வெள்ளி, 8 செப்டம்பர், 2017

வைரமுத்து : அனிதா தற்கொலையில் ஒரு கொலையும் நடந்திருக்கிறது.

கேள்விக்குறியான ஜனநாயகம்: வைரமுத்துசென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நேற்று (செப்டம்பர் 7) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மொழிகாத்தான் சாமி' என்ற தலைப்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்குத் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவி அனிதா மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது, "அனிதா என்ற ஒரு இளம்பெண்ணின் தற்கொலையில் ஒரு கொலையும் நடந்திருக்கிறது. அந்தத் தற்கொலையில் நிகழ்ந்த கொலை சமூக நீதி. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எல்லா தேசிய இன மாணவர்களும் அந்தந்த மாநிலங்களின் உரிமையோடு கல்விபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எல்லாவற்றுக்கும் ஒன்று என்பது இந்த நாட்டில் எல்லா இனங்களுக்கும் ஒத்துவராது.
இந்தியாவில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான காற்றுதான் வீசுகிறது . ஆனால் இந்தியாவுக்காக ஒரே மூக்கில் யாரும் சுவாசித்துவிட முடியாது" என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குறித்த கேள்விக்கு, "கருத்தைக் கருத்தாலும், எழுத்தை எழுத்தாலும் எதிர்கொள்ள வேண்டும். எழுத்து, தோட்டாக்களால் எதிர்கொள்ளப்பட வேண்டியது அல்ல. கருத்துச் சொன்னவர் உயிர் வாங்கப்பட வேண்டியவர் அல்ல. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிற ஒரு தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது கேள்விக்குறி ஆகிவிடக் கூடாது"<> என்று கூறினார்.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் பழம்பெருமைகள் பாடமாக்கப்படும் என்று ஒரு செய்தி வந்திருந்தது. அதுகுறித்து கருத்து சொன்ன வைரமுத்து, "அச்செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்தியாவின் பெருமைகள் யாவை என்பதை மதவாத குழுக்கள் முடிவு செய்துவிடக்கூடாது. அறிஞர் குழு முடிவு செய்ய வேண்டும். இந்தியா என்பது வடக்கு என்ற ஒரு திசை மட்டுமல்ல. எல்லா தேசிய இனங்களுக்குமான ஆதிப்பெருமைகள் வரலாற்றுத் தளத்தில் தொகுக்கப்பட வேண்டும். இந்தியாவின் அழகே அதன் வேற்றுமைதான். ஒவ்வொரு நிறமும் தனித் தனியே ஓரழகு; வானவில்லோடு கூடினால் தான் பேரழகு. ஆனால், வானவில்லில் இடம் பெறும் எந்த நிறமும் தன் தனித்தன்மையை இழந்து விடுவதில்லை. அப்படித்தான் இந்திய கூட்டமைப்பில் கூடியிருக்கும் எந்தத் தேசிய இனமும் தன் மொழியை தன் கலாச்சாரத்தை இழக்கச் சம்மதிப்பதில்லை"
என்று தெரிவித்துள்ளார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக