செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இளையராஜா Karaoke smule அப்பிளிகேசனுக்கு எதிராக கோரிக்கை!

மின்னம்பலம் :தனது பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், கரோக்கி(Karaoke ) அப்ளிகேஷனான ஸ்மூலின் டேட்டா பேஸிலிருந்து தன் பாடல்களை நீக்கக் கோரியும் இளையராஜா சார்பாக ஸ்மூல் ஆப் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதே போன்று ராஜாவுடைய பாடலை பயன்படுத்திய 15 மியூசிக் ஆப் டெவலப்பர்ஸ் மற்றும் பாடல்களுக்காக கட்டணம் வசூலிக்கும் இணையதள நிறுவனங்களுக்கும் காப்பிரைட் விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இளையராஜாவின் பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று கடந்த மார்ச் மாதம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது நினைவிருந்தால், தற்போது ஸ்மூலுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து ஆச்சர்யம் ஏற்படாது.

ஸ்மூலில் சில பாடல்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்தப் பாடல்களை ஒரிஜினல் பாடல்களோடு ஒப்பிட்டுப் பாடிப் பலரும் தங்களுடைய திறமையை வெளிக்காட்டிவந்தனர். தாங்கள் பாடுவதைக் காணொளிப் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பிறருடன் பகிர்ந்துவந்தனர். ஆனால் இந்த ஆப்பில் அன்லிமிட்டடாக சோலோ, டூயட் மற்றும் குரூப் என்று பாட மாதம் 110 ரூபாயும், வருடத்துக்கு 1100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆப் தங்களுக்குப் பிடித்தமான பாடல்களைச் சொந்தக் குரலில் பாட உதவியதால் இசை ரசிகர்களிடையே பிரபலமானது. இந்நிலையில் தனது பாடல்களை நீக்ககும்படி இளையராஜா கோரியிருப்பது ஸ்மூல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவின் காப்பீட்டு உரிமை சட்ட ஆலோசகர் இ.பிரதீப்குமார் இதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார். "அனுமதி இல்லாமல் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக உரிய விளக்கம் கேட்டு மியூசிக் ஆப் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. ரசிகர்களின் மகிழ்ச்சியில் இடையூறாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. ஆனால் சில நிறுவனங்கள் எந்தவித ஒப்புதலும் வாங்காமல் இளையராஜா அவர்களின் பாடலை வணிகரீதியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த 35 ஆண்டுகளாகக் கடினமான உழைப்பால் இசைத் துறையில் இன்று உயர்ந்து நிற்கும் ஒருவரின் அனுமதி இல்லாமல் அவருடைய பாடல்களை வியாபாரம் செய்வது குற்றமாகும்" என்று கூறியுள்ளார்.
நேற்று முதல் ஸ்மூல் ஆப்பில் பல இளையராஜா பாடல்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. காப்புரிமை காரணமாக இந்தப் பாடல்களைப் பயன்படுத்த இயலாது என ஸ்மூல் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“ராஜாவின் பாடல்களை இலவசமாக வழங்க எந்தத் தடையும் இல்லை. பல இணையதளங்களில் அவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. ஆனால் ராஜாவின் பாடல்களை வைத்துப் பணம் சம்பாதிக்கும்போது அதற்கு முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். இது அனைவருக்குமான காப்புரிமை பிரச்சினை என்று பிரதீப் குமார் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக