திங்கள், 11 செப்டம்பர், 2017

ஆளுநருக்கு ஸ்டாலின் ஒரு வாரம் கெடு... சட்டசபையை கூட்டுக!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (10-9-2017) காங்கிரஸ் – இ.யூ.முஸ்லீக் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர். இந்நிகழ்வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான ஜெ.அன்பழகன், க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’ஆளூநருக்கு உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 19 பேர் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். 119 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக உள்ளனர். திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ-க்களும், தினகரன் அணியில் 21 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக உள்ளனர். 14 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே முதல்வருக்கு தற்போது உள்ளது. இதன் காரணமாக ஆளுநர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடவேண்டும். ஒரு வாரத்திற்குள் சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதி மன்றத்தை நாட வேண்டியிருக்கும். இனி ஆளுநரை சந்திக்க மாட்டோம்’’ என்று கூறினார்.
நக்கீரன்
;தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின்  இன்று (10-9-2017) காங்கிரஸ் – இ.யூ.முஸ்லீக் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான ஜெ.அன்பழகன், க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

ஆளுநரிடம் அளித்த அக்கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-

மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு

வணக்கம்,


பார்வை :         

1. அதிமுக-வின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 22.08.2017 தேதியிட்ட கடிதம்

2. 26.08.2017 தேதியிட்ட என்னுடைய கடிதம்

3. அதிமுக-வின் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 06.09.2017 தேதியிட்ட கடிதம்

***

26.08.2017 தேதியிட்ட என்னுடைய கடிதத்தையடுத்து, மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடியை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.  ஆளும் அஇஅதிமுக கட்சியை சார்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை நேரடியாக சந்தித்து எடப்பாடி திரு.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்து முதலமைச்சர் தலைமையிலான அரசு மீது தங்களுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியதின் மூலம் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மேலும், சட்டப்பேரவையில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போதுள்ள அஇஅதிமுக அரசு, சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே  பெற்றுள்ளது, ஆனால், ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது (திமுக: 89; காங்கிரஸ்: 8; ஐயூஎம்எல்: 1; மற்றும் அதிருப்தி அஇஅதிமுக எம்.எல்.ஏ..க்கள்: 21). எனவே, தற்போதைய முதல்வர் சட்டப்பேரவையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட  பெரும்பான்மையான சட்ட மன்ற உறுப்பினர்களின்  ஆதரவைப் பெற்ற, அரசுக்கு மட்டுமே நம்முடைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளதோடு, அதுவே நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகவும் இதுவரை நிலைநாட்டப் பட்டுள்ளது.

சட்டத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பேன், காப்பாற்றுவேன் என தாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளீர்கள். ஆனால், இந்த விவகாரத்தில், தங்களுடைய நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சட்டங்களுக்கும் எதிரானதாகவும் மாறானதாகவும் அமைந்துள்ளது.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் (reported in 1993 (3) SCC 1) மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சுட்டிக்காட்டிய மேற்கொள்கள் சிலவற்றை  தங்களது கவனத்திற்கு கொண்டு வர நான் விரும்புகிறேன்:

 “அமைச்சரவை நம்பிக்கையை இழந்துவிட்டது என கருதும் அனைத்து சந்தர்பங்களிலும், அமைச்சரவையின் பலத்தை நிரூபிக்க   சட்டப்பேரவையில் தான்  வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்"

"அமைச்சரவையின் பெரும்பான்மையை தனி நபர்களினுடைய கருத்துகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய முடியாது, அவர்கள் குடியரசுத் தலைவராகவோ அல்லது ஆளுநராகவோ இருந்தாலும் கூட.”

"எப்போதெல்லாம் அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டது என்று சந்தேகம் எழுகிறதோ, அதன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய  ஒரே இடம் சட்டமன்றம்தான். அதற்கு விதிவிலக்கு ஏற்படுத்தக்கூடிய ஒரே தருணம் இருக்கிறது. அது எப்போது எனில் “ஏதாவது வன்முறை சூழல்களுக்கு இந்த நிலையில் அவையில் சுதந்திர மான வாக்கெடுப்பு நடத்த முடியாது என  ஆளுநர் ஒரு முடிவிற்கு வந்து - அதனை தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்திருக்க வேண்டும்" 

"அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை அல்லது அரசுக்கு ஆதரவு அளிக்கும் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது எனும் உண்மைகள் தெளிவாக தெரியும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு அந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைகளை ஆளுநர் கேட்கக்கூடாது. அதற்கு பதில்  அந்த  முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும்"

"அடுத்ததாக "நபாம் ரெபியா & பமாங் ஃபெலிக்ஸ் வெர்சஸ் துணை சபாநாயகர்" என்ற அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை  வழக்கில் (Nabam Rebia & Bamang Felix v. Dy. Speaker, Arunachal Pradesh Legislative Assembly, (2016) 8 SCC 1 : 2016 SCC OnLine SC 694) மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தங்களது கவனத்துக்கு கொண்டுவர நான் விரும்புகிறேன்:

“165. மேற்கூறியவைகளுடன், எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல்.ஷக்தர் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், பாராளுமன்ற செயலாளர் வெளியிட்ட பாராளுமன்ற  நடைமுறைகள் (5ம் பதிப்பு) ஆகியவற்றில் இருந்து மேற்கோள் கொள்ளலாம்.  அதில், 9ம் அத்தியாயம் இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது - : “பாராளுமன்றத்தை கூட்டுதல், ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைத்தல்" என்ற அத்தியாயத்தில்  உள்ள  48வது பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. அது அந்த ஆய்வு ஆசிரியர்களின் பார்வையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, முதலமைச்சரின் ஆலோசனையின்படி ஆளுநர் சட்டப்பேரவையையோ அல்லது மாநிலத்தின் அவைகளையோ கூட்டலாம் அல்லது ஒத்திவைக்கலாம் என கவுல் அன்ட் ஷக்தர் தெளிவாக கூறியுள்ளார்கள், சட்டப்பேரவையையோ அல்லது மாநிமாநிலத்தில் உள்ள மேலவையையோ கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோ மாற்று தேதி கூற ஆளுநருக்கு உரிமையுண்டு, ஆனால், மேலுள்ள விவகாரத்தில், மாற்று தேதியை ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று இறுதி முடிவினை எடுக்கும் உரிமை முதலமைச்சர் அல்லது அமைச்சரவைக்கு உள்ளது. எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல்.ஷக்தேர் ஆகியோரின் கருத்துகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுடன் இசைந்து போகிறது. ஆனால் ஒரு  அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழக்கும் நேரத்தில், இந்த விதிகள் மாறுதலுக்குள்ளாகும். ஒத்திவைப்பு குறித்த விஷயங்களில், அதை முடிவுச் செய்வது முதலமைச்சரை தலைமையாக கொண்டு செயல்படும் அமைச்சரவை.ஆனால், சட்ட்ப்பேரவையில் ஒரு  அரசின் பெரும்பான்மை கேள்விக்குள்ளாகும் சூழ்நிலையில் அது பொருந்தாது. மேற்கூறியவற்றின் மூலம் ஒரு அரசுக்கு பெரும்பான்மையான  சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளிக்கும் ஆதரவு விவாதத்திற்குள்ளாகும்போது, சட்டப்பேரவையை கூட்டவோ, ஒத்திவைக்கவோ, கலைக்கவோ முதலமைச்சரும், அவரது அமைச்சரவையும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் உரிமையை இழக்கின்றனர். 

இந்தப் பார்வையை ஒப்புக்கொள்வதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால், எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல்.ஷக்தேர் அவர்களுடைய கருத்துகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விசேஷமும் முக்கியத்துவமும் என்னவென்றால், எதை குறிப்பிட்டுக் காட்ட வேண்டுமென்றால், ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் அணி மாறினால், அந்தக் கட்சி சட்டப்பேரவையின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உறுதிப்படுத்தாது. அதுபோன்ற சூழ்நிலைகளில், முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லையென்றால், அவர் சட்ட பேரவையை சந்திப்பதற்கு பதிலாக, சட்டப்பேரவையை கலைக்கவோ, ஒத்திவைக்கவோ ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினால், ஆளுநர் அந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேலுள்ள சூழ்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, சட்டப்பேரவையின் தீர்ப்பை பெறுமாறு முதலமைச்சரை கேட்டுக்கொள்ளும் உரிமை ஆளுநருக்கு உண்டு. 

நிதிநிலை அறிக்கை நிறைவேற்றம் செய்யப்படாத நிலையில், சட்ட பேரவையை கலைக்க முதலமைச்சர் பரிந்துரை செய்தால்  முதலில்  அமைச்சரவையானது சட்டப்பேரவையை சந்தித்து நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றியாக வேண்டும். எப்படியிருந்தாலும், ஆட்சியில் உள்ள அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நம்புவதற்கான காரணங்கள் இருக்குமாயின், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை விவகாரத்திற்கு முடிவு காணும் நடவடிக்ககளை எடுக்க ஆளுநருக்கு முழு உரிமையுண்டு. ஒருவேளை அதில் ஆட்சியில் உள்ள அரசு வெற்றிப்பெற தவறினால், நிதிநிலை அறிக்கைய நிறைவேற்ற, வேறு ஒரு பெரும்பான்மையான  அரசை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆளுநர்  முன்னெடுக்க வேண்டும்.  இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அதனால் நிதி நெருக்கடி ஏற்படும், இந்த சூழ்நிலையில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356 அல்லது 360-ன் படி குடியரசுத் தலைவரை அணுகும் உரிமை ஆளுநருக்கு உண்டு.  இந்த சூழ்நிலையில்கூட, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனையின்றி ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாக செயல்படும் உரிமை உண்டு என எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல்.ஷக்தேர் கூறியிருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது  மேற்கூறிய இரண்டு சூழ்நிலைகளும் ஏற்படவில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின்படி, அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படியும் ஜனநாயக அடிப்படையின்படி, உடனடியாக எந்தவித தாமதமும் இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. இந்த பெரும்பான்மையில்லாத அரசு இனியும் தொடர தாங்கள் அனுமதித்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கங்களுக்கும் அரசியலமைப்பின் அடிப்படை கருத்துகளுக்கும், மாண்பமை உச்சநீதிமன்றம் இது போன்ற விஷயங்களில் இதுவரை அளித்துள்ள தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும். பெரும்பான்மையில்லாத அரசு தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை தோற்கடிக்க  வழிவகுக்கும்.  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் ஏற்படும் சிறு தாமதம் கூட, தமிழகத்தில் ‘குதிரை பேர’த்தை ஊக்குவிப்பதோடு, முறையற்ற அரசியல் நடவடிக்கைகள் மாநிலத்தில் நடைபெற வழிவகுத்து விடும்.

இதுவரையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடாமல் தவிர்ப்பது, தங்களுடைய செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக  வலுவான சந்தேகம் எழுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி என்பதைதான் குறிப்பிடுகிறது என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தற்போதுள்ள அரசியலமைப்பு நெருக்கடியான சூழ்நிலையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, இனியும் எவ்வித தாமதமுமின்றி,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி திரு பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க  உத்தரவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் மீண்டும் நிலைறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள  வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.’’

படங்கள்: செண்பகபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக