சனி, 30 செப்டம்பர், 2017

மோடியை மாற்றிவிட்டு புதியவரை நியமிக்க ஆர் எஸ் எஸ் முடிவு?

சிறப்புக் கட்டுரை:  மோடியை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறதா? எதிர்ப்பதாக நடிக்கிறதா?மின்னம்பலம் : ஆரா : எதிர்ப்பே இல்லாதவர் என்று கருதப்பட்டு வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் இருந்தே சமீப நாள்களாகப் புறப்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறதா என்ற கேள்வி தேசிய அளவில் இப்போது விவாதமாகியிருக்கிறது.
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படையாக தாக்கியிருக்கிறார். ‘இந்தியாவைச் சரிவுக்கு இட்டுச் செல்கிறார்கள் மோடியும், ஜெட்லியும்’ என்று சின்ஹா கூற, பதிலுக்கு ஜெட்லி, ‘வேலை தேடும் 80 வயது முதியவர்’ என்று சின்ஹாவைத் தாக்கினார்.
இந்த நிலையில், ஏற்கெனவே மோடிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிவரும் பீகார் பாஜக எம்.பியும் பிரபல நடிகருமான சத்ருஹன் சின்ஹா, ‘நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் பற்றி மோடி நாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சத்ருஹன் சின்ஹா, ‘உண்மையில் பிரதமர் மோடிக்கு நடுத்தர குடும்பத்தினர், வணிகர்கள், சிறிய தொழில்களில் ஈடுபடுபவர்கள், நாடு முழுவதும் குறிப்பாக விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும் குஜராத் மாநில மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதை நிரூபிக்கும் நேரம் இது. பத்திரிகையாளர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். நிச்சயமாக மோடி இதைச் செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவரும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவருமான துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சமீபத்தில், ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் சென்னை சர்வதேச மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசினார். ஏற்கெனவே பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டாடிய குருமூர்த்தி, இப்போது தனது கருத்தைத் தலைகீழாக மாற்றிக்கொண்டார்.
“பணமதிப்பழிப்பு, வங்கிக் கடன் தொடர்பான சட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. அவசர கதியில் செய்யப்பட்ட மாற்றங்கள் இவை.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அதன் பலன்கள் கிடைக்கவில்லை. உயர் மட்ட நிர்வாகத்தில் ரகசியக் காப்பு இல்லாததால் கறுப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள் எளிதாகத் தப்பிவிட்டனர். உயர் மதிப்பு நோட்டுகளைத் திரும்பப் பெற்றதால் முறைசாரா துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறை 90 சதவிகித அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. எனவே, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளது” என்று மத்திய அரசை மிக வெளிப்படையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு பாஜக கூடாரத்தில் இருந்தே வெளிப்படையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைநகரமான நாக்பூர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் அனைவரும் பாஜகவின் வழிகாட்டி ஆர்.எஸ்.எஸ். என்றே பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே இந்த ஆட்சியோடும் பிரதமர் மோடியோடும் பல வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. நில அபகரிப்பு சட்டம் என்று குறிப்பிடப்படும் நில கையகப்படுத்தும் சட்டத்தில் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் விவசாயப் பிரிவு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ்ஸில் தனிநபர் துதி என்றைக்கும் இருந்ததில்லை. சங்கம் என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்படுவோம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை விதி. ஆனால், மோடி பிரதமர் ஆனவுடன் தனது தனிப்பட்ட அடையாளத்தையும், ஆளுமையையும் பல மடங்கு பெருக்கிக்கொண்டார். பாஜக அரசு என்பதைக் கூட மறைத்து மோடி அரசு என்று பல இடங்களில் விளம்பரப்படுத்தினார். பதவிக்காக பாஜகவுக்கு வந்த சிலரும், ஏற்கெனவே பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த சிலரும் இந்த மோடி புராணத்தை முன்னெடுத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குக் கடுமையான கருத்து வேறுபாடு உண்டு.
அது கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேச முதல்வர் தேர்வு விவகாரத்தில் வெளிப்படையாக தெரிந்தது. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பின் தனது கேபினட்டில் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹாவை உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்தார் பிரதமர் மோடி.

கடந்த மார்ச் 17ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வர் மனோஜ் சின்ஹாதான் என்று டெல்லியில் இருந்து முடிவாகி, மனோஜ் சின்ஹாவின் சொந்த மாவட்டமான கிழக்கு உத்தரப்பிரதேசத்திலுள்ள காசிபூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் குறிப்பு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சிக்னலை அடுத்து முக்கிய போலீஸ் அதிகாரிகள் மனோஜ் சின்ஹாவைச் சந்தித்து மரியாதை செய்வதற்காகப் புறப்படத் தயாராகினர். மனோஜ் சின்ஹாவுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்த போலீஸ் படையினரும் சீருடையோடு தயாராக இருந்தனர். ஆனால், நாக்பூரில் இருந்துவந்த உத்தரவால் மார்ச் 18 மாலை கோரக்பூர் எம்.பியான ஆதித்யநாத் யோகி உ.பி. முதல்வராக அறிவிக்கப்பட்டார். தனி நபரைவிட அமைப்புக்கே பலம் அதிகம் என்று மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். உணர்த்திய சம்பவம் இது.

வெளிப்படையாக தெரிந்த இன்னொரு சம்பவம்... பிரதமர் மோடியின் கனவு அமைப்பான நிதி ஆயோக் துணைத் தலைவரான அரவிந்த் பனாகாரியா சத்தமே இல்லாமல் ராஜினாமா செய்த விவகாரம். இதை தேசிய ஊடகங்களோ, மாநில ஊடகங்களோ பெரிய அளவில் விவாதப் பொருளாக்கவில்லை. அரவிந்த் பனாகாரியா, ‘கார்ப்பரேட்டின் கையாள், வேலைவாய்ப்புகளின் கொலைகாரர்’ என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான சுதேசி ஜாக்ரான் மஞ்ச் என்ற அமைப்பின் அமைப்பாளர் அஸ்வனி மகாஜன் மோடிக்குக் கடிதம் எழுதுகிறார். ‘அரவிந்த் பனாகாரியாவைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் வலியுறுத்துகிறார். இந்த அழுத்தங்களின் விளைவே ஆகஸ்ட் மாதம் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார் அரவிந்த் பனாகாரியா. ஆனால், இதெல்லாம் ஊடகங்களால் விவாதம் ஆக்கப்படவே இல்லை என்பதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது என்பதையும் மறுக்க முடியவில்லை.
மோடி மற்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களைவிட கரிஷ்மா எனப்படுபவர் புகழ் நிறைந்தவராக இருக்கிறார். அவரிடம் இதுவரை இந்திய வலதுசாரி அரசியல்வாதிகளில் யாருக்கும் இல்லாத அளவுக்கு கவர்ச்சி இருக்கிறது. அவரைப் பிரதமர் ஆக்கினால் நமது திட்டங்களை எளிதில் அமல்படுத்த முடியும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரம்பகால அஜெண்டா. அதனால்தான் பழம் தின்று கொட்டை போட்ட அத்வானியையே கிடப்பில் போட்டு, அத்வானி ரத யாத்திரையின்போது அவருக்கு மைக் பிடித்த மோடியை இந்திய அளவில் ப்ரமோட் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால், மோடி தன்னை உணர்ந்துகொண்டதும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தாண்டிய மோடியிசம் என்ற ஒரு பதத்தை சமீபகாலமாக உருவாக்கிக் கொண்டார். உலக வலதுசாரி தலைவர்களில் தலையாயவராக தன்னை காட்டிக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை வார்த்திருந்தாலும், அதையும் தாண்டிய தனது தனிப்பட்ட பிம்பத்தை நிலைநிறுத்த மோடி மெனக்கெடுகிறார். அதற்காக பொருளாதார ரீதியாக நிறைய செலவு செய்கிறார். இதையெல்லாம் தனது அமைப்பை மீறிய செயல் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது.
ஆனால், மோடிக்கு எதிரான தனது கருத்துகளைப் பொது வெளியில் வைத்தால் அது பாஜகவுக்கு இழப்பாகிவிடுமோ என்று அஞ்சும் ஆர்.எஸ்.எஸ். மெல்ல மெல்ல கட்சிக்குள் மோடியை மதிப்பு இழக்க வைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. மோடி என்ற தனி நபரா அல்லது அமைப்பா என்று பார்த்து அமைப்பை முன்னிறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்.
மீண்டும் மோடி ஆட்சி என்பது மோடியின் கொள்கை. மீண்டும் பாஜகவின் ஆட்சி என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை.
நேற்று அத்வானியை தூக்கிப்போட்டு மோடியை முன்னிலைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். நாளை மோடியை தூக்கிப் போட்டுவிட்டு இன்னொருவரை முன்னிலைப்படுத்த தயார் ஆவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் மோடியிடம் அது நடக்குமா என்ற கேள்வியும் பெரிதாக எழுந்து நிற்கிறது.
தொடர்புக்கு... aara@minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக