ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

துரோக துரோனாச்சாரிகளின் பாஜக ஆட்சி ! அனிதாவின் உயிரை பறித்தது ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய ..

GANESH BABU : அர்ஜுனன் உள்ளிட்ட சத்ரிய
மாணவர்களுக்கு 'வில்-வித்தை' கற்றுக்கொடுக்கும் பார்ப்பன குரு துரோணாச்சாரியார், ஏகலைவன் என்பவனுக்கு மட்டும் அந்த வித்தையைக் கற்றுக்கொடுக்க மறுத்துவிடுகிறார். காரணம், ஏகலைவன் பிறப்பால் ஒரு சூத்திரன் என்பதுதான். பின்னர் அதை எப்படியோ பலநாட்களாக துரோணாச்சாரியின் வகுப்புக்களை தூரத்தில் மறைந்து நின்றே கற்றுவிடுகிறான் ஏகலைவன்.
அதைத் தன் குருவிடம் சொல்வதுதான் நேர்மையெனக் கருதியவன் துரோணாச்சாரியிடம் விசயத்தைக் கூற, அவர் நம் ஏகலைவனை சோதித்துப் பார்த்ததில் ஏகலைவன்தான் இவ்வுலகின் தலைசிறந்த வில்-வீரன் என்பதை கண்டுப்பிடித்துவிடுகிறார். ஒரு சூத்திரன் தன்னிடம் பயின்ற சிறந்த வீரனான அர்ஜுனனையே முஞ்சுவதைத் துளியும் சகிக்கமுடியாத துரோணாச்சாரி, கொடூரமான ஒரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார்.
'மறைந்து நின்றுப் பயின்றாலும் நான் தானே உனக்கு குரு? எனக்கு குருதட்சனை எங்கே?' என்கிறார். தன்னை அவரது மாணவராகக் ஏற்றுக்கொண்டாரே என நினைத்து நெகிழ்ந்து, 'குருவே, நீங்கள் எதைக் கேட்டாலும் தருவேன்' என்கிறான் ஏகலைவன். வலதுக்கை கட்டைவிரல் இல்லாமல் வில்லை இயக்கமுடியாது என்பதை அறிந்த துரோணாச்சாரி, 'உன் வலதுக்கை கட்டை விரலை வெட்டிக்கொடு என்கிறார்'. சூத்திர ஏகலைவன் அதை வெட்டிக்கொடுத்தான்.
உலகின் ஒப்பற்ற குரு துரோணாச்சாரி என்றும், தன்னிகரற்ற வீரன் அர்ஜுன் என்றும் 'மகாபாரதம்' குறித்துக்கொண்டது.
அதன்படிதான் இந்த இரண்டு குரூரமான சதிக்காரர்களின் பெயரிலும் இந்திய அரசு விருதுகள் வழங்குகிறது.

சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கு 'துரோணா விருது'. சிறந்த விளையாட்டு வீரருக்கு 'அர்ஜுனா விருது'.
இன்னுமா இது யாருக்கான நாடு என்று உங்களுக்குப் புரியவில்லை?
அன்று ஏகலைவனின் கட்டைவிரலைக் கேட்டவர்கள், நின்று அனிதாவின் உயிரை கேட்காமலே அபகரித்துவிட்டனர்.
-GANESH BABU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக