வியாழன், 28 செப்டம்பர், 2017

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !


ஒருவேளை அனிதா தற்கொலை செய்யாமல் உயிரோடு இருந்து, ஏதாவது தொலைக்காட்சி நிலையத்துக்கு விவாதத்துக்கு வந்திருந்தால், என்ன நடந்திருக்கும். ”1176 மார்க் வாங்கிய நீ, நீட் தேர்வில் பாஸ் செய்யவில்லை என்பதால், அந்த மார்க் எப்படி வாங்கினாய் என்பதே சந்தேகமாக இருக்கிறது. நீ அன்ஃபிட்” என்று பேசி இருப்பார்கள்.
இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் உட்கார வைத்துத்தான் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துகிறார்கள். நீட் ஒரு தவிர்க்க இயலாத எதார்த்தம் என்ற கருத்தைத் திட்டமிட்டு பரப்புகிறார்கள். திணிக்கப்படுவதையெல்லாம் ஏற்றுக் கொள்வதென்றால், காவிரி முதல் இந்தி வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
இன்று அனிதாவுக்காக வாதாடுகிறவர்கள், நிர்மலா சீதாராமன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்கிறார்கள். முதல்முறையாகவா ஏமாற்றுகிறார்கள்? காவேரி பிரச்சனையில், பணமதிப்பழிப்பில், பாபர் மசூதி இடிப்பில், ஆதார் வழக்கில் எல்லாவற்றிலும் இதைத்தான் செய்தார்கள்.

இந்தத் தேர்வைத் திணிப்பதற்கு இவர்கள் கையாண்ட முறையே இவர்களுடைய தீய உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறது. மோடி அரசு மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?
மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஒரு வழிமுறையை முன்வைக்குமாறு தமிழக அரசிடம் கூறியது. ஆனால், அடுத்த விசாரணையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சலுகை காட்டமுடியாது  என்று மாற்றிப் பேசியது. இதை, ஏன் என்று கூடக் கேட்கவில்லை எடப்பாடி அரசு. இவர்களெல்லாம் சேர்ந்துதான் அனிதாவை நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்கள்.
ஆரம்பம் முதலே இதில் நடப்பது முறைகேடு மட்டும்தான். ஐ.மு.கூ. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை அல் தாமஸ் கபீர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. அதை எதிர்த்த சீராய்வு மனுவை மோடி அரசு தீவிரமாக நடத்தியது. அல் தாமஸ் கபீரின் அமர்வில், நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர் தவே என்ற நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.
அந்த அமர்வு, முந்தைய தீர்ப்பு தவறானது என்றும் அதனைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. விசாரிக்க வேண்டும் என்றாலும், அப்படி விசாரித்து முடிக்கும் வரை முந்தைய தீர்ப்புதான் அமலில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இடைக்காலமாக என்று சொல்லி நீட்டைத் திணிக்கிறது தவே தலைமையிலான அமர்வு.
இது அப்பட்டமான சட்டவிரோதம். பாபர் மசூதி விசயத்திலும் இப்படித்தான் நடந்தது. மசூதிக்குள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டிருந்தது. மசூதியை இடித்துச் சிலையை வைத்து ஒரு கொட்டகை போட்டு, அதுதான் கோயில் என்றார்கள். அதில் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது.
பிறகு அந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், மசூதியில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறுகிறது. பாபர் மசூதி இடிப்பில் இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்னவோ, அதுதான் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இழைக்கப் பட்டிருக்கிறது.
நோக்கம் கேடு, அமலாக்கம் முறைகேடு
நீட் தேர்வென்பது தவிர்க்க இயலாததென்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. நாங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து வந்திருக்கிறோம். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் கேட்டால் எங்களால் எப்படி எழுத முடியும் என்றும் அனிதாவைப் போல, அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு மதிப்பே கிடையாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த இரண்டு கேள்விகளின் நியாயத்தையும் ஏற்றுக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.சி.யும் மத்திய அரசும் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோருகிறது சி.பி.எஸ்.இ. மேற்கண்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே மதுரை நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறது உச்ச நீதிமன்றம். தடை விதித்தது மட்டுமல்ல. இனி நீட் தொடர்பாக என்னைத் தவிர யாரும் விசாரிக்கக் கூடாது என்று சட்டவிரோதமாக உத்தரவும் போடுகிறது.
நீதிமன்றத்தின் இந்த முறைகேட்டை மத்திய அரசோ, மாநில அரசோ கேள்விக்குள்ளாக்கவில்லை. இதற்கு விளக்கம் கேட்டால், இந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ”எங்களை ஏன் விமரிசிக்கிறீர்கள், உச்ச நீதிமன்றத்தை விமரிசிக்க வேண்டியதுதானே” என்கிறார்கள் பா.ஜ.க. வினர். நாம் உச்ச நீதிமன்றத்தையும்தான் விமரிசிக்கிறோம். உடனே, உச்ச நீதிமன்றத்தையே விமரிசிக்கிறான், தேசத்துரோகி என்பார்கள்.
இவர்கள் எல்லா முறைகேடுகளையும் செய்வார்கள். அந்த முறைகேடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினால், உடனே தேசத்துரோகி  என்பார்கள். இதுதான் காஷ்மீரில் நடந்தது. குறைந்தது 10 காஷ்மீரையாவது இந்தியாவில் உருவாக்காமல் இவர்கள் ஓயப்போவதில்லை.
நீட் எதற்காக வந்தது தெரியுமா?
அனிதாவின் மரணத்தை பற்றி பேசும் போது,  இந்த நீட் என்ற தேர்வு எதற்காக வந்தது என்ற பின்புலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பெறாத,  தகுதி இல்லாத பணக்கார மாணவர்கள் லட்சம், கோடி என்று பணம் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் ஆகி விடுகிறார்கள். சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் மருத்துவர்களின் தரம் வீழ்கிறது. அதைக் காப்பாற்றுவதற்கு  இப்படி ஒரு தேர்வு தேவை என்று சொல்லித்தான் இது அறிமுகப் படுத்தப்பட்டது.
கொசுவை ஒழிக்க வேண்டும் என்றால், சாக்கடையை ஒழித்திருக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மெடிக்கல் சீட்டை விற்பதற்கு ஒரு தனியார் கல்லூரி இருப்பதால்தானே பணக்காரன் அதை வாங்க முடிகிறது. அதைத் தடுப்பதற்கு மருத்துவக் கல்லூரிகள் தனியாரிடம் இருக்க கூடாது என்று முடிவு எடுத்திருக்கலாமே.
தனியார்மயக் கொள்கை வந்த பிறகுதான் தனியார் மருத்துவக் கல்லூரி வந்தது. அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருப்பதால் தகுதி இல்லாதவ மருத்துவர் கூட்டம் அதிகமாகிவிட்டது. தரமானவர்கள் வருவதற்கான வாய்ப்பை இந்தத் தனியார் கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லி, தரம் என்ற பெயரில்தான் தனியார் மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினார்கள். ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் யோக்கியதை என்ன?
கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகள் பாழுங்கிணற்றில் செத்துக் கிடந்தார்கள். மருத்துவராகவும் நோயாளியாகவும் மாணவர்களையே நடிக்க வைத்து, அங்கீகாரம் வாங்கியிருக்கிறது அந்த கல்லூரி நிர்வாகம். எம்.ஜி.ஆர். மருத்தவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள்.
மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் கேதன் தேசாயின் அறையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் 1500 கோடி ரூபாய் பணமும் சில நூறு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. எதற்காக அந்தப் பணம் அவருக்கு கிடைத்தது? எஸ்.வி.எஸ். கல்லூரி மாதிரி இந்தியா முழுவதும் இருக்கின்ற தகுதி இல்லாத, தரம் இல்லாத, அடிப்படைக் கட்டுமானம் இல்லாத, வாத்தியார் இல்லாத, கேவலமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கியதில்தான் அந்தக் காசு வந்தது. அவர் மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது. ஆனால், என்ன நடந்தது? அவர் குஜராத் மருத்துவ கவுன்சிலின் தலைவராக, மோடி முதல்வராக இருந்த காலத்தில் 2013 – 2014 நியமிக்கப்பட்டர். பிறகு, குஜாராத் மருத்துவ கவுன்சில் அவரை அகில உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்தது.
இதுதான் இவர்களின் யோக்கியதை. இவர்கள் தரம் பற்றிப் பேசுகிறார்கள். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை கேதன் தேசாய், மோடி, கீதாலட்சுமி, விஜயபாஸ்கர் ஆகியோரை வெளியேற்றுவதிலிருந்து அல்லவா தொடங்க வேண்டும். இவர்களோ அனிதாவிற்கு மரண சீட் கொடுப்பதில் இருந்து தொடங்குகிறார்கள்.
மாணவன் தகுதியாக இல்லை என்பது பிரச்சனையே இல்லை. உங்களுடைய அமைப்பு,  அதிகாரிகள் – நீங்கள்தான் தரம் அற்றவர்கள். தகுதி அற்றவர்கள்.  எங்கள் பிள்ளைகளுக்குத் தகுதி இருக்கிறதா என்று பேசக்கூட அருகதை இல்லாதவர்கள் நீங்கள். பணக்காரர்களை ஒழுங்குபடுத்துகின்றேன் என்று தொடங்கிய இந்த சதித்திட்டம், ஏழை அனிதாக்களை வெளியேற்றுவதில் வந்து முடிந்து இருக்கிறது . காஸ் மானிய ஒழிப்பும் இப்படித்தான் நடக்கிறது. ஒப்பிட்டுப் பாருங்கள்.
தரமான மருத்துவம் – யாருக்கு?
மருத்துவத்தினுடைய தரத்தை உயர்த்த வேண்டும்  என்கிறார்கள். இது யாருடைய பிரச்சனை? நோயாளிகளின் பிரச்சனை. எங்களுக்கு நீட் தேர்வில் பாஸ் பண்ணிய தரமான மருத்துவர் வேண்டும் என்று நோயாளிகள் கேட்டார்களா?
அரசு மருத்துவமனைகளே இல்லை, இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இல்லை என்பதுதான் மக்கள் சந்திக்கும் பிரச்சினை. இருக்கிற மருத்துவமனைகளையும் தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று கூறுகிறது மோடி அரசு. இன்சூரன்ஸ் இல்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்பது தான் இந்த அரசாங்கத்தின் கொள்கை. அப்படியானால், யாருக்காக  இவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்குகிறார்கள்?
அனிதா படித்து முடித்து டாக்டரானால், தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன் உண்டு. இன்று நீட் தேர்வு எழுதி சீட் கிடைத்து இருப்பவர்களால் மக்களுக்கு என்ன பயன்? இவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு போகலாமா,  அல்லது அமெரிக்கவிற்கு விமானம் ஏறலாமா என்று பார்ப்பார்கள். இதுதான் அவர்கள் நோக்கம். மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்ற நோக்கம் கிடையாது. இந்த மருத்துவ அமைப்பே அப்படி இல்லை. அதனால் தரம் என்பது வெற்றுப் பேச்சு.
தரமான மருத்துவமனை என்று சொல்லப்படுகின்ற கார்ப்ரேட் மருத்துவமனைகள் எப்படி நடக்கின்றன? ஒரு மருத்துவமனையில் உள்ள நியூராலாஜி, கார்டியாலஜி போன்ற துறைகள் தனித்தனியே ஏலம் விடப்படுகின்றன. பஸ்ஸ்டாண்டு கக்கூஸ் மாதிரி இவற்றை ஏலம் எடுக்கும் டாக்டர்கள், ஏலத்தொகையை கார்ப்பரேட் மருத்துவமனைக்குக் கட்டிவிட்டு,  அதற்கு மேல் சம்பாதிப்பதற்கு நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஏழைகளை விடுங்கள், காசு கொடுத்தும் தரமான மருத்துவம் இல்லை என்று பணக்கார்களே புலம்பவில்லையா? ஐ.சி.யு.வில் பிணத்தை வைத்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் சந்தி சிரிக்கவில்லையா?
இவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்பு, இவர்களுக்கே பயன்படாத அளவுக்கு, இவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இருப்பதால்தான் தரம் என்ற ஒன்று இன்னமும் இங்கே இருக்கிறது. சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், இந்த நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார்கள். இந்த நீட் தேர்வுதான் விதியென்று ஆகி விட்டால், சமூக அக்கறை உள்ள மனிதர்கள் யாரும் மருத்துவத் துறையில் இருக்க மாட்டார்கள்.
அதனால்,  தர நிர்ணயம் என்பதை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம். அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதைப் பேசும் அருகதை உனக்கு இல்லை என்று நாம் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்லும் வழிமுறையின் மூலமாக எந்த நாடும் மருத்துவ துறையின் உச்சத்தை எட்டியது இல்லை.
அமெரிக்காவுக்குப் பக்கத்தில இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. அது இன்று உலக அளவில் சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடு.  அமெரிக்காவில் அறிவியல் முன்னேறி இருக்கலாம். ஆனால், அமெரிக்க ஏழைகள் கியுபாவில் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ள அலைகிறார்கள். கியூபாதான் மருத்துவத்தில் உயர்ந்து நிற்கின்றது. திறமையிலும் அதுதான் உயர்ந்து நிற்கின்றது. ஆகவே நீட் தேர்வை எதிர்க்கும் நாம் இயல்பாகவே மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.
நீதிபதிகளின் தரத்துக்கு நீட் உண்டா?
மருத்துவத்தின் தரம் பற்றி நீதிமன்றம் பெரிதும் கவலைப்படுகிற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தரம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? காட்டாமணக்கை அகற்றுவது,  திரையங்கில் ஜனகணமன பாடினால் எழுந்து நிற்பது முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் முடிவு செய்யும் இவர்களுடைய தகுதி எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தேர்வு இருக்கிறது. இப்போது அந்தத் தேர்வையும் நீட் மாதிரி ஒரு தேசியத் தேர்வு ஆக்குகிறார்கள். அதில் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணாம். இது ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீதிபதியாக்கும் ஏற்பாடு. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகளின் குழுவால் முடிவு செய்யப்படுகின்றர்கள்.  அவர்களுடைய  தரத்தை எங்கே விசாரிப்பது?
சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சிவில், கிரிமினல் சட்டம் தெரியாது. சர்வீஸ் லா மட்டும்தான் தெரியும் என்று அவரே சொல்லியிருக்கிறார் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜிவ் தவான் என்ற மூத்த வழக்கறிஞர். நீதிபதிகளின் திறமை, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யார் பரிசீலிப்பது? குமாரசாமி, தத்து போன்றோர் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கெஹெரின் மகன் இலஞ்சம் கேட்டதாக அருணாசால பிரதேச முதல்வர் கலிகோ புல் தனது தற்கொலை கடித்தில் எழுதி உள்ளாராம்.
இவர்களெல்லாம் சேர்ந்து அனிதாவிற்குத் தரம் நிர்ணயிக்கிறார்களா?  ம.பி. மாநிலத்தின் வியாபம் ஊழல் ஒரு பெரிய கிரிமினல் துப்பறியும் நாவல் மாதிரி போகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் வரிசையாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த பா.ஜ.க. அரசு தரம் பற்றிப் பேசுவதா?
அனைத்திந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் என்பதால், அதைக் கண்காணிக்க  நீதிமன்றம் ஒரு கமிட்டி போட்டது. அதன் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா. மெடிகல் கவுன்சிலால் தரமற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்ட 26 மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் லைசன்ஸ் கொடுக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி, துணை நடிகர்களையே டாக்டராகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து அங்கீகாரம் கேட்டது. இதை ஊழல் மருத்துவ கவுன்சிலாலேயே பொறுக்க முடியாமல் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், இத்தகைய மோசடி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.
நாமக்கல் கொள்ளைக்குப் பதில் நீட் கொள்ளை
மேற்கண்ட பிரச்சினைகளையெல்லாம் நீட் தேர்வு தீர்த்து விடுமா? நீட் தேர்வு தரத்தைக் கொண்டு வரவில்லை. கட்டணக் கொள்ளையைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கின்றது. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரியில் 5 லட்சம் என்பது அரசு நிர்ணயித்த கட்டணம். அதை  11 லட்சமாக ஆக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போனால், 11 லட்சம் கட்டு என்று சொல்கின்றது உச்ச நீதிமன்றம்.  நாடு முழுவதும் ஒரே தரத்தை கொண்டு வருகிறார்களாம். ஆனால், ஒரே கட்டணம் கிடையாதாம்.
தனியார் கல்லூரிகளின் கட்டணத்தில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்பது மோடி உருவாக்கிய நிதி ஆயோக்கின் முக்கியமான பரிந்துரை. தனியார் கொள்ளைக்கு வசதி செய்து கொடுப்பதுதான் இவர்கள் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐ.ஐ.டி. யில் சேருவதற்கு இட்ஜீ (IIT – JEE) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அது ஆண்டுக்கு 24.000 கோடி புரளும் தொழில். இனி ஒவ்வொரு துறைக்கும் இவர்கள் கொண்டுவரக் கூடிய நுழைவுத் தேர்வுகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் புழங்க போகின்றது.  இது புதியதொரு தனியார் கொள்ளை.
நீட்டுக்கு முன்னால் இருந்தது நாமக்கல் கறிக்கோழிப் பள்ளி. அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தயார் செய்தார்கள். இந்த நீட் பயிற்சிப் பள்ளிகளில் ஸ்டிராய்டு ஊசி போட்டு, அதைவிடக் குறுகிய காலத்தில் பயில்வான்களைத் தயார் செய்வதாக கூறுகிறார்கள். இது நாமக்கல்லைவிட மோசமானது. நுழைவு தேர்வு என்பதே அறிவியல் பூர்வமானதல்ல.  உண்மையில் அதுதான் தரத்தை அழிக்கக்கூடியது.
மணற்கொள்ளை போல இது மருத்துவக் கொள்ளை
இவர்கள் தமிழ்நாட்டை ஏன் வட்டமிடுகிறார்கள்?  தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தவிர, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி.  மோடியின் குஜராத்தில் மொத்தமே 6 அரசு மருத்துவக் கல்லூரிகள்தான்.  தமிழகம் போல அரசு மருத்துவக் கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.   சிறப்பு மருத்துவர்களை உருவாக்கும் உயர்கல்விக்கான இடங்களும் இங்கு தான் அதிகம் உள்ளன.  இவையனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம்.  மணல் கொள்ளையைப் போன்ற இந்த மருத்துவக் கொள்ளையை நடத்துவதற்கான கொல்லைப்புற வழிதான் நீட்.
அரசியல் சட்டத்தின் பிரிவு 35ஏ-வின்படி காஷ்மீரில் பிறக்காத யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. இந்தத் தடையை  நீக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் சொத்து வாங்க முடியவில்லை என்பது யார் பிரச்சினை?. அதானி, அம்பானிகளின் பிரச்சினை. அதுபோலத்தான் இதுவும். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையைக் கொள்ளை அடிக்கத்தான் இந்த ஏற்பாடு.  எல்லா நாடுகளிலும் சொத்து வாங்குவதற்காக உலகமயம், உலகத்தரம் என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். தமிழகம் போன்ற மாநிலங்களைக்  கொள்ளையிடுவதற்காக இவர்கள் தேசியம், தேசியத் தரம் பேசுகிறார்கள். இதுதான் நீட் ரகசியம்.
அனிதா ஏன் மருத்துவராக வேண்டும்?
மருத்துவர்களிடம் மக்களாகிய நாம்  எதிர்பார்ப்பது என்ன? தரமா?  ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் தரமான வைத்தியம் கிடைப்பதற்கா  நம் வரிப்பணத்தில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கின்றன?  நமக்குத் தேவை மக்களுக்குத் தொண்டாற்றும்  மருத்துவர்கள் .
”நீட்”டுக்கு முன்னால் அரியலூர் மாவட்டத்திலிருந்து 15 பேர் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள்,  நீட் வந்த பிறகு ஒருவர்கூட இல்லை என்கிறார் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கரன்.  நாம்  சேவையை அளவுகோலாக வைத்தால், அனிதாவைப் போல நூற்றுக்கணக்கானவர்களை மருத்துவர்களாக்கலாம்.  அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் இடம் என்று ஏன் சட்டம் இயற்றக் கூடாது? மக்கள் வரிப்பணத்தில் நாம் உருவாக்கும் டாக்டர் அமெரிக்காவுக்குப் போவதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?
தரம் வேறு, சேவை மனப்பான்மை வேறு கிடையாது. காசு, காசு என்று அலைபவன் எந்த நாட்டிலும் சிறந்த விஞ்ஞானியாக இருந்ததில்லை.அரசு மருத்துவமனைகளில் பல அரிதான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. பணத்தாகம் கொண்டவன் அரசு மருத்துவமனையில் அத்தனை அரிய முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு அறிவியல் தாகம் வேண்டும். சேவை மனப்பான்மை வேண்டும்.
நாம் ஏன் அனிதா மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறோம் ? அவள் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்.  மக்களின் துன்ப துயரங்களை நெருக்கமாக அனுபவித்து அறிந்தவள். அவள் மருத்துவரானால் அப்பகுதி மக்களுக்கு சேவை செய்வாள். இப்படிப்பட்டவர்கள் மருத்துவராகும்போதுதான் பின் தங்கிய மாவட்டங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும்.
இது மெடிக்கல் சீட் கிடைக்காத ஒரு சிறுமியின் பிரச்சினை மட்டுமல்ல.  பல கோடி மக்களின் மருத்துவம் பற்றிய பிரச்சனை. அம்மக்களை மருத்துவ  சேவையே கிடைக்காமல் வெளியேற்றுவது பற்றிய பிரச்சனை.
பணிய மறுப்போம்
அனிதாவின் தற்கொலைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த அநீதியைச் சகித்துக்கொண்டு அவளால் வாழ முடியவில்லை என்பதுதான்  அந்த அர்த்தம். சகித்துக்கொண்டு வாழ்வதற்கு சமீபத்திய உதாரணம் தேரா சச்சா சௌதா.
வல்லுறவு குற்றத்துக்காக 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராம்ரகீம் சாமியாரைப் பற்றிய புகார் 2002-இலேயே வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டே பேர்தான் தைரியமாக வெளியே சொல்வதற்கு முன்வந்தார்கள், மற்ற பெண்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாகப் பாலியல் வல்லுறவை சகித்துக் கொண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.
நீட் என்பது அப்படி ஒரு வன்முறைதான்! பிற மாநில மக்கள் இதன் பரிமாணம் புரியாமல் இருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு, மாடு விற்கத்தடை, மாட்டுக்கறி உண்ணத்தடை, இந்தி திணிப்பு,  ஜி.எஸ்.டி. ஆகிய அனைத்தும்  நீட் போன்ற நடவடிக்கைகள்தான். இப்படி வன்முறை மூலம் அச்சுறுத்தி நம்மைப் பணிய வைக்க முடியும் என்று மோடி அரசு கருதுகிறது.
அந்தப் பெண்களை நினைத்தபடியெல்லாம் அடக்கியாள முடியும் என்று ராம் ரகீம் எண்ணியதைப் போலத்தான் மோடி அரசும் நம்மைப் பற்றி எண்ணுகிறது. தமிழக மக்கள் அ.தி.மு.க. வினரைப் போன்ற சுயமரியாதையற்ற புழுக்கள் அல்ல என்பதைக் காட்டவேண்டும்.
குஜராத் மாடல் என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். அந்த குஜராத் மாடல் என்ன?  அரசுக் கல்வி, அரசு மருத்துவம் கிடையாது என்பதும், எல்லாம் தனியார்மயம் என்பதும் உனாவிலே தலித்துகளைப் பகிரங்கமாகக் கட்டி வைத்து அடித்த பார்ப்பன பாசிச வன்முறையும்தான் குஜராத் மாடல்.
அந்த குஜராத் மாடலுக்கு எதிரானதுதான்  தமிழ்நாட்டு மாடல். குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்றால், தமிழகம் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும்  சோதனைச் சாலை.
எல்லா பாளையக்காரர்களும் அடிபணிந்த பிறகும்,  பணிய மறுத்த கட்டபொம்மனை நினைவுபடுத்துகிறாள் அனிதா.  தூக்குமேடையை நோக்கி நடந்து சென்ற கட்டபொம்மனின் கண்களில் எள்ளளவும் அச்சமில்லையென்றும், இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களை இகழ்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தபடி அவன் நடந்து சென்றதாகவும் எழுதுகிறான்,  தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஆங்கிலேய அதிகாரி.
அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள்.  அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.
அது தூக்கு தண்டனை, இது தற்கொலை என்பது உண்மைதான். எனினும், சுயமரியாதையுள்ள இருவரும் நமக்கு விடுக்கும் செய்தியென்னவோ, ஒன்றுதான்.
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.
_____________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக