வெள்ளி, 8 செப்டம்பர், 2017

அரசு ஊழியர் போராட்டத்துக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்ட குழுவான ஜாக்டோ-ஜியோவை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்ட குழுவில் விரிசல் ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள சில சங்கங்கள் போராட்டத்தை தள்ளிவைக்கலாம் என்று கருத்து தெரிவித்தன. சில அமைப்புகள் திட்ட மிட்டபடி வேலைநிறுத்தம் என்று அறிவித்தன. இதன்படி நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. சில இடங்களில் பாதிப்பு இல்லை. இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ-ஜியோ) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே போதுமான அளவு ஊதியத்தை அரசு வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்காக மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு. கோரிக்கைகளை வலியுறுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தம் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அக்டோபர் 15-ந்தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும், சில கூட்டமைப்புகள் மட்டும் தாலுகா மற்றும் மாவட்ட அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு சில அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராடுவது அடிப்படை உரிமை ஆகாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேறு வழிகளை கையாளலாம். அதை விட்டுவிட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தீர்வாக அமையாது.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த உத்தரவு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சென்றடையும் வகையில் ஊடகங்களில் பரப்புரை செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

சமுதாயத்தில் வழிகாட்டியாக திகழும் ஆசிரியர்களே இதுபோன்று போராடுவதை ஏற்கமுடியாது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் போராட்டத்தில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. அவர்களின் போராட்டம் பலதரப்பினரையும் பாதிப்படைய செய்யும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர் தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக