வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கிரிஜா வைத்தியநாதன் :உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு ஊழியர்கள் உடன பணிக்கு திரும்ப வேண்டும்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது இன்று நடந்த விசாரணையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக