ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

தமிழக சபாநாயகருக்கு ஒரு திறந்த மடல்.... சவுக்கின் சாட்டை..

ஜெயலலிதா உங்களை புகழ்ந்து பேசியதையும், நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அப்படி நீதி வழுவாமல் நீங்கள் சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தமிழகம் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்றினார், ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தார் என்று நீங்கள் புகழப்பட வேண்டும். ஆளுங்கட்சிக்கு துணையாக, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார் என்ற தீராத அவப்பெயர் உங்களுக்கு வருவதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி தடம் மாறிச் சென்றீர்கள் என்றால், தமிழக மக்கள் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் ஆன்மாவும் உங்களை மன்னிக்காது.
அன்பார்ந்த சபாநாயகர் அவர்களே, வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் வருங்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒட்டுமொத்த தமிழகமே நீங்கள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று ஆவலோடு எதிர்நோக்கி உள்ளது.
2016 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்திருந்தனர்.   ஆனால் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார்.  அடுத்த ஐந்தாண்டுகளும் வழக்கமான சம்பிரதாயமான சபாநாயகர் பணியாகவே உங்கள் பணி அமையப் போகிறது என்றுதான் நீங்களும் எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.  ஆனால் காலம் நாம் போடும் கணக்குகளை அப்படியே நடக்க விடுமா என்ன ?
ஜெயலலிதாவின் மரணம், தமிழகத்தின் அரசியல் சூழலையே மாற்றிப் போட்டது. கட்டுக்கோப்பான ஒரு ராணுவத்தைப் போலத்தான் அதிமுகவை நடத்தி வந்தார் ஜெயலலிதா. ராணுவத்தில் கட்டளையை மீறி எதிர்த்துப் பேசினால் அளிக்கப்படும் தண்டனையைப் போலத்தான் தன் கட்சியினருக்கும் தண்டனை அளித்து வந்தார்.   அப்படிப்பட்ட ஒரு ராணுவ தளபதி திடீரென்று இல்லாமல் போனால் கட்டுக்கோப்பாக இருந்த ராணுவம், கூலிப்படையினர் கூட்டமாக மாறிப் போகும்.  அப்படிப்பட்ட ஒரு கூலிப்படை  கூட்டமாகத்தான் இன்று அதிமுக மாறியுள்ளது.

அணிகள் பிரிந்தன.  இணைந்தன.  யாரும் யாருக்கும் கட்டுப்பட்டு இல்லை.  ஒவ்வொருவரும் தனிக்காட்டு ராஜா.  ஒவ்வொருவரும் தனித்தனி நாட்டாமைகள். இந்த சூழலில்தான் ஒரு பெரும் பொறுப்பு உங்களை வந்தடைந்திருக்கிறது.
சபாநாயகர் பதவி என்பது ஒரு சம்பிரதாயமான, சாதாரணமான பதவி என்றாலும், அரசுக்கு பெரும்பான்மை குறையும் நேரத்தில் அந்த பதவி உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவியை விட முக்கியத்துவம் பெற்றதாகவும், சவால் நிறைந்ததாகவும் மாறுகிறது.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை வரலாறு கண்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சபாநாயகர் என்று ஒரு பதவி இருப்பதையும், அதன் அதிகாரம் எத்தகையது என்பதையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் பிஎச்.பாண்டியன்.  அவர் கூறிய புகழ்பெற்ற வாக்கியம்தான் என்னுடைய அதிகாரம் வானளாவியது என்பது.  1987ம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன் வெளி வந்தது.   அதுல யாருப்பா மந்திரி, யாரு எம்எல்ஏ என்ற கேள்விக்கு, பிக்பாக்கெட் மாதிரி இருக்கவரு எம்எல்ஏ, கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறவரு மந்திரி என்ற கார்ட்டூன் அது.    இது சட்டப்பேரவையின் உரிமையை மீறி விட்டது.  சட்டப்பேரவையை அவமதித்து விட்டது என்று,  ஆனந்த விகடன் அதிபர் பாலசுப்ரமணியனை சிறையில் அடைத்தார்.
பத்திரிக்கை உலகமே வெகுண்டு எழுந்தது.  தமிழக வரலாற்றில் முதல் முறையாக, ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களும் ஒரு நாள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்.  நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன.    மறு நாள் எம்ஜிஆர் பெருந்தன்மையோடு அவரை எம்ஜிஆர் விடுதலை செய்ய உத்தரவிட்டதாக அறிவித்த பிஎச் பாண்டியன், உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.  ஆனால் விகடன் அதிபர் பாலசுப்ரமணியம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை தவறு என்று வாதிட்டார்.  அந்த வழக்கில் அவர் சிறை விதிக்கப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அரசு அவருக்கு ஒரு அடையாள நஷ்ட ஈடாக 1000 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாற்றி, பணத்தை பெற்று, அந்த காசோலையின் நகலையும், இரண்டு 500 ரூபாய் தாள்களையும் இன்றும் விகடன் அலுவலகத்தில் வைத்திருக்கிறார்கள்.

அவருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சபாநாயகரும் உங்கள் கட்சிதான்.   1991 முதல் 1996 வரை சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையா.  1988ம் ஆண்டு ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணிகளுக்கிடையே சட்டப்பேரவை பலப்பரீட்சை வன்முறையில் முடிந்தது.   காவல்துறை உள்ளே புகுந்து தடியடி நடத்த வேண்டிய அளவு நிலைமை மோசமாக இருந்தது. அந்த சம்பவம் குறித்து இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையில் கேபி.சுனில் என்ற பத்திரிக்கையாளர், “நடந்த களேபரத்தில் ஒருவரின் வேட்டி காணாமல் போயிருந்தது” என்று எழுதினார்.  அவர் அப்போது எழுதியதற்காக, அவருக்கு 1992ல் சிறைத் தண்டனை விதித்தார் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா.   சுனில் அந்த சிறைவாசத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்.  உச்சநீதிமன்றம் உடனடியாக அந்த கைதுக்கு தடை விதித்தது.  உச்சநீதிமன்ற விதி என்னை கட்டுப்படுத்தாது என்று அறிவித்தார் சேடப்பட்டி முத்தையா.   சுனில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
எங்கள் உத்தரவை மீறி கைது நடந்தால், அரசை அரசமைப்புச் சட்டம் 355வது பிரிவை பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்யவும் தயங்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் கூறியதும்தான் சேடப்பட்டி அடங்கினார்.
மீண்டும் வரலாற்றில் சபாநாயகரின் கருப்புப் பக்கங்களில் எழுதப்பட்டதும் அதிமுக சபாநாயகர்தான்.   2003ம் ஆண்டு சபாநாயகராக இருந்த காளிமுத்து, இந்து பத்திரிக்கையில் வெளிவந்த தலையங்கம் மற்றும் சில செய்திக் கட்டுரைகள் அவையின் உரிமைகளை மீறி விட்டதாகக் கூறி, விசாரணையே இன்றி, இந்து செய்தியாளர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்தார். இந்த விவகாரத்திலும் இந்து நிர்வாகிகள் உச்சநீதிமன்றம் சென்று, கைதுக்கு தடை உத்தரவு பெற்றார்கள்.
அதிமுகவைச் சேர்ந்த இந்த சபாநாயகர்கள் மூவரும் தவறான காரணங்களுக்காக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.  ஆனால் சரியான காரணங்களுக்காக வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டதிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் இனத்திலிருந்து முன்னேறி இந்நிலைக்கு வந்துள்ளீர்கள்.   உங்களின் இந்த முன்னேற்றம் அத்தனை எளிதானதல்ல.   குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து வரும் நீங்கள், அங்கே கவுண்டர்களின் ஆதிக்கம் எத்தகையது என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். அத்தகைய ஒடுக்கு முறைகளையெல்லாம் கடந்து உங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளீர்கள்.
2012ம் ஆண்டு உங்களை சபாநாயகராக தேர்ந்தெடுத்து ஜெயலலிதா பேசியதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
” மாண்புமிகு பேரவைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கக் கூடிய தாங்கள் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில், பின்தங்கிய பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த முதல் பேரவைத் தலைவர் தாங்கள் தான் என்பதிலும், முதன் முறையாக அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த தாங்கள் இந்தப் பேரவையின் தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள் என்பதிலும்; எனக்கு மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்தச் சட்டமன்றத்தில் தாங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள். மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1972-ல் துவக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972-ஆம் ஆண்டு முதலே தங்களை இணைத்துக் கொண்டு, அந்த இயக்கத்தின் கொள்கைகளுக்காக தாங்கள் சிறந்த முறையில் பாடுபட்டு இருக்கிறீர்கள். கட்சியில்  பல்வேறு பொறுப்புகளை தாங்கள் வகித்து இருக்கிறீர்கள். பொதுமக்களோடு, குறிப்பாக ஏழை, எளிய மக்களோடு நெருக்கமான தொடர்பும், உறவும் கொண்டவராக தாங்கள் விளங்கியிருக்கிறீர்கள். 1977 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை சங்ககிரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் திறம்பட பணியாற்றி இருக்கிறீர்கள். 2001 ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள், அமைச்சராகப் பொறுப்பேற்று ஆதி திராவிடர் நலன், உணவு மற்றும் கூட்டுறவு இலாகாக்களை திறம்பட நிர்வகித்து இருக்கிறீர்கள். தற்போது ஐந்தாவது முறையாக ராசிபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள் கடந்த 16 மாத காலமாக பேரவைத் துணைத் தலைவராக பணியாற்றி இருக்கிறீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பேரவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் தங்களுக்கு உண்டு.
அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் தன்மை; பொதுமக்களோடு நெருங்கிப் பழகும் விதம்; நீண்ட நாட்களாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம்; அமைச்சராகவும், பேரவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றின் காரணமாக தற்போது ஏற்றுள்ள பொறுப்பினை தாங்கள் திறம்பட வகிப்பீர்கள்; அதன் மூலம் அனைவரது பாராட்டினையும் பெறுவீர்கள் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.”
இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் இல்லை.   நீங்கள் உயிரினும் மேலாக கருதும் உங்கள் புரட்சித் தலைவியின் வார்த்தைகள்.   அதிமுகவில் எத்தனையோ எம்எல்ஏக்கள் இருக்க, அவர்கள் அத்தனை பேரையும் ஒதுக்கி விட்டு, உங்களை தேர்ந்தெடுத்த பின்னர், உங்களைப் பற்றி ஜெயலலிதா வாசித்த புகழுரைதான் இது.
நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், உங்களிடம் என்ன எதிர்ப்பார்த்தார் என்பதையும், ஜெயலலிதா வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
“பேரவையின் விதிகளையும், மரபுகளையும், முன்னாள் பேரவைத் தலைவர்களின் நல்ல தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, இந்தப் பேரவையினை சட்டத்தின் அடிப்படையில் நடத்திச் செல்வதில் தாங்கள் அக்கறையும், ஆர்வத்தையும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்லாமல் இங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கின்றது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் அனைவரின் உரிமையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
மாட்சிமை மிகுந்த இந்தச் சட்டப் பேரவையின் பெருமையையும், புகழையும் நிலை நிறுத்துவதிலே தங்களுடைய அறிவும், அனுபவமும், ஆற்றலும் நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கேற்ற அத்தனைத் திறனையும் தாங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
வீணையிலிருந்து சரியான இசை வர வேண்டும் என்றால், அதனுடைய தந்திகள், அதாவது வீணையின் நரம்புகள் இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் நடுநிலைமையில் இருக்க வேண்டும். அது போல், இந்த அவை சீரோடும், சிறப்போடும் நடைபெற வேண்டுமென்றால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது நடுநிலைமை. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடுநிலைமை தங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளதால், இந்த அவையை சீரோடும், சிறப்போடும் நீங்கள் நிச்சயம் நடத்துவீர்கள் என்ற எனது நம்பிக்கையினைத் தெரிவித்துக் கொண்டு, தங்களுடைய தலைமையின் கீழ் இந்தப் பேரவையின் கண்ணியம் மேலும் சிறப்புறும்”
இத்தகையதொரு பிரம்மாண்டமான நம்பிக்கையைத்தான் ஜெயலலிதா உங்கள் மீது வைத்திருந்தார்.   ஆனால் இத்தகைய நம்பிக்கைக்கு பாத்திரமான நடுநிலையான காரியங்களை கடந்த ஒரு மாதத்தில் செய்திருக்கிறீர்களா என்பதை எண்ணிப் பாருங்கள்.  தடை செய்யப்பட்ட ஒரு பொருள், மாநிலமெங்கும் கிடைக்கிறது.  அது புற்றுநோயை உண்டாக்குகிறது.  அது பற்றி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அந்த தடை செய்யப்பட்ட பொருளை சட்டப்பேரவைக்கு எடுத்து வருவது அத்தனை பெரிய குற்றமா என்ன ?   அது அவரது கடமை இல்லையா ?

சட்டவிரோதமாக குட்கா வியாபாரம் மாநிலமெங்கு தங்கு தடையின்றி நடைபெறுவதை தடுக்கத் தவறிய அரசை ஆதாரத்தோடு அவையில் அம்பலப்படுத்துவதுதானே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் பணி ?   அது எப்படி உரிமை மீறலாகும் ? அதற்காக அவர்களை இடைநீக்கம் செய்ய முனைந்து தாங்கள் நோட்டீஸ் அனுப்பிய செயல் முறையான செயலா ?  இதுதானா உங்கள் நடுநிலை ?
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கையில், ஆளுங்கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வமும் அவரோடு சேர்த்து 11 எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது கட்சித்தாவல் சட்டத்தில் வருமா வராதா ?   அதை கண்டு கொள்ளாமல் விட்டீர்கள் சரி.  இன்று பிரிந்தவர்கள் நாளை கூடலாம் என்று தாங்கள் எண்ணியிருக்கக் கூடும்.
ஆனால் எவ்வித நம்பிக்கை வாக்கெடுப்பும் நடக்காமலேயே டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய துடிக்கிறீர்களே…. !! இது அப்பட்டமாக ஒரு சார்பான நடத்தை அல்லவா ?   எங்கே போயிற்று உங்கள் மனசாட்சி ?
உங்களுக்கு எத்தகையதொரு அழுத்தத்தை முதல்வர் எடப்பாடியும் அவரைச் சேர்ந்தவர்களும் அளித்து வருவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.   இதே வேறு ஒரு சூழலாக இருந்தால் உங்களை மிரட்டியிருப்பார்கள்.   ஆனால் இன்று அப்படி மிரட்ட முடியாததொரு வலுவான நிலையில் தாங்கள் அமர்ந்திருக்கிறார்கள்.  இது வரை, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை தாங்கள் தகுதிநீக்கம் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருப்பார் என்பதில் ஐயமில்லை.  ஆனால் உங்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இயலாத ஒரு கையறு நிலையில் இருக்கிறார்.  அப்படியொரு நிலையில் இருந்திருந்தால் இந்நேரம் உங்களை எப்போதோ மாற்றியிருப்பார்.
கொங்கு மண்டலத்தில், எடப்பாடியார் கூட்டத்தின் ஆதிக்கத்தைப் பார்த்தே வளர்ந்த உங்களுக்கு இன்று அவர்கள் உங்களிடம் கெஞ்சுவது புதுமையாகத்தான் இருக்கும்.   காலத்தின் கோலம் அப்படித்தான்.    இன்றைய அதிமுகவில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.  ஆனால் அவர்களில் ஒரே ஒருவர்தான் அமைச்சர் என்ற விஷயம் உங்களையும் உருத்தத்தான் செய்யும். எண்ணிக்கையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருக்கும் ஒரு சமூகத்திற்கு கூடுதலாக இரண்டு அமைச்சர் பதவிகளை ஒதுக்க இந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு மனம் வந்ததா ?   இருப்பதிலேயே வருவாயை அள்ளி அள்ளித் தரும் பொதுப் பணித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன்னகத்தே வைத்திருக்கும் இந்த எடப்பாடியாருக்கு, நேற்று வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்ட தொல்லியல் துறையையாவது மற்றொரு தலித் எம்எல்ஏவுக்கு வழங்கி அவரை அமைச்சராக்குவோம் என்ற எண்ணம் இருந்ததா ?
இந்த ஆட்சி எதற்காகத் தொடர வேண்டும் ? கவுண்டர்களும் முக்குலத்தோரும்  அமைச்சர் பெருமக்களாகி பணத்தை அள்ளிக் குவிக்கையில், தலித்துகள் அவர்களுக்கு சாமரம் வீசுவதற்காகவா ? இன்று ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களை சந்தித்து ஆலோசிக்கும் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், ஆட்சிக்கு நெருக்கடி இல்லாத காலகட்டத்தில் உங்களை மனிதராகவாவது மதித்திருப்பார்களா என்பது உங்களுக்கே தெரியும்.
ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று இன்று உங்கள் முன் மன்றாடும் எடப்பாடியிடம், இரண்டு தலித் எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்கி, அவர்களுக்கு பொதுப் பணித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துப் பாருங்களேன்.   ஆட்சியை எடப்பாடியே கவிழ்ப்பார்.
இதற்காக உங்களை பழிவாங்கும்படி கேட்கவில்லை.  பழிபாவத்துக்கு ஆளாகாதீர்கள் என்றே கூறுகிறேன்.
அதிமுக நீங்கள் மிகவும் நேசித்த ஒரு கட்சி. அது தோற்றுவிக்கப்பட்ட நாள் முதலாக அதில் இருக்கிறீர்கள்.  ஜெயலலிதா நீங்கள் மிகவும் நேசித்த ஒரு தலைவர்.  1989ம் ஆண்டு சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, அவரோடு போட்டியிட்டு வெற்றி பெற்ற 33 எம்எல்ஏக்களில் நீங்களும் ஒருவர்.

இன்று ஆட்சியின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களில், ஜெயலலிதா மீது உண்மையான அபிமானம் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர், நடிப்பவர்கள் எத்தனை பேர் என்பது, அந்தக் கட்சியிலேயே இருக்கும் உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.   பராரிகளாக இருந்து, இன்று கோடீஸ்வரர்களாக இருக்கும் அமைச்சர்களை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.   அவர்கள் மேலும் செல்வந்தர்களாவதற்காகத்தானே இந்த ஆட்சியை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறார்கள் ?  வேறு காரணம்                        ஏதாவது  உள்ளதா ?
நீங்கள் இன்று எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தின் பேச்சைக் கேட்டு விதிகளை வளைத்து, சட்டத்தை காற்றில் பறக்க விட்டு தவறான ஒரு முடிவை எடுத்தாலும் கூட, அது நீதிமன்றத்தால் தூக்கி எறியப்படும் என்பதை, உங்களோடு கடந்த இரண்டு நாட்களாக விவாதித்துக் கொண்டு வரும் தலைமை வழக்கறிஞர் எடுத்துரைத்திருப்பார்.    இந்தியா முழுக்க சட்டப்பேரவை தொடர்பான விவகாரங்களில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட சபாநாயகர்களின் அத்தனை முடிவுகளையும் நீதிமன்றங்கள் ரத்துதான் செய்திருக்கின்றன.   நீங்களும் அந்தப் பட்டியலில் இணைய விரும்புகிறீர்களா ?
மிகவும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒரு மனிதர், மிகவும் நெருக்கடியான நேரத்தில், நீதி பிறழாமல், நேர்மையாக செயல்பட்டார் என்று உங்கள் பெயர் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட வேண்டும்.  எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும், மரபுகளுக்கு மரியாதை அளித்து, சட்டத்தை மீற மறுத்தார் என்றே உங்கள் பெயர் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஜெயலலிதா உங்களை புகழ்ந்து பேசியதையும், நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.  அப்படி நீதி வழுவாமல் நீங்கள் சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தமிழகம் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்றினார், ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தார் என்று நீங்கள் புகழப்பட வேண்டும்.   ஆளுங்கட்சிக்கு துணையாக, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார் என்ற தீராத அவப்பெயர் உங்களுக்கு வருவதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.  அப்படி தடம் மாறிச் சென்றீர்கள் என்றால், தமிழக மக்கள் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் ஆன்மாவும் உங்களை மன்னிக்காது.
அதிமுகவிலிருந்து முதல் முறையாக ஒரு நேர்மையான சபாநாயகர் என்ற நல்ல காரணத்துக்காக நீங்கள் நீங்கா புகழடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
சவுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக