சனி, 2 செப்டம்பர், 2017

அனிதாவின் தற்கொலை - சமூக அநீதிக்கான சாவோலை: கி.வீரமணி

அரியலூர் அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்படுவதற்குமுன்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:அரியலூர்ப் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்னும் மாணவியின் தற்கொலை அதிர்ச்சிக்குரியது, ஆழ்ந்த துயரத்திற்குரியது.
;தற்கொலை ஏற்புடையது அல்ல. என்றாலும்......தற்கொலையை ஏற்க முடியாது என்றாலும் தற்கொலைக்கு அனிதா விரட்டப்பட்டதற்கான காரணம் என்ன-? பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு 2007 முதல் கிடையாது; மாநிலக்கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரித் தேர்வு  நடைபெற்றுவந்திருக்கிறதுஇதன்காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமானர்கள் டாக்டர்கள் ஆனார்கள்! எவ்வளவு பெரிய சமூகப்புரட்சி இது!

;2016ஆம் ஆண்டைப் பாரீர்
;2--016 ஆம் ஆண்டுத் தேர்வில் நுழைவுத் தேர்வின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு எழுதிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் சாதனை அசாதாரணமானது.

2016 ஆம் ஆண்டில் திறந்த போட்டியில் 884 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தனர். அவர்களுள் பிற்படுத்தப்பட்டோர் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159 , இஸ்லாமியர் 32, தாழ்த்தப்பட்டோர் 23, மலைவாழ் மக்கள்1, உயர்ஜாதியினர் 68.

பார்ப்பனர் கண்களில் உறுத்தல்

இதுதான் உயர்ஜாதிக்காரர்களின் கண்களை கருவேள் முள்ளாக உறுத்தியிருக்கிறது. அதனுடைய சதித்திட்டம் தான் நீட் தேர்வு. சிபிஎஸ்இ கல்வி திட்டத்தின் அடிப்படையில், சிபிஎஸ்இ கல்வியாளர்களே தயார் செய்த கேள்வித்தாள் யாருக்குச் சாதகமாக இருக்க முடியும்? அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. கடந்தாண்டு 30 இடங்களே பெற்ற சிபிஎஸ்இ-யில் படித்தவர்கள், இவ்வாண்டு 1310 இடங்களைப் பெற்றுள்ளனர். நீட்டினால் ஏற்பட்ட ஜம்பர் பரிசு இது. 

பிளஸ் 2  தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவால் நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் தான் பெற முடிகிறது என்றால், அதற்குக்  காரணம் அனிதா அல்ல; நீட் என்றால் என்னவென்று அறியாத  மாணவர்களிடம் அதை வலுக்கட்டாயமாகத் திணித்த குற்றவாளிகள்தான் அதற்குப் பொறுப்பு. அந்தக் குற்றவாளி மத்திய அரசல்லவா, இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லவா!

இதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து, ஓர் அமைப்பையே இதற்காக உருவாக்கி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது. ஒரு கோடி கையொப்பம் பெறும் இயக்கத்தையும் நடத்தியது.

அன்று அழைப்புக் கொடுத்தோமே, என்ன செய்தீர்கள்-? 

நீட் தேர்வு வந்தால் மேல்தட்டு மக்கள்தான் இடங்களை கபளீகரம் செய்வார்கள்; களத்துக்கு வாருங்கள் போராட வாருங்கள். வரத் தவறினால், நீட்டால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். மாநில மத்திய அரசுகளும், நீதிமன்றமும் தான் பொறுப்பு என்று எச்சரித்தோம், எச்சரித்தோம். நாம் எச்சரித்தப்படி தான் இப்பொழுது மிகப்பெரிய சமூக அநீதி நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

முதல்வருக்கு நேரில் நாம் வைத்த வேண்டுகோளும் மசோதா நிறைவேற்றமும்!

அன்றைய தமிழக முதல் அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று, நீட்டுக்கு விலக்குக் கோரும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எழுத்து மூலம் வேண்டுகோள் வைத்தது திராவிடர் கழகம். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் அதற்கான இசைவைத் தராத மத்திய பிஜேபி அரசு அல்லவா குடியரசுத் தலைவரின் பார்வைக்கே கொண்டு செல்லாத குற்றத்தைச் செய்தது. எத்தனை எத்தனை முறை தமிழக முதல் அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பிரதமரைச் சந்தித்தனர். உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது ஏன்?

தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால் நடந்தது என்ன? அழுத்தம் சரியாகக் கொடுக்கப்பட வில்லையா? அழுத்தம் கொடுத்தும், சமூகநீதிக்கு எப்பொழுதுமே எதிரான கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான மத்திய பிஜேபி ஆட்சி வேண்டுமென்றே சட்ட சம்மதம் அளிக்க மறுத்தது என்றுதானே கொள்ள வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நிபந்தனை வைத்திருக்க வேண்டாமா?

குடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஜேபியை ஆதரிக்க நீட் விலக்கு என்பதை நிபந்தனையாக வைக்க வாய்ப்பு இருந்தும், அதனைப் பயன்படுத்தாதது ஏன்? மடியில் கனமா? வேறு என்ன காரணம்? தொங்கு சதையாக மாறியது ஏன்?
சமூகநீதியில் உண்மையில் அக்கறை இருக்குமானால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டுமே அஇஅதிமுக அரசு.

தமிழ்நாட்டின் கொந்தளிப்பைப் புரிந்து கொண்டு, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசு ஓராண்டு விலக்குக்கோரி அவசரச் சட்டத்தைக்கொண்டு வந்தால், மத்திய அரசு அதற்கு இசைவு தரும் என்று சொல்லவில்லையா? மற்றோர் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அதனை வழிமொழியவில்லையா?

மத்திய அரசு பல்டி அடித்தது ஏன்?

அதன்படி தமிழ்நாடு அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்ததா இல்லையா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது தமிழக அரசின் அவசரச் சட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்கும் என்று ஒரு வாரத்திற்கு முன் உச்சநீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்த அதே மத்திய பிஜேபி அரசு, அடுத்த வாரம் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது- எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று திடீர் பல்டி அடித்தது ஏன்?

பார்ப்பனர்களின் அழுத்தம் தானே!

உயர்ஜாதிப் பார்ப்பனர்களின் அழுத்தமா? இப்பொழுது இல்லை என்றால் வேறு எப்பொழுது? என்ற அவர்களின் அழுத்தம்தான் அதன் பின்னணியில் என்பதைப்புரிந்து கொள்ள முடியாதா?

இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தான் எப்படி நடந்து கொண்டுள்ளது? 2013 இல் இதே உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த அமர்வு  நீட் தேர்வு கூடாது, மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் வேலையில்லை என்று சொன்னதா இல்லையா?

இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் ஏன்?ஏன்?

இப்பொழுது அதே உச்சநீதிமன்றம் தலைகீழாக மாற்றி உத்தரவிட்டது ஏன்? 2013இல் ஒரு சட்டம், 2017 இல் வேறொரு சட்டமா? ஏனிந்த இரட்டை நிலை?

மாநிலக்கல்வியில் படித்தவர்கள், நீட் தேர்வு எழுதியர்களுக்கிடையே பாதிப்பு இல்லாமல் ஒரு சமரச திட்டத்தோடு வாருங்கள் என்று சொன்ன உச்சநீதிமன்றம், அவ்வாறு செய்யத் தவறியதற்கான காரணத்தைக் கேட்காதது ஏன்? சுருக்கமாகச் சொன்னால் அரசுகளும், நீதிமன்றமும் நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டன.

மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் டாக்டர் ஆகக்கூடாதா?

சட்டமும், நீதியும் மேல்தட்டு மக்களுக்குத்தானா?, மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் மருத்துவர் ஆகக் கூடாதா? அன்று மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை! இன்றோ மருத்துவக்கல்லூரியில சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை.

நிபந்தனைகளின் தன்மைதான் வேறே தவிர, பஞ்சமர்களும், சூத்திரர்களும் டாக்டர் ஆகக் கூடாது என்ற அடிப்படை நோக்கத்தில் மட்டும் வேறுபாடு கிடையவே கிடையாது.

மூட்டைத் தூக்கும் தொழிலாளி, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மகள் அனிதாவின் தற்கொலை புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

மாணவர்களின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில்தான் இருக்கின்றன. தங்களின் பிள்ளைகளை டாக்டர்களாக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அனிதாவால் பேச முடியாது, ஆனால்...

அனிதாவால் இப்பொழுது பேச முடியாது. அவர் மரணம் அடைந்து விட்டார். ஆனால் அந்த மரணம் சமூகநீதிப் போராளிகளாக நம்மைக் கிளர்ந்தெழச் செய்யாவிட்டால் நாமும் செத்தாருள் வைக்கப்பட வேண்டியர்களே!

1950 இல் தந்தை பெரியார் கிளர்ந்தெழுந்ததால் முதல் திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பட்டது. 2017இல் ஓர் அனிதாவின் தற்கொலையால் தமிழகமே கிளர்ந்தெழுந்து, சமூகநீதிக்கு எதிரான நீட் போன்ற உயர்ஜாதிக்காரர்கள் அடிக்கடி கையில் எடுக்கும் கூரிய ஆயுதங்களை நிரந்தரமாக பறிமுதல் செய்யப்பட்டது என்ற நிலையை உருவாக்குவோம்.  

கல்வி மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை ஒலியை முன்னெடுப்பதுதான் - அதில் வெற்றி பெறுவதுதான் ஒரே தீர்வு! மகள் அனிதா பெயரில் இந்த சபதம் எடுப்போம்! 

அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அரியலூருக்குப் புறப்பட்டு விட்டேன். சமூகநீதியை வென்றெடுப்போம் வென்றெடுப்போம்! வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக