சனி, 30 செப்டம்பர், 2017

சிவாஜி சிலை ராசி இல்லையாம்! எடப்பாடி பம்மிய மர்மம் - சோதிடர்கள் ஆலோசனை!

மின்னம்பலம் : சிவாஜி விழாவை தவிர்த்த பின்னணி!
“நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் மணி மண்டபம் கட்டப்பட்டு அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு விழாவுக்கு அரசு நாள் குறித்திருக்கிறது. இந்த மணி மண்டப திறப்பு விழா நிகழ்வில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகிப்பார் எனவும், மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து சிவாஜி குடும்பத்தின் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், ’எங்கள் தந்தைக்கு மணி மண்டபம் அமைப்பது என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார்.அப்பாவின் மணி மண்டபத்தை அரசு திறந்துவைப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், அந்த திறப்புவிழாவில் முதல்வரோ துணை முதல்வரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ளாதது அப்பாவை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.’ என்று வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த செய்திக் குறிப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘சிவாஜி குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விழாவில் பங்கேற்று சிவாஜி மணி மண்டபத்தை திறந்து வைப்பார்’ என அறிவித்துள்ளார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அந்த விழாவில் பங்கேற்க செல்லவில்லை. கடந்த மூன்று நாட்களாகவே எடப்பாடி பழனிசாமி சேலத்தில்தான் தங்கியிருக்கிறார். காரணம், நாளை சேலத்தில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை கவனிக்க சென்றிருக்கிறார். 30ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. அந்த விழா முடிந்ததும், அவர் சென்னைக்குத் திரும்பிவிடலாம். ஆனால், அவர் 1ஆம் தேதிக்கு சென்னைக்கு வருவதை தவிர்த்துவிட்டார். சென்னையில் இருந்து கொண்டு சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவுக்கு செல்லாமல் இருந்தால், அது இன்னும் சர்ச்சையை கிளப்பும் என்பதால் முதல்வர் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள். 1ஆம் தேதி சேலத்தில் இதுவரை எந்த விழாவிலும் கலந்து கொள்வதற்கான அறிவிப்புகள் இல்லை. ஆனாலும், முதல்வர் சென்னை வருவதாகத் தகவல் இல்லை.
மணி மண்டப திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்ட போதே எடப்பாடி பழனிசாமியிடம் அவருக்கு நெருக்கமான சிலர் பேசி இருக்கிறார்கள். 'சிவாஜி சிலையை திறந்து வைத்தவர் கருணாநிதி. தினமும் கோட்டைக்குப் போகும் போதெல்லாம் ஜெயலலிதா அந்த சிலையை பார்த்துட்டுதான் போவாங்க. ஜெயலலிதாவிடம் இதுசம்பந்தமாக பேசிய ஜோதிடர் ஒருவர், ‘தினமும் உங்க பார்வையில் படுறது போல அந்த சிலை இருப்பது நல்லது இல்லை’ என சொன்னார். இதனால் சிலையை அங்கிருந்து அகற்ற சில காய்நகர்த்தல் தொடங்கியது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுத்துவதாக கூறி, சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்ற ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால், சிவாஜி நல பேரவை இதை எதிர்த்து நீதிமன்றம் போனது. வழக்கு நிலுவையில் இருந்ததால், சிலையும் அதே இடத்தில் இருந்தது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் சிவாஜி சிலை அகற்றப்பட்டது. சிவாஜி சிலை ராசி இல்லை என ஜெயலலிதாவிடம் சொன்ன ஜோதிடர் ஒருவர்தான் எடப்பாடியிடமும் பேசி இருக்கிறார்.
‘சிவாஜி சிலையையோ, அந்த மணி மண்டபத்தையோ நீங்க திறந்து வைக்கிறது நல்லது இல்லை. அந்த சிலை பீச் ரோட்டில் இருந்தவரை உங்களுக்கே எவ்வளவு சிக்கல் இருந்துச்சு. இப்போ பாருங்க... ஓரளவுக்கு அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்துட்டீங்க. நீங்க தொடர்ந்து முதல்வராக நீடிக்கணும்னா சிலை திறப்பு விழாவுக்கு போக வேண்டாம்...’ என சொன்னாராம் ஜோதிடர். அதையெல்லாம் கேட்ட பிறகுதான், சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவுக்கு போவதை தவிர்க்க பிளான் போட்டார் பழனிசாமி.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திட்டங்கள் என்பது முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டது. முதல்வர் பங்கேற்க வேண்டும் என நினைத்திருந்தால், சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவை வேறு நாளுக்கு மாற்றி இருக்கலாம். ஆனால், தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அக்டோபர் 1ஆம் தேதியை முடிவு செய்தார் பழனிசாமி...’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அந்த ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டதுடன் அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
‘. கூர்க் கில் இருந்து சென்னை திரும்பிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் ஆயுத பூஜைக்காக தினகரன் வீட்டுக்குச் செல்வதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், இன்று காலை எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பேசிய தினகரன், ‘வீட்டுல ஆயுத பூஜை வேண்டாம்னு சொல்லிட்டேன். அம்மா இறந்து இன்னும் ஒருவருடம் ஆகாத நிலையில் வீட்டில் பூஜை பண்ண வேண்டாம்னு சொல்றாங்க. அதனால, பூஜை எதுவும் வேண்டாம். நம்ம பசங்க ஆர்வத்துல பொறி, கடலை, சுவீட் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க. அது எல்லாத்தையும் அப்படியே எடுத்துட்டுப் போக சொல்லிட்டேன். அதனால பூஜைக்குன்னு யாரும் வீட்டுக்கு வர வேண்டாம். மத்தபடி எப்போ வேண்டுமானாலும் வாங்க...’ என சொல்லிவிட்டாராம். ஜெயலலிதா இருந்தவரை கார்டனிலும் ஆயுதபூஜை விழா களைகட்டும். கார்டனுக்கு வெளியே இருக்கும் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். வீட்டுக்குள் ஸ்பெஷலாக பூஜைகளையும் நடத்துவார் ஜெயலலிதா.
கார்டனில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆயூதபூஜை பதார்த்தங்கள் கொடுத்து அனுப்புவார்கள். ஜெயா டிவியிலும் ஆயுதபூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு இதே நாளில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்தனர் அதிமுகவினர். ஆனால், ஜெயலலிதா வரவில்லை. ஆயுதபூஜையும் கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டும் கார்டன் வெறிச்சோடிதான் காணப்பட்டது. கார்டன் வாசலில் இருக்கும் விநாயகருக்கு மட்டும் வழக்கமாக வரும் அர்ச்சகர் வந்து, பூஜை செய்துவிட்டுப் போயிருக்கிறார். “ என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு, ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக