சனி, 2 செப்டம்பர், 2017

எந்த ஒரு பில்லியனரும் ஜாதகம் நட்சத்திரம் பார்த்து தொழில் தொடங்கியதில்லை

kkarthikeyan Fastura : ஜோதிடம், ஜாதகத்தை விட அயோக்கியத்தனம் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள் எழ வேண்டிய இயல்பான தன்னம்பிக்கையை உடைத்து, செய்ய வேண்டிய முயற்சிகளை முடக்கி அல்லது தள்ளிபோட்டு, உனக்கு இது தான் வரும் என்று மைன்ட் செட்டை உருவாக்கி வளரவே விடாமல் செய்வது தான் இதன் தந்திரம்.
ஜாதகமும் பார்ப்பேன், தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் படிப்பேன் என்பதை விட முட்டாள்தனம் எதவும் இருக்க முடியாது.
ஜாதகம் என்ற உளவியல்சதியை காப்பாற்றவே அர்ச்சனை செய்யும்போது என்ன ராசி, என்ன நட்சத்திரம் என்று கேட்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி என்று கதை அடிக்கிறார்கள். அதையே பார்ப்பனீயம் போற்றும் எல்லா பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன.
நீங்கள் உண்மையிலேயே முன்னேற விரும்பினால் ஜாதகம் ஜோதிடம் போன்ற ஒரு மயிரும் வேண்டாம். தூக்கி எறியுங்கள். எல்லா காலமும் நல்ல காலமே.

விகடன்.காமில் இதுவரை 24 ஸ்டார்ட்அப் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஒரு பில்லியனர். எல்லோரும் முதல்தலைமுறை தொழில்முனைவோர்கள். ஒருவர் கூட ஜாதகம் ஜோதிடம் பார்த்து எந்த ஸ்டார்ட்அப்பையும் தொடங்கவில்லை. பலர் தெளிவாக தங்களுக்கு கடவுள் நம்பிக்கை எதுவும் பெரிதாக இல்லை என்றே கூறியுள்ளார்கள். ஆகவே வெற்றி பெற ஒரு போதும் இந்த கருமங்கள் தேவையில்லை.
ஊக்கம் தரும் புத்தகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், சந்திப்புகள் போன்றவை மேற்கு நாடுகளில் மிக மிக அதிகம். நம்நாட்டில் மதம் சார்ந்த புத்தகங்கள், கூட்டங்கள், கதாகாலட்சேபம், சொற்பொழிவுகள் தான் மிக மிக அதிகம். காலையில் எந்த டிவியை ஆன் செய்தாலும் யாரோ ஒரு அயோக்கியசிகமணி பட்டைபோட்டுக் கொண்டோ, நாமம் போட்டுக்கொண்டோ வேதம் என்ன சொல்கிறது, புராணம் என்ன சொல்கிறது என்று கதை அளப்பார்கள். அன்றைய நாள் எப்படி இருக்கிறது ஒருத்தர் ஜோதிடம் சொல்வார். அறிவை கழட்டி வைத்துவிட்டு இதைபார்த்து அந்தநாள் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கும் நம்மை பார்த்து இயற்கை காறித் துப்பும். இந்தநாள் நல்லா இருக்கும். இருந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் ஒருநாளை தொடங்கிப் பாருங்கள் நன்றாகத்தான் இருக்கும். அந்த உறுதியை விடாமல் வைத்திருந்தால் போதும். என்ன பிரச்சனை வந்தாலும் ஓடித்தான் போகும்.
நம் நாடுகளில் இலக்கியம் என்றும், யதார்த்தம் என்றும் அவலச்சுவையே கொண்டாடுகிறோம். துயரத்தையே தூக்கி பிடிக்கிறோம். என்று இந்த குப்பைகளை தூக்கி எறிவீர்களோ அப்போது தான் வாழ்வில் முன்னேற்றம் இருக்க முடியும்.
உன் வாழ்க்கை உன் கையில் என்பதை நம்புகிறீர்கள் என்றால் எதற்கு கோவில் குளம் ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம், குருப்பெயர்ச்சிபலன்கள் பார்கிறீர்கள். இரண்டையும் செய்தால் தீர்மானமான வெற்றி என்றும் கிட்டாது.
நீங்கள் எழுதுங்கள் உங்கள் ஜாதகத்தை, நீங்கள் வடிவமையுங்கள் உங்கள் விதியை. நீங்கள் தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையை. நீங்கள் வாழுங்கள் உங்கள் வாழ்கையை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக