புதன், 6 செப்டம்பர், 2017

உருகிய வைகோ... வெளுத்துவாங்கிய ஸ்டாலின்..! முரசொலி பவளவிழா .. முழு சித்திரம்.. விகடன்

ஜெ.அன்பரசன் கே.ஜெரோம் : முரசொலி விழா மேடை" தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட முரசொலி பத்திரிகையின் பவளவிழா சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (05-09-2017) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ வரவேற்றார். பவளவிழாவில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.க தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத்தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்,   எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். மேலும் முரசொலி பத்திரிகை, கருணாநிதி மற்றும் தமிழக அரசியலுடன் பயணித்து வந்த பாதையைப் பற்றியும் பேசினார்கள்.

திருமாவளவன், (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 
''முரசொலி என்பது ஒரு பத்திரிகை அல்ல. அது ஒரு இயக்கம். முரசொலியை ஒருமுறை படித்துவிட்டால், அதிலிருந்து யாராலும் வெளியே வர முடியாது. அந்த அளவுக்கு அது கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகை. எனது ஆரம்பகாலங்களில் நூலகங்களில் முரசொலி பத்திரிகைக்காகக் காத்துக்கிடப்பேன். அதன் மூலமாகத்தான் மாநிலத்தின் உரிமைகள், மாநில சுயாட்சி போன்றவற்றைத் தெரிந்துகொண்டேன். தமிழ்நாட்டில், இந்தித் திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். மேலும் தமிழ்நாட்டில், ஆதிக்க வர்க்கமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.''
வைகோ, (ம.தி.மு.க பொதுச்செயலாளர்) 
''1974 ஆம் ஆண்டு கருணாநிதி, சங்கரன்கோவில் வழியாக ரயிலில் வந்தார். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். பின்னர் கருணாநிதிக்கு சால்வை அணிவித்தேன். என்னைப் பார்த்ததும் 'வண்டியில் ஏறு' என வைகோ உத்தரவிட்டார். அப்போது கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் என் கையைப் பிடித்து வண்டியில் ஏற்றினார். பின்னர் கருணாநிதி என்னைப் பார்த்து 'ஏன் மெலிந்துவிட்டாய்?' என்று கேட்டார். அதற்கு நான், 'வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இருந்தேன். நீங்கள் வருவதைக் கேள்விப்பட்டேன். அதனால்தான் உங்களைக் காண வந்தேன்' என்றேன்.
பின்னர் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் கருணாநிதி ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அப்போது கருணாநிதியைப் பரிசோதித்த மருத்துவர், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகச் சொன்னார்.
'திடீரென எப்படி ரத்த அழுத்தம் உயர்ந்தது?' என கருணாநிதியிடம் டாக்டர் கேட்டிருக்கிறார். அதற்கு கருணாநிதி, 'கோபால்சாமி கட்டுமஸ்தான இளம் காளை போல இருப்பார். ஆனால், இப்போது மிகவும் மெலிந்துவிட்டார். கோபால்சாமியை இப்படிப் பார்ப்பது வருத்தமளிக்கிறது' என்று கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை மருத்துவர் என்னிடம் கூறினார். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்போதும் கருணாநிதியுடனான எனது நினைவுகள் நெஞ்சில் முட்டி மோதுகின்றன'' என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய். பேச்சின் நிறைவாக, ''கருணாநிதி மீண்டும் தமிழ்ச் சமூகத்துக்கு சேவை ஆற்ற வருவார்'' என்று நம்பிக்கை தெரிவித்து அமர்ந்தார் வைகோ.
பேராசிரியர் அன்பழகன், (கழகப் பொதுச் செயலாளர்)
''பெரியார் இன்றைக்கு இருந்திருந்தால், இந்த இயக்கம் எப்படி நடைபோடுமோ, அதே முறையில் அறிஞர் அண்ணா இருந்திருந்தால், என்ன முறையில் நடைபெறுமோ அதேபோல கலைஞர் தலைமையில் இன்றைக்கு தி.மு.க நடைபெறுகிறது. ஸ்டாலின், ஒரு தலைவர் முறையிலே அல்ல, ஒரு தொண்டர் என்ற முறையிலே அல்ல, ஒரு தோழன் என்ற முறையில் இந்த இயக்கத்தை நடத்தி வருவது பாராட்டத்தக்கது. பெரியாருக்குப் பிறகு, அண்ணாவுக்குப் பிறகு, அவர்கள் வழியில் வந்த கலைஞர் இந்த இயக்கத்தைக் காத்துக்கொண்டிருக்கிறார். அதே வழியில், கலைஞருக்குப் பிறகு இந்த இயக்கத்தை நிலைநாட்டக்கூடியவர் ஸ்டாலின் ஒருவர் மட்டுமே. ஸ்டாலினுடைய உழைப்பு முழுவதும் இந்த நாட்டுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஸ்டாலினுக்குத் துணை நிற்க வேண்டும்'' என்று கூறினார்.
ஸ்டாலின், (கழக செயல் தலைவர்)
''இந்த விழாவில், கலைஞர் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கோபாலபுரத்தில் இருந்துகொண்டு தொலைக்காட்சியின் மூலமாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவர் அங்கு இருந்தாலும் அவரின் உள்ளம், எண்ணம் அனைத்தும் இந்த விழாமேடையைச் சுற்றித்தான் இருக்கும். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரியலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அனிதாவை நாம் பறிகொடுத்திருக்கிறோம். கையாலாகாத ஒரு மாநில அரசு, சமூக நீதியைக் குலைக்கக்கூடிய மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு இருக்கிற காரணத்தினாலே நாம் அனிதாவை இழந்திருக்கிறோம். மத்தியில், பிரதமராக இருக்கக்கூடிய மோடி, தேர்தலுக்கு முன் என்ன சொன்னார்...? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வானத்தைக் கிழிப்போம், மணலைக் கயிறாகத் திரிப்போம் என்றெல்லாம் கதை விட்டு ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைய நிலை என்ன? கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்,  ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் வரவு வைக்கப்படும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பேன். நதிகள் இணைக்கப்படும். இதுபோல எவ்வளவு வாக்குறுதிகள்... இதில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டதா? மத்தியில் இருப்பது, மோடி ஆட்சி அல்ல...மோசடி ஆட்சி! இந்த மோசடி ஆட்சியை அப்புறப்படுத்த நாம் அனைவரும் தயாராவோம்.'' என்று சூளுரைத்தார் ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக