வியாழன், 21 செப்டம்பர், 2017

நடிகர் ஜெய் குடித்து விட்டு காரோட்டி கைது... உடனே விடுதலை

இன்று அதிகாலை அடையாறு மேம்பாலத்தில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
'கோவா', 'ஈசன்', 'சென்னை 28' போன்ற படங்களில் நடித்தவர் ஜெய். இவரும் நடிகர் பிரேம்ஜி, அபினவ் உள்ளிட்டோரும் நெருங்கிய நண்பர்கள். ஜெய், நேற்று நள்ளிரவு நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டு மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார்.
அடையாறு பாலம் அருகே வரும்போது வேகமாக வந்ததால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி முன்பக்கம் நொறுங்கியது.
விபத்து பற்றி பொதுமக்கள் வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகர் ஜெய் மது அருந்தி காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து நடிகர் ஜெய் மீது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரது ஆடி காரையும் பறிமுதல் செய்து திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து புலானாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்த பிரிவுகளின் கீழ் ஓட்டுநரை கைது செய்யவேண்டும். இதையடுத்து நடிகர் ஜெய்யை போலீஸார் கைது செய்து சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.
அவரது ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்த போலீஸார், ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.
'கோவா-2' படத்தைக் கொண்டாட ஜெய் மற்றும் நடிகர் அபினவ்வுடன் மது விருந்துடன் பார்ட்டி என்று பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு புதன் கிழமை இரவு காய்ச்சல் என்றும் பெயரிட்டுள்ளார்.
 இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுதான் நடிகர் ஜெய் இன்று அதிகாலை மந்தைவெளியிலிருந்து தனது ஆடி சொகுசு காரில் அடையாறு நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்து நடந்த போது நடிகர் பிரேம்ஜியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக