில் நோயாளி வந்தாலும் கூட, 100 சதவீதம் உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த 24 மணி நேர காய்ச்சல் பிரிவுகள் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் விரிவுபடுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். 40 நொடிகளில் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் 837 செல் கவுண்ட்டர்கள் தமிழகம் முழுவதும் அமைத்துக்கொண்டு இருக்கிறோம். அதன்படி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளியின் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறித்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கண்டுபிடிக்க முடியும். இந்த சேவையை இன்னும் விரிவுபடுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் அதாவது குறும்படங்கள் எடுத்து தியேட்டர்கள், டி.வி.க்களில் ஒளிபரப்பி ‘டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பகலில் தான் கடிக்கும், நல்ல தண்ணீரில் தான் உருவாகிறது, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’ என்பனவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி மற்றும் கிராமங்கள்தோறும் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கையை விரிவுபடுத்த வேண்டும். நீரில் குளோரின் கலப்பு உள்ளிட்ட அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தவும், அப்பணிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

நிலவேம்பு குடிநீரை பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ்-ரெயில் நிலையங்கள், பூங்காக்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் கட்டணமில்லாமல் வழங்க அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நாளை (இன்று) காலை 8.30 மணியளவில் சென்னை மாநகராட்சி முழுக்க நிலவேம்பு குடிநீர் கொடுக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு? பல ஆஸ்பத்திரிகளில் மர்ம காய்ச்சல் என்று கூறி இந்த விவகாரத்தை திசை திருப்புவதாக கூறப்படுகிறதே?.

பதில்:- அரசு ஆஸ்பத்திரிகளில் மர்ம காய்ச்சல் என்பதை நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. 29 வகையான வைரஸ் காய்ச்சல்கள் உள்ளன. இதில் நோயாளியை தாக்கியது எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது.

23 பேர் உயிர் இழந்து உள்ளனர் என்பதை ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் கூறி இருக்கிறார். சரியான நேரத்துக்கு சிகிச்சை எடுக்காமல் போகும்போது அல்லது உரிய நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வராதது போன்றவற்றால்தான் ‘டெங்கு’ நோய் தாக்குதல் முற்றுகிறது. எனவே காய்ச்சல் பாதிப்பு இருந்தாலே அரசு ஆஸ்பத்திரிக்கு வர சொல்லுகிறோம். டெங்கு காய்ச்சல் என்றாலே தொடர்ந்து 5 நாட்கள் டாக்டர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். சரியான நடவடிக்கை மூலம் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக