சனி, 2 செப்டம்பர், 2017

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க மறுப்பு தம்பிதுரை, மைத்ரேயன் அதிர்ச்சி


மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்க பிரதமர் மோடி மறுத்துள்ளதால், அதிமுக எம்பிக்கள் மு.தம்பிதுரை, வி.மைத்ரேயன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், கே.பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றனர். இந்த இணைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் முக்கியப் பங்காற்றியதாக தினகரன் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. அதனை உறுதிப்படுத்துவதுபோல கடந்த ஒன்றரை மாதங்களில் முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் மோடியை 5 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இணைப்புக்காக நடைபெற்ற பல சுற்று பேச்சுகளின்போது அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் அளிக்கப்படும் என பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரையும், ஓபிஎஸ்ஸுக்கு உறுதுணையாக டெல்லியில் செயல்பட்டு வந்த மைத்ரேயனும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் மத்திய அமைச்சர்களை தம்பிதுரை, மைத்ரேயன், தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தவே மத்திய அமைச்சர்களை சந்தித்தாக அவர்கள் கூறினாலும், அதிமுக உள்கட்சி குழப்பங்கள், ஆட்சியை, மத்திய அமைச்சரவையில் சேருவது ஆகியவை குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து பழனிசாமி அரசு கடும் நெருக்கடியில் இருப்பதால் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் இல்லை என பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் கைவிரித்து விட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த தம்பிதுரையும், மைத்ரேயனும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி அரசு நெருக்கடியில் இருந்து மீண்டு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் மத்திய அமைச்சரவையில் இடமளிக்க மோடியும், அமித்ஷாவும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக