சனி, 16 செப்டம்பர், 2017

GST - ஹிட்லரின் ‘ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவன்’ பாணியில் ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி

மின்னம்பலம் : 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா ஜி.எஸ்.டி. வரித் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஜி.எஸ்.டி என்பது புதிய வரி அல்ல. அது ஒரு புதிய வரி விதிப்பு முறை. இதுவரையில் செயல்பாட்டிலிருந்த விற்பனை வரி போன்ற பல வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரியாக வசூலிக்கும் திட்டம். குறிப்பாக நாடு முழுவதும் ஒரேவிதமான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் திட்டமாகும். இந்தக் குறிப்பிடத்தக்க வரிவிதிப்பு முறையைப் புரிந்துகொள்ள இந்திய அரசியலமைப்பைப் பற்றி நாம் நினைவுகூர்வது அவசியமாகும்.
இந்திய ஒன்றியம்:
இந்தியா என்பது ஓர் ஒன்றியமாகும். இந்திய நிலப்பரப்பு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் ஓர் அரசால் ஆளப்படுகிறது. இந்தியா முழுமையையும் ஆட்சி செய்ய ஒன்றிய அரசு உருவாக்கப்பட்டது. ஏன் ஒரே அரசாக ஏற்படுத்தப்படவில்லை? இந்திய பரப்பு ஒன்றாக இருந்தபோதிலும், அதன் பல பகுதிகள் பல அடையாளங்களைப் பெற்றிருந்தன.
வெவ்வேறு மொழி, வரலாறு, கலாசாரம் என அதன் பன்முகத்தன்மை மிகப் பெரியது. இந்த பன்முகத்தன்மையை அழித்தொழித்து ஒரே மொழி என்றோ அல்லது ஒரே நாடு என்ற அடையாளத்தையோ ஏற்றுக்கொள்ள பல மாநில மக்களும் முன்வராததே இந்தக் கூட்டாட்சிக்கு வழி வகுத்தது. இந்திய அரசியலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என விவாதித்து, பின்னர் எடுக்கப்பட்ட முடிவே இந்திய ஒன்றியம் என்ற அமைப்பு முறையாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசியல் அதிகாரத்தை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்து கொண்டன. பொதுவான நிலச் சட்ட உரிமைகள் இரு அரசுகளிடமும் இணைந்து இருந்தன/இருக்கின்றன. இப்படி சட்ட/அதிகார உரிமையைப் பிரித்துக்கொண்டது போலவே வரி விதிக்கும் உரிமையையும் ஒன்றிய மாநில அரசுகள் பகிர்ந்து பிரித்துக்கொண்டன. மாநில அரசுகள் வசூலிக்கும் வரியைத் தங்கள் செலவுகளுக்காக அவை வைத்துக்கொண்டன. ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியால் அதன் செலவு போக மீதமுள்ள பகுதியை மாநில அரசுகளுக்கு பிரித்தளிக்கவும் சட்டத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. எந்த அடிப்படையில் எவ்வளவு பிரித்தளிப்பது என்பதை தீர்மானிக்க நீதிக்குழுக்கள் சட்டரீதியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிர்ந்தளிக்கும் முறையை மாற்றியமைக்கின்றன. நாடு தழுவிய அளவில் வசூலிக்கப்பட வேண்டிய வரிகளை ஒன்றிய அரசும், ஆங்காங்கே வசூலிக்கப்பட வேண்டிய வரிகளை மாநில அரசுகளும் இதுவரை வசூலித்து வந்தன. இதன் விளைவாக ஒரே பொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக பெட்ரோல்மீது தமிழகம் 25 விழுக்காடு விற்பனை வரி வசூலித்தது. இதன் விளைவாக பெட்ரோலின் விலை தமிழகத்தைவிட புதுவையில் குறைவாகக் காணப்பட்டது.
இந்த வரி விதிக்கும் உரிமை காரணமாக தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் வரிக் கொள்கையை பின்பற்றின. ஒரு பொருளைத் தயாரிக்க பல இடுபொருள்கள் தேவைப்படும் நிலையில் அவை ஒவ்வொன்றுக்கும் வரி செலுத்தியபின் தயாரான பொருளுக்கும் வரிச் செலுத்த வேண்டியிருந்ததால் வரிக்கே வரி செலுத்தும் நிலையும் இருந்தது. இதைக் களையும் பொருட்டு வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக வரிக்கு வரி செலுத்துவது தவிர்க்கப்பட்டது.
மேலும், ஓர் உற்பத்தியாளரோ அல்லது வியாபாரியோ பல மாநிலங்களில் தொழில் செய்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் வரிக் கொள்கைக்கு ஏற்ப வரிச் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தினார்களா என்பதை கண்காணிக்கவும் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கவும் மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை மாநில அரசுகள் வைத்திருந்தன. இந்த சோதனைகளை முடித்துக் கடந்து செல்வதற்குக் காலம் தேவைப்பட்டது மட்டுமன்றி, லஞ்சம் கொடுத்தும் செல்ல வேண்டிய இடங்களாகத் திகழ்ந்தன. தடையற்ற விரைவான வர்த்தகம் என்பதற்கு இவை பெரும் இடையூறாகத் திகழ்ந்தன.
ஜி.எஸ்.டி. என்பது இவை அனைத்துக்குமான தீர்வை முன்வைத்தது. ஏற்கெனவே செயல்பாட்டிலிருந்த அனைத்து மறைமுக வரிகளையும் ஒன்றாக்கியது ஜி.எஸ்.டி. மேலும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரி விகிதம் என்பதை களைந்து அனைத்துப் பொருள்களும் 4 வரி விகிதங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாமானியர்கள் தங்கள் அன்றாடத் தேவைக்காக பயன்படுத்தும் பல பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினுள் இன்னும் கொண்டுவரப்படாமல் இருப்பவை மது, பெட்ரோல் போன்ற சில பொருள்கள் மட்டுமே.
ஜி.எஸ்.டி. வரி முறையைச் செயல்படுத்த அரசியலமைப்பு ரீதியாக மிக முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது மாநிலங்கள் தங்கள் வரி விதிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்ததாகும். இனி எந்த மாநில அரசும் தனது வரி விதிக்கும் உரிமையைப் பயன்படுத்த இயலாது. இதற்கான முழு அதிகாரமும் ஜி.எஸ்.டி. கவுன்சில் என்ற அமைப்புக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. இக்கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் உறுப்பினர்கள். இக்குழுதான் இனி இந்த வரி விதிப்பு முறையைத் தீர்மானிக்கும். இக்குழுவின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சர் திகழ்கிறார். எந்த முடிவையும் தடுத்தாளும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆக, மாநில நிதியமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் விட்டுக்கொடுத்துதான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதற்கும் ஒரேவிதமான வரி விதிப்பு முறை என்பதற்காக அரசியல் உரிமையை விட்டுக்கொடுத்த விந்தையும் அரங்கேறியது.
இவ்வாறு மாநில அரசுகள் உரிமையை விட்டுக்கொடுத்து அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டியால் யாருக்கு நன்மை?
நாட்டிலுள்ள பெருமுதலாளிகளும், பெரு வணிகர்களும் இவர்களின் நலன்களைக் காத்து நிற்கும் வணிகப் பத்திரிகைகளும் (இவை பெரும்பாலும் பெருமுதலாளிகளால் நடத்தப்படுபவையாகும்) இந்தப் புதிய வரிவிதிப்பு முறையைப் பாராட்டி வரவேற்றுள்ளன. புதிய இந்தியா பிறந்துள்ளதாகவும் புதிய கூட்டாட்சி மலர்ந்ததாகவும் இவர்கள் பாராட்டுகிறார்கள். இத்தகைய பாராட்டுகளுக்குக் காரணம், இந்த வரி விதிப்பு முறையால் பயன்மிகப் பெறப்போவது அவர்களே. முதலில் நாடு முழுவதற்குமான ஒரே சந்தை அவர்களது நீண்ட நாள் கனவு. அது நிறைவேறியுள்ளது. இரண்டாவதாக, இவர்களுக்குப் போட்டியாக ஆங்காங்கே அமைப்பு சாரா தொழில்முனைவோர்கள் பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வந்தார்கள். இந்தப் புதிய வரி விதிப்பு முறையினால் இத்தகைய சிறு உற்பத்தியாளர்கள் நசுக்கப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதன் விளைவாக பெருமுதலாளிகளின் சந்தை விரிவடையும்; லாபமும் பெருகும் என்பது அவர்கள் கணிப்பு. இவர்கள் கணிப்பு மெய்யானால் அமைப்பு சாரா தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கானவர்களின் வாழ்வு பறிபோகும். ஏற்கெனவே செல்லாத நோட்டு அறிவிப்பால் அவர்கள் இன்னும் முழுமையாக மீளாத சூழலில் அவர்களுக்கு இந்த அடி கிடைத்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி அமைப்பு என்பது ஒரு நுகர்வு வரியாகும். பொருள்/சேவை எங்கு நுகரப்படுகிறதோ அங்குதான் வரி வசூலிக்கப்படும். ஆகவே, எங்கெல்லாம் நுகர்வு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் வரி வருவாய் பெருகும். இதுவரை உற்பத்தியாகும் இடத்தில் வசூலிக்கப்பட்ட வரி, இனி இல்லாததால் அந்தப் பகுதிகளில் வரி வருவாய் குறையும். எடுத்துக்காட்டாக தமிழகம் ஓர் உற்பத்தி மாநிலம். நாட்டின் பல பகுதிகளுக்கும் தேவையான பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதனால் தமிழக அரசுக்குக் கணிசமான வரி வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், கேரளா போன்ற மாநிலத்தில் எந்த உற்பத்தியும் நடைபெறுவதில்லை. அங்கு வெறும் நுகர்வு மட்டுமே. ஆகவே, அம்மாநில அரசுக்கு உற்பத்தியின் மீது விதிக்கப்பட்ட வரி சொற்பமே. ஆனால், ஜி.எஸ்.டி. வரியால் அம்மாநில வரி வருவாய் கணிசமாக உயரும். ஆகவேதான் இடதுசாரிகள் மாநில உரிமைகள் பற்றி பெருங்குரலில் எடுத்துரைத்தாலும் ஜி.எஸ்.டியைக் கேரளா வரவேற்கத் தயங்கவில்லை. ஆனால், தமிழகம் ரூ.10,000 கோடி இழக்கும் என எதிர்பார்க்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் இத்தகைய இழப்பை ஒன்றிய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டும் என உறுதியளித்துள்ளது. அதன் பிறகு என்ன செய்வது என்பது எவருக்கும் தெரியாது.
இந்தச் சூழலில் தமிழக அரசு செயல்படுத்திவரும் அனைவருக்குமான பொது விநியோகம் போன்ற தனித்துவமான திட்டங்களைத் தொடர இயலுமா என்பது ஒரு மாபெரும் கேள்வி.
இதுவல்லாது, முழுக்க முழுக்க பணப்பரிவர்த்தனை வாயிலாக மட்டும் நடைபெற்ற தொழில்கள் முடங்கும் அபாயம் உண்டு.
இவையெல்லாம் இருந்தாலும்கூட ஹிட்லர் வைத்த கோஷமான ‘ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவன்’ என்ற பாணியில் ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி’ என்ற கோஷத்தை முன்வைத்து ஜி.எஸ்.டியை அமல்படுத்தியுள்ளது பாஜக. இதற்காக மாநில உரிமைகளையும், விளிம்பு நிலை மக்களையும் காவு கொடுத்துள்ளதை நாம் மறக்க இயலாது.
கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி,எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இந்திய அரசும், தமிழக அரசும் இவரது ஆய்வுகளை, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக