சனி, 23 செப்டம்பர், 2017

மெர்சல் .. ட்ரேட் மார்க் பதிவு செய்த முதல் தென்னிந்திய படம் ... இது செல்லுபடியாகுமா என்ற சிக்கலில்?

மின்னம்பலம் : சிவா
மெர்சல் டைட்டில்: சட்டம் யாருக்குச் சாதகம்?‘மெர்சல்’ திரைப்படத்துக்கு இப்படியொரு சூழல் ஏற்படுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக விஜய் படங்களுக்கு ஏற்படும் எந்தப் பிரச்னையும் ஏற்படாதவாறு மிகக் கவனமாக செயல்பட்டது தேனாண்டாள் நிறுவனம். தென்னிந்திய சினிமாவில் இதுவரை படைக்கப்பட்ட பல சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மெர்சல் திரைப்படத்துக்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிய முடிய மெர்சல் திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது எவ்விதச் சம்பள பாக்கியும் வைக்காமல் செட்டில் செய்துவிட்டார்கள். தலைப்பு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மெர்சல் டைட்டிலை டிரேட்மார்க் செய்தார்கள். மெர்சல் திரைப்படத்தின் கதையை, இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான விஜயேந்திர பிரசாத் அவர்களை வைத்து எழுதினார்கள். இப்படிக் கட்டுக்கோப்பாக இருந்த மெர்சல் என்ற கட்டடத்தில் இருந்த ஒரே ஓர் ஓட்டை, மெர்சல் டைட்டில்.
மெர்சல் டைட்டிலை Indian Motion Picture Producers' Association (IMPPA), the Association of Motion Pictures and Television Programme Producers (AMPTTP) and the Film and Television Producers' Guild of India (Guild) ஆகிய எந்த அமைப்பிலும் பதிவு செய்யாமல், நேரடியாக டிரேட்மார்க் வகையில் மெர்சலைப் பதிவு செய்திருக்கிறது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.


இது ஓர் அறிவார்ந்த முயற்சி. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று அமைப்புகளிலும் ஏ.ஆர்.ஃபிலிம்ஸ் சார்பாக ‘மெர்சலாயிட்டேன்’என்ற டைட்டில் பதிவு செய்திருப்பதால், மெர்சல் என்ற டைட்டிலை இவற்றுக்கெல்லாம் மேலான டிரேட்மார்க்கில் பதிவு செய்திருக்கிறார்கள். இது சாத்தியமா என்ற கேள்விதான் இப்போது தமிழ் சினிமாவின் அறிவாளிகளைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. திரையுலக அமைப்புகளைத் தாண்டி சட்ட உதவியுடன் மட்டுமே, மெர்சல் என்ற பெயரை டிரேட்மார்க்காக, அதாவது முத்திரையாக மாற்ற முடியும். இதற்கென தனியாக 1999இல் முத்திரை சட்டம் அல்லது TRADEMARK ACT என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.

டிரேட்மார்க் சட்டத்துக்கான அவசியம் மருத்துவத்துறையில் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பிளவுகளைச் சரிசெய்யவே உருவாக்கப்பட்டது. ஆனால், அதன்பின் அனைத்து துறைகளிலும் கராறாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அந்தந்த துறைக்கேற்ப சரிசெய்யப்பட்டது. டிரேட்மார்க்கின் அவசியம் ஆரம்பத்திலேயே அறிவுறுத்தப்பட்டிருந்தால், இணையதளம் என்ற ஒன்றை உருவாக்கிய பெருமையும் அதனால் கிடைத்த வருமானமும் இந்தியரைச் சேர்ந்ததாக இருந்திருக்கும். திரைத்துறையில் இந்த டிரேட்மார்க் எந்தவிதத்தில் பங்கு வகிக்கிறது எனப் பார்ப்போம்.
இந்திய டிரேட்மார்க் சட்டம் சினிமாத்துறையில் இரண்டு வழிகளில் இயங்குகிறது.
முதல் வழி:
சினிமாத்துறையில் உருவாகும் ஒரு படைப்பு பல பாகங்களாக ஒரே மூலத்திலிருந்து (அல்லது ஒரே இடத்திலிருந்து) உருவாகி வெளியானதாக இருக்க வேண்டும்.
உதாரணம்: பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கான கதைகளையும் ராஜேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். எனவே, பாகுபலி என்ற பெயர் டிரேட்மார்க்காக மாற்ற தகுதி பெறுகிறது.
சட்டம்: 1999ஆம் ஆண்டின் டிரேட்மார்க் சட்டம் அட்டவணை 4, பிரிவு 41.
இரண்டாவது வழி:
முதல் வழியைப் போல பல பாகங்களாக இல்லாமல் ஒற்றைப் படைப்பாக வெளிவரும் நிலையில், டிரேட்மார்க் செய்யப்பட வேண்டிய பெயர் மக்களிடையே ‘தனித்துவம்’ பெற்றிருக்க வேண்டும்.
உதாரணம்: கோல்கேட் என்ற பெயரில் எத்தனைப் பொருள்கள் விற்பனைக்கு வந்தாலும், கோல்கேட் என்ற பெயரைச் சொன்னதும் பற்பசை நினைவுக்கு வரும் அளவுக்கு மக்களிடையே தனித்துவம் பெற்றிருக்கும் நிலையில் கோல்கேட் என்ற பெயரைச் சுலபமாக டிரேட்மார்க் செய்து கொள்ளலாம்.
சட்டம்: 1999ஆம் ஆண்டின் டிரேட்மார்க் சட்டம் பிரிவு 9இன் உட்கூறில் நிபந்தனை விதியின்கீழ் இச்சட்டம் இடம்பெறுகிறது.
மேற்கூறிய இரண்டு சட்டங்களில் முதல் சட்டத்தின்கீழ் படத்தைத் தொடங்கியபோது மெர்சல் டைட்டிலால் இடம்பெற முடியாத நிலை இருந்தது. ஏனென்றால், இதுதான் இந்தப் பெயரில் வெளியாகும் முதல் திரைப்படம். ஆனால், இரண்டாவது சட்டத்தின் கீழ் இத்திரைப்படத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்ததால் தேனாண்டாள் நிறுவனம் மிக வேகமாக வேலை செய்தது.

வழக்கமாக ஒரு திரைப்படத்துக்குச் செய்யும் அத்தனை புரமோஷன்களையும் முடுக்கிவிட்டது. இந்தியா முழுவதிலும் இத்திரைப்படத்தைப் பற்றிப் பேச வைத்தார்கள். விஜய்யுடன் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளான சமந்தா, காஜல், நித்யா மேனன் ஆகியோரையும், இந்திய சினிமாவின் அடையாளமான ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல கலைஞர்களைக் கொண்டுவந்தனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து மீட்டர்களையும் உடைத்து உச்சத்தில் இருந்தபோது ‘மெர்சல்’ என்ற டைட்டிலை ஜூன் 21ஆம் தேதி வெளியிட்டார்கள்.
இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் அனைத்து சமூக வலைதளங்களிலும் மெர்சல் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் நீடித்தது. மெர்சல் திரைப்படத்தின் சாதாரண போட்டோக்களைக்கூட ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கிய பின்னரே வெளியிட்டனர். அனைத்து நாளேடுகளிலும் மெர்சல் இடம்பெற்றது. அனைத்து டிஜிட்டல் வலைதளங்களிலும் மெர்சல் ட்ரெண்ட் ஆனது. 2017ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கும் படமாக மெர்சல் திரைப்படம் இடம்பெற்றது. எங்கெங்கிலும் மெர்சல்... மெர்சல்... மெர்சல்... என்ற பேரொலி கிளம்பியது. இப்படியொரு நிலையை உருவாக்கி, மெர்சல் என்றாலே அது தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் மெர்சல் திரைப்படம் என்ற நிலையை உருவாக்கிய பின்னர், அந்தப் பெயருக்கு டிரேட்மார்க் அந்தஸ்து கேட்டுப் பெற்றிருக்கின்றனர். ஆகஸ்ட் 29ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு மற்றும் இணையதளம் மூலமாக, மெர்சல் என்ற பெயர் டிரேட்மார்க் செய்யப்பட்ட செய்தி எங்கெங்கும் பரவியது.

அதன்பிறகு தான் இந்தப் பெயருக்கு சொந்தம் கொண்டாடி ஏ.ஆர்.ஃபிலிம்ஸ் வந்திருக்கிறது. நியாயமாக அவர்கள் கேட்கும் உரிமை தவறானதல்ல. ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ திரைப்படம் வெளியானபோது அதில் இடம்பெற்ற ‘மெர்சலாயிட்டேன்’ பாடலின் வெற்றியால் இந்தப் பெயரைப் பதிவு செய்திருக்கிறது ஏ.ஆர்.ஃபிலிம்ஸ். இப்போது மெர்சல் என்ற பெயரில் விஜய் படம் வெளியாகவும், தங்களுக்கான உரிமையைக் கோருகின்றனர். இது வழக்கமான நடைமுறையில் இருப்பதே அவர்களது பின்னடைவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
2007இல் வெளியான Ram Gopal Verma Ke Sholay என்ற படத்துக்கு இதே பிரச்னை ஏற்பட்டது. 1975இல் ரமேஷ் சிப்பி இயக்கத்தில் வெளியான ஷோலே திரைப்படத்தைத் தழுவிய திரைக்கதையில் Ram Gopal Verma Ke Sholay திரைப்படத்தை ராம் கோபால் வர்மா எடுத்திருந்தாலும், ஷோலே என்ற திரைப்படம் தனித்துவம் பெற்று டிரேட்மார்க் செய்யப்பட்டிருப்பதால் அந்த டைட்டிலைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்தது. அதன்பிறகு Aag (Ram Gopal Verma Ki Aag) என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த அந்தப் படத்தை ரிலீஸ் செய்தார்கள்.

டிரேட்மார்க் சட்டப்படி ஏ.ஆர்.ஃபிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் டைட்டிலை உரிமைகோர விரும்பினால் குறைந்தபட்ச அளவிலாவது அந்தப் படைப்பு உருவாக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மெர்சல் என்ற பெயரைச் சொன்னதும் அந்தப் படைப்பு நினைவுகூரத்தக்க அளவுக்கு பிரபலமடைந்திருக்க வேண்டும். ஆனால், ‘மெர்சலாயிட்டேன்’ திரைப்படம் இந்த விதிகளின்கீழ் இடம்பெறாததால் மெர்சல் என்ற டிரேட்மார்க் டைட்டிலுக்கு எதிரான இவர்களது வழக்குக்குப் பலம் குறைந்திருக்கிறது.
ஆனால், 2006இல் கரன் ஜோஹாரின் Kabhi Alvida Naa Kehna திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னை இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. பிஸ்வரூப் ராய் சௌத்ரியின் மைண்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் Kabhi Alvida Naa Kehna(Never Say Goodbye) என்ற டைட்டிலை டிரேட்மார்க் செய்துவைத்திருந்தார்கள். ஆனால், கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான திரைப்படத்துக்கும் இதே பெயர் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட படம் ரிலீஸாகும் சமயத்தில் பிஸ்வரூப் நீதிமன்றத்தை நாடி தடை கேட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி விக்ரமஜித் சென் கூறிய தீர்ப்பில் பிஸ்வரூப் பெயரில் இந்த டைட்டில் டிரேட்மார்க் செய்யப்பட்டிருந்தாலும், கரண் ஜோஹர் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகிவிட்டார். ஆனால், பிஸ்வரூப் திரைப்படம் இப்போதுதான் 40% முடிக்கப்பட்டிருக்கிறது. அவர் பெயரை அறிவித்ததற்கும் படத்தை ரிலீஸ் செய்வதற்குமான இடைப்பட்ட காலம் அதிகம். அந்தக் காலத்தில் சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் தாமதமாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறது பிஸ்வரூப் தரப்பு. அதிலும் இவர்கள் பதிவு செய்திருக்கும் பெயரான Kabhi Alvida Naa Kehna என்பது தனித்துவம் வாய்ந்த வார்த்தையல்ல. பெரும்பாலான மக்களால் புழக்கத்திலிருக்கும் வார்த்தை. எனவே, இந்த வார்த்தையைத் தனித்துவம் வாய்ந்ததாக டிரேட்மார்க் செய்துகொள்வது தவறான செயல் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வழக்குகளிலும் மேற்கோள் எடுத்து வாதாட இரு தரப்பினருக்கும் வழிகள் இருக்கின்றன. ஆனாலும், வாய்ப்புகள் இருப்பின் ‘மெர்சலாயிட்டேன்’ படக்குழுவும், ‘மெர்சல்’ படக்குழுவும் தங்களுக்கான நியாயத்தைப் பெற வாழ்த்துகள்.

தற்போது மெர்சல் திரைப்படத்துக்கு உருவாகியிருக்கும் இந்தப் பிரச்னை தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கற்றுக்கொடுத்திருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். படங்களை இயக்காமல், நல்ல நல்ல டைட்டில்களைப் பதிவு செய்துவிட்டு, பட ரிலீஸ் சமயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், வழக்கு தொடுப்பேன் என்று மிரட்டியும் பணம் பறித்து வரும் ஒரு கூட்டம் இந்த டிரேட்மார்க் வசதியின் மூலம் தமிழ் சினிமாவிலிருந்து ஒழிக்கப்பட்டால் இதன்மூலம் நீதிமன்றத்தின் நேரம் விரயமாவதும், தயாரிப்பாளர்களின் பணம் வீணாவதும் தடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக