வியாழன், 7 செப்டம்பர், 2017

ஆசிரியை சபரிமாலா : ஜாக்டோ ஜியோ விழித்துக் கொள்ளுமா?

thetimestamil.com :நீட் நடைமுறை தேர்வை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா தனது அரசு பணியை துறந்துள்ளார். மறுபுறம் பொருளாதார கோரிக்கைக்காக ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்துகிறது. அமைப்பாக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு சங்கமான ஜேக்டோ ஜியோவில், பல ஆசிரியர்கள் சபரி மாலாவைப் போலவே அரசியல் உணர்வு பெற்று இருப்பர். சமூகநீதிக்க எதிரான, வசதி படைத்தவர்களுக்கான இந்த நீட் நடைமுறைக்கு எதிராக, அனிதாவின் மரணத்தால் உலுக்கப்பட்டவர்கள் நிச்சயமாகவே இந்த சங்கத்தில் இருக்கவே செய்வார்கள்.
ஆனால், ஜேக்டோ ஜியோ தொழில்சங்கத்தின் அரசியல் அற்ற தலையானது,பொருளாதார கோரிக்கைக்காக மட்டுமே சங்கம் உள்ளது என்ற மாயையை உளவியல் ரீதியாக கட்டுகிறது; அரசியல் நீக்கம் பெற்ற தொழில்சங்கவாதத்தால், தொழிற்சங்க உறுப்பினர்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. கூலி உயர்வுக்கான பேரம் பேசுகிற போரட்டமாக, நாள், தேதி, கிழமை, நேரம் அறிவிக்கப்பட்டு சடங்காக கூடி கலைந்துவிட்டுப் போகிற போராட்டமாக தொழிற்சங்க போராட்டங்கள், அரசியல் நீக்கம் செய்யப்பட்டு சீரழிந்து போயுள்ளன.

ஜேக்டோ ஜியோ போன்றே போக்குவரத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் தொழில் சங்கங்கங்களின் பிற்போக்குத் தலைமையால், வர்க்க உணர்வு ஊக்கம் பெறாமல், அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக சடங்கு போராட்டம் நடத்துபவர்களாக மாற்றப்பட்டுள்னர். இதன் காரணத்தாலேயே தொழில்சங்கப் போராட்டங்கள் மக்கள் திரளிடம் இருந்து அன்னியப்பட்டு குறுகிய பிரிவினருக்கான கோரிக்கை போலவே பார்க்கப்படுகிறது.
தொழில்சங்க பேரம் முடிந்த பின்னர், போராட்டங்கள் கைவிடப்படுகிறது. காலம் காலாமாக நடைபெறுகிற இந்த பிற்போக்கு நடைமுறையானது, ஓரடி கூட பொருளாதார ஊதிய கோரிக்கையில் இருந்து அரசியல் கோரிக்கையாக முன்னேறவே இல்லை! மாறாக பிற்போக்கு திசையிலேயே முன்னேறுகிறது!
பெரிய எண்ணிக்கையில் அமைப்பாக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான தொழில்சங்கங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வளர்ச்சி நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதே எதார்த்த உண்மை!
அனிதா மரணத்திற்குப் பின்பாக நீட் நடைமுறைக்கு எதிராக பரவலான மாணவர் இளைஞர் போரட்டங்கள் வெடித்து வருகையில், சாலை மறியல்கள் நடக்கையில், போலீசுடன் மாணவர் படைகள் மோதுகையில், மாபெரும் எண்ணிக்கையில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களும், ஊழியர்களும், தொழில்சங்க தலைமையின் செயலற்றப் போக்கால் வெறும் பார்வையாளர்களாக சுருக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்ச போராட்டத்தைக் கூட நீட்டுக்கு எதிராக இந்த சங்கங்கள் முன்னெடுக்கவில்லை. எங்கே தொழிலாளர்கள் அரசியல் உணர்வு பெற்றுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையும், அரசுக்கு எதிராக நேரடியாக மோதுவது கூடாது என்ற சந்தர்ப்பவாத நோக்கும் தொழில்சங்க தலைமையின் மையமாகியுள்ளன.
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக