ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அத்தனை பேரும் கூண்டோடு பதவி விலகுங்கள்... ஸ்டாலின் ஆவேசம்!

tamil.oneindia.com/authors/gajalakshmi. அரியலூர் : அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது : மாணவி அனிதா மருத்துவம் படிக்க வேண்டிய வாய்ப்பை இழந்துவிட்டார். +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று கட்ஆப் மார்க்காக 196 மதிப்பெண் பெற்றிருக்கக் கூடிய சூழலில் நீட் இல்லாவிட்டால் அவர் மருத்துவராகியிருப்பார். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் பலன் கிடைக்கவில்லை. மத்தியில் இருக்கும் ஆட்சியும், குதிரை பேர ஆட்சியும் ஒவ்வொரு முறையும் தவறான தகவலைச் சொன்னது தான் கொடுமையின் உச்சம். ஒவ்வொரு முறையும் முதல்வர், அமைச்சர்கள் டெல்லி சென்று வந்த போதெல்லாம் நீட் விலக்கிற்காக செல்லவில்லை அடித்த கொள்ளையை அதிகரிப்பதற்காகவே சென்றார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அது மட்டுமல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்டமசோதாக்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாது என்று சொன்னார். அதற்கு பிறகு கடந்த வாரம் குறைந்த பட்சம் ஓராண்டாவது விலக்கு கிடைக்கும் என்று சொன்னார்.

ஆனால் இந்த நம்பிக்கைகளையெல்லாம் கண்ட அனிதா ஏமாற்றத்தை கண்டார், அதனால் தான் தனது உயிரை விட்டுள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனாக இருந்தாலும், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கராக இருந்தாலும், ஐஏஎஸ் அதிகாரியான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரும் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் சார்பில் இதை கேட்டுக் கொள்கிறேன். நாளை மறுநாள் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களுடன் கலந்த பேசி இந்த விவகாரத்தில் எப்படி செயல்படுவது என்பதை முடிவு செய்வோம். அது மட்டுமின்றி அனிதா குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் திமுக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, என்றும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக