திங்கள், 11 செப்டம்பர், 2017

லண்டன் .. அனிதாவுக்கு நீதி கேட்டு இந்திய தூதரகம் முன்பாக முழங்கிய பறை!


Gajalakshmi. Oneindia Tamil : லண்டன் : அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்விற்கு தடை கோரியும் லண்டன் தமிழர்கள் இந்திய தூதரகம் முன் பறையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வால் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ கனவு கலைந்ததால் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனிதாவின் மரணத்தையடுத்து கல்வியில் சம வாய்ப்புகளை வழங்காத நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வெளிநாடு வாழ் தமிழகர்களும் தொடர்ந்து தங்களது ஆதரவுக் குரலை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஈராக் என்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஏழை மாணவி அனிதாவிற்காகவும், அவர் போன்ற பிற மாணவர்களுக்காகவும் சேர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அஞ்சலி இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத் தமிழர்களும், லண்டனில் உள்ள இந்திய துணை தூதரகம் முன்பு மாணவி அனிதாவிற்காக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மாணவி அனிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்திப் போராடினர். பறை முழங்கி போராட்டம் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். நீட்டை தடை செய்வோம், தமிழகத்தை மீட்போம் என்று முழக்கமிட்டவர்கள் தாரை தப்படையுடன் பறை இசை முழங்க போராடினர்.

அனிதாவின் கொலை சமூக நீதியின் கொலை என்றும், இந்திய குடிமக்களுக்கு ஒரே சமமான கல்வி முறையில்லை. ஆனால் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு மட்டும் எப்படி சாத்தியம். இது வரை தமிழகத்தில் இருந்து வந்த எந்த மருத்துவர் சிறந்த மருத்துவ சேவையை அளிக்கவில்லை. 98 சதவீதம் மாநிலப்பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை நீட் பாதிக்கிறது. வெறும் 2 சதவீதம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பாடத்தை படிக்கின்றனர். தமிழக அரசு தங்களின் தோல்வியை ஒப்புகொள்ள வேண்டும். நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று லண்டன் வாழ் தமிழர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு பீட்டா, அனிதாவுக்கு நீட்டா என்று தமிழர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அனிதாவிற்காக நடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்களின் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக