சனி, 2 செப்டம்பர், 2017

எடப்பாடி பழனிசாமி நீட்' என்ற வார்த்தையே தவிர்த்து இரங்கல் உரை அறிக்கை!


நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா (17). மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளியின் மகளான இவர் +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பின் கலந்தாய்வுக்கான கட் ஆஃப் 196.50 மதிப்பெண்களும் எடுத்திருந்தார். இவர், நீட் தேர்வை எதிர்த்து, +2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வுகளை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்நிலையில், மாணவி அனிதா இன்று மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவிக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டு இறந்ததார் என்று மட்டும் மொட்டையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என ஒரு வரிக்கூட முதல்வரின் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. இதில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.7லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் மாணவியின் குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மை காரணத்தை கூறிப்பிட முடியாத முதலமைச்சர்.. அவரது குடும்பத்துக்கு இரங்கலையும், நிதியுதவியையும், அரசு வேலையையும் கொடுத்து கண்கட்டி வித்தை காட்டுகிறார்.

- இசக்கி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக