செவ்வாய், 12 செப்டம்பர், 2017

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!. அதிமுகவை சாய்த்து விட்டார்கள் ..அடுத்து திமுகவை ......

அவர்கள் வேர்விட ஆரம்பித்து விட்டார்கள். “நான் தூங்கும் போது என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிற பெண்ணையோ தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதைவிட சொல்வதற்கு என்னிடம் உதாரணங்கள் எதுவும் இல்லை.
thetimestamil : சரவணன் சந்திரன் : வெளிப்படையாகவே உடைத்துப் பேசலாம். பா.ஜ.க என்ன செய்ய நினைக்கிறது இங்கே? முகநூல் வழியாக ஒரு தேர்தல் வைத்தால் இதில் எந்தக் கட்சிகளெல்லாம் பெரும்பான்மை பலம் கொண்டு வெற்றி பெறும் என்று யோசித்தால், வேடிக்கையாக இருக்கிறது. ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மிகப் பெரும்பாலான முகநூல் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்து விடுவார். ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை பா.ஜ.கவை எப்படி மதிப்பிட்டார்கள் இங்கே? தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மேடையில் ஒரு திண்டொன்றில் ஏறி நின்று உரையாற்றுவதைக் கிண்டலடித்து நிறையப் பதிவுகளைப் பார்த்தேன்.
கேலியும் கிண்டலுமாய் நிறைய புகைப்படங்களைப் பார்த்தேன். அவர் குமரி ஆனந்தனின் பெண் என்ற ஒரு காரணத்திற்காகவே அந்தப் புகைப்படக் கிண்டல்களைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து என இந்தயிடத்தில் சொல்லுவதற்கு உண்மையிலேயே அச்சமாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு இன்னும் உடல் பழக விரும்பவில்லை.

அது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் பா.ஜ.க சில முன்னெடுப்புகளைத் துணிந்து இங்கே மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதுதான் நிதர்சனம். வளரவே முடியாது என்று கணித்த அவர்கள்தான் நித்தமும் தொலைக்காட்சி விவாதங்களை அலங்கரிக்கிறார்கள்.
போன வருடம் வரை இப்படி யாரையாவது அழைத்து மாலை மரியாதை செய்திருக்கிறார்களா என்பதை யோசித்துப் பாருங்கள். தப்போ சரியோ இவர்கள் அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று கருதிய அவர்கள்தான் விவாதத்தின் முனைக்கு இப்போது வந்திருக்கிறார்கள். மத்தியில் அருதிப் பெரும்பான்மையுடன் கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சில விஷயங்களை தமிழ்நாட்டில் நிகழ்த்திப் பார்க்க தயாராகி விட்டனர். அதைத் தவறென்று தெளிவான அரசியல் புரிதல் கொண்டவர்கள் சொல்ல மாட்டார்கள். எல்லோருக்குமே அரசியல் செய்ய வாய்ப்பிருக்கிறது இங்கே. இதுவரை கட்டியாண்டவர்கள் மத்தியில் கட்டியாள நினைக்கிறவர்கள் முன்னகர்ந்து செல்வதை தவறென்று சொல்லவே முடியாது இல்லையா?
தமிழகம் அரசியல் ரீதியில் மிகச் சிறந்த வேட்டைக்களம் இப்போது. இரண்டு பெரிய திராவிடக் கட்சித் தலைமைகள் இங்கே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக கலைஞரின் உயிர்வாழ்வு சம்பந்தமான விஷயத்தை இத்தோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அமங்கலமாக எதையும் சொல்லவில்லை. பருப்பு உளது எனச் சொல்லும் தமிழ் வாழ்க்கை சார்ந்த ஆள்தான் நானும்.
பா.ஜ.க தெளிவாக திராவிடக் கட்சிகள் என்று சொல்லப்பட்ட ஒரு தரப்பை போட்டுச் சாய்த்து விட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அது அதிமுகவை கபளீகரமும் செய்து விட்டது. இனி அதிமுக என்று பேசுவதே வீண்வேலை என்பதுதான் உண்மை.
நேரடியாக பா.ஜ.க அரசு என்று சொல்லி விட்டுப் போகலாம். தினகரன் என்கிற போராளி என்று யாராவது சொல்லி என்னிடம் வந்தால் அவர்களுக்கு அன்பாய் குல்பி ஐஸ் வாங்கித் தருவேன். ஏனெனில் இதே பா.ஜ.க அவருக்கு ஆதரவாய் ஒரு சமிக்ஞை கொடுத்தால்கூட போதும் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து விடுவார். எல்லா பேட்டிகளிலுமே அவர் சமத்காரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, “நம் வீட்டு ஆட்கள் சரியில்லையென்றால் மற்றவர்களை குறை சொல்ல முடியுமா” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உண்மையில் அவருக்கும் அந்தக் குதிரையில் ஏறிப் பயணம் செய்யத்தான் ஆசை. சின்னம்மாவே வெளியே வந்தால்கூட சித்தப்பாவை மருத்துவமனையில் பார்க்கப் போவதற்கு முன்பு சித்து விளையாட்டு ஆடுபவர்களைத்தான் முதலில் போய்ச் சந்திப்பார். அது அவர்களுக்கு விதிக்கப்பட்டது. ஆக அந்தப் பக்கம் முடிந்தது கதை. நீதிமன்றங்களும் இந்த கதையில் பாத்திரங்கள் ஆன அம்சத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். ஒரு தரப்பை முற்றிலும் ஒழித்தாகி விட்டது. இன்னும் இருப்பது இன்னொரு தரப்பு.

செப்டம்பர் இருபதாம் தேதிக்குப் பிறகு திகார் முன்னேற்றக் கழகம் என அழைக்கப்படும் என தமிழிசை முன்னோட்டம் கொடுக்கிறார். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் இதுமாதிரி அவர் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்தைத் தன்கையில் வைத்துக் கொண்டு ட்ரெய்லர் விடும் அதிகாரத்தை ஒரு தரப்பின் கையில் கொடுத்திருக்கிறதோ என்கிற ஆழமான சந்தேகம் எனக்கு இருக்கிறது. திமுக சார்பில் சம்பந்தப்பட்ட மேக்ஸிம் வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்த வரலாற்றையும் கொஞ்சம் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாருங்கள் என்று இலவச டிப்ஸாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொரு வழக்கில் இருக்கவே இருக்கிறது அபராதம்.
கொஞ்சம் இரண்டு பக்கமும் இறங்கி அடிக்கிற உத்திக்கு பா.ஜ.க தயாராகி விட்டதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? கள விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மெல்ல அவர்கள் கிராமங்கள் தோறும் வலுவாகவே இறங்கிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை கிராமங்கள் தோறும் முன்னெடுப்பதைப் பார்த்தேன். விரைவில் அம்மன் கோவில் கூழ் ஊற்றும் விழாக்கள்கூட, ’ஸ்பான்சர்ட் பை’ என்று வந்தால்கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.
சிறு கடவுளர்களை ஒன்றிணைத்து பெரிய கடவுளர்களோடு ஒன்றிணைக்கும் வேலைகள் அடிக்கட்டுமானத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அதைத் தெரியாமல் இது பெரியார் மண் என்று சொல்லி எதிர்க்க வேண்டியவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தமும் மண்ணாய் போன வரலாற்றை எதிர்காலத்தில் படிக்கத்தான் போகிறோம்.
அரசியல் ரீதியிலாகவும் அடிக்கட்டுமான ரீதியிலாகவும் சில முன்னெடுப்புகள் இந்த ஆட்சியின் ஆசிகள் வழியாக நடந்து கொண்டிருக்கின்றன. கொடுப்பதற்கு எத்தனையோ பதவிகள் இருக்கின்றன இந்த பரந்த தமிழ்நாட்டு அரசாங்கத்தில். எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.
உண்மையில் நீங்கள் கிண்டலாக அவர்களைப் போட்டுச் சாய்த்து விட்டதாக நம்பிக் குதூகலிக்கலாம். ஆனால் ஆழமாக அவர்கள் வேர்விட ஆரம்பித்து விட்டார்கள். “நான் தூங்கும் போது என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிற பெண்ணையோ தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதைவிட சொல்வதற்கு என்னிடம் உதாரணங்கள் எதுவும் இல்லை.
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக