சனி, 23 செப்டம்பர், 2017

கமலஹாசன் மம்தா பானர்ஜியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார்

மின்னம்பலம் : தற்போது தமிழக ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது கமல்ஹாசனின் அரசியல் பற்றிய அறிவிப்புகள்தான். சில மாதங்களாக ட்விட்டர் மூலமாக தனது மனதில் வெளிப்படும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துவந்த நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசின் மீதான தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்.
ஒருகட்டத்தில் ‘பிக் பாஸ்’ பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், “தமிழகத்தின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் உள்ளது” என்று தெரிவித்த ஒரு வார்த்தை, தற்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்துச் சிந்திப்பது வரை கொண்டுவந்துள்ளது.
கமல்ஹாசனின் ஊழல் புகார்கள் குறித்து எதிர்வினையாற்ற அமைச்சர்கள் வரிந்துகட்டினர். செல்லூர் ராஜூ, “கமல் ஒரு துறையைக் குறிப்பிட்டு அதில் தவறுள்ளது என்று சொன்னால் சரிசெய்ய தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார். மற்ற அமைச்சர்கள் கமலுக்கு சினிமாவில் மார்க்கெட் போய்விட்டதாக விமர்சிக்க, ஒருகட்டத்தில் ‘கமலெல்லாம் ஆளே இல்லை’ என்ற அளவுக்குப்போனது அந்த விமர்சனம்.

ஆனாலும், அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கமல்ஹாசன் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். ‘அமைச்சர்களின் ஊழல் புகார்களை அவர்களுக்கே அனுப்புங்கள்’ என்று அமைச்சர்களின் முகவரியையும் பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த முகவரியில் முதல்வர் உள்பட அமைச்சர்களின் விவரம் எதுவுமே இல்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய கமல், தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், ‘கமல்ஹாசன் ட்விட்டரில்தான் கட்சி நடத்த முடியும்’ என்று தெரிவித்திருந்தார்.
இப்படி நாளுக்கு நாள் கமலின் அரசியல் பேச்சுகள் அதிகரித்துவந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பினராயி விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாகத் தெரிவித்தார்.
ரஜினி, ‘போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒருபுறம் கூறிவிட்டு அமைதியாக இருக்க, மறுபுறம் தான் அரசியல் கட்சி தொடங்கும் யோசனையில் இருப்பதாக ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அதிரடியாக தனது அரசியல் தீயைப் பற்றவைத்தார் கமல். மேலும், ‘நான் இடதுசாரியுமல்ல, வலதுசாரியுமல்ல; மனிதநேயவாதி’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் கமல்ஹாசன் இல்லத்தைத் தேடி வந்து ஆலோசனை செய்துள்ளார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அவர் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து கமல்ஹாசன், 100 நாள்களில் தேர்தல் வந்தால் அரசியலில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து அரசியல் தொடர்பாக கமல்ஹாசன் சந்திக்கவுள்ள மூன்றாவது அரசியல் தலைவர், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. இதற்காக கமல்ஹாசன் தரப்பிலிருந்து, மம்தாவைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மம்தாவும் கமல்ஹாசனின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டு கமல்ஹாசனைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் இதனால் மம்தா பானர்ஜி - கமல்ஹாசன் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக