ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை ஏற்படுத்தும் நோக்கிலும், ஒரே நாடு ஒரே சந்தை ஒரே வரி என்ற கொள்கையுடனும் இந்த ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு வாதிடுகிறது. ஆனால் இந்தப் புதிய நடைமுறையால் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் ஜி.எஸ்.டி.க்கு எதிரான தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார். பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியானபோதும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் சரிவு ஏற்படும் என்று சிங் கூறியிருந்தார்.
சி.என்.பி.சி. டிவி 18 ஊடகத்திற்கு மன்மோகன் சிங் நேற்று (செப்டம்பர் 18) அளித்துள்ள பேட்டியில், “அரசின் பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய இரண்டு திட்டங்களாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) பாதிக்கப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள முறைசாரா துறை இதனால் பெருமளவில் பாதிக்கப்படும். இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 90 சதவிகிதம் இந்த முறைசாராத் துறையையே சார்ந்துள்ளது. எனவே வேலைவாய்ப்பிலும் தாக்கம் ஏற்படும்” என்றார்.
“பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும் அரசால் அவசர கதியால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாகும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிச்சயமாக மந்தநிலை ஏற்படும்” என்றும் அவர் பேசியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக