சனி, 30 செப்டம்பர், 2017

Bigg Boss Finale .. சாருநிவேதா ... மெஸ் அய்யாக்காளால் நிரம்பி வழியும் தேசம்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை.  ஆனாலும் பிந்து மாதவிதான் வெளியேறி இருப்பார் என்று நினைக்கிறேன்.  எஞ்சி இருப்பவர்கள் சினேகன், ஹரிஷ், ஆரவ் மற்றும் கணேஷ். இதில் வெல்லப் போவது சினேகன் என்று சினேகனே தீர்மானித்துவிட்டார்.  அது அவரது பேச்சிலும் நடை உடை பாவனைகளிலும் தெளிவாக தெரிகிறது. பிரச்சனையில்லை.
;இந்த நான்கு பேரில் ஐம்பது லட்சம் பரிசைப் பெறத் தகுதியானவர் யாரென்று பார்போம்.

;கணேஷ் நூறு நாட்கள் இருந்தவர். போராடியவர்.  நல்லவர். ஆனால், பரிசை வெல்லத் தகுதியில்லாதவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள எல்லோரையும் போலவே இதிலும் பட்டும் படாமலேயே இருக்கிறார்.  தர்ம ஆவேசம் என்பது அவரிடம் கிஞ்சித்தும் இல்லை. இப்படிப்பட்டவர்களால் சமூகத்துக்குத் தீமையே தவிர நன்மை இல்லை.  இப்போதைக்கு சமூகத்துக்கு நன்மை செய்பவர்களை காட்டிலும் எந்தத் தீமையும் செய்யாமல் இருப்பவரே சமூகத்துக்குத் தேவையானவர்.

அந்த வகையில், பரிசுக்கு முழுமுற்றாகத் தகுதி உடையவர் ஹரிஷ் மட்டுமே.  அவரால் சமூகத்துக்கு எந்தப் பலனும் இல்லை. ஆனால் எந்தத் தீமையும் இல்லை. இதுதான் மிக மிக முக்கியம்.  ஆனாலும் அவருக்குப் பரிசு தர முடியாது.  ஏனென்றால் அவர் ஐம்பது நாட்கள்தான் இருந்திருக்கிறார்.
;சினேகனை எடுத்துக்கொண்டால், இவரைப் போன்ற சமூக ஆர்வலர்களால்தான் சமூகம் நிரம்பி இருக்கிறது. தெருவுக்கு ஒருவராவது இப்படி இருக்கிறார்.  இவர்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள். மொழிப்பற்று மிகுந்தவர்கள்.  சுயநலம் இல்லாதவர்கள்.  ஆனால், சமூகத்துக்கு இவர்களால்தான் மிகுந்த ஆபத்து நேர்ந்து கொண்டிருக்கிறது.  காரணம், இவர்கள் தங்களை மெஸ்ஸையாக்களாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் கமல், தில்லியில் மோடி.

;சினேகன் ஒரு மினியேச்சர் கமல்.  கமலிடம் அடிமை போல பதுங்கும் சினேகன் மற்ற வாண்டுகளிடம் ஆண்டையைப் போல பழகுவதை நாம் பார்க்கிறோம்.  வலுத்தவனிடம் அடிமை, மெலிந்தவனிடம் நாட்டாமை.  இதுதான் சினேகன்.
பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என்று பிக்பாஸ் அனைவரிடமும் சொன்னபோது சினேகன் சொன்ன பதில் அராஜகத்தின் உச்சம். அதற்கு எளிமையான பதிலை சொன்னவர் ஆரவ் மட்டுமே.  எனக்கு வேண்டாம் என்ற இரண்டு வார்த்தையுடன் முடித்துக்கொண்டார்.;
;கணேஷும், ஹரிஷும் நேர்மையான பதிலைச் சொன்னார்கள்.  இப்போது சினேகனுக்கு ஐம்பது லட்சம் கிடைத்தால் நூலகம் கட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டார்.  கட்டியும் விடுவார். என்ன ஆகும்?  அதில் என்னென்ன புத்தகங்கள் இருக்கும்?  சினேகன் எதையெல்லாம் கவிதை என்று நினைக்கிறாரோ அந்தக் குப்பையெல்லாம் அந்த நூலகத்தில் இருக்கும்.  மனிதன் முட்டாளாக இருப்பது கூட தவறில்லை.  மூடனாக இருந்துகொண்டு அறிஞன் என்று நினைத்துக் கொள்வதுதான் சமூகத்திற்கு மிகப்பெரியத் தீங்கை விளைவிக்கிறது.

;ஆக, என்னைப் பொருத்தவரை ஆரவ்தான் பரிசுக்குத் தகுதியானவர்.  ஓவியா விஷயத்தில் அவர் நடந்து கொண்டது அநீதியானது என்றாலும் கூட மக்கள் மன்னித்து விட்டார்கள்.  நானும் மன்னித்து விட்டேன்.  அவரைப் போன்றவர்களால் சமூகத்துக்கு எந்த நன்மையும் இல்லை என்றாலும் கூட ஒரு துளி தீமை கிடையாது.  சமூகத்துக்கு நன்மை செய்யப் போகிறேன் என்று கிளம்புபவர்கள் இன்றைக்கு வேண்டாம்.  சமூகத்துக்குத் தீமை செய்யாதவர்களே இன்றைய தேவை. (சாரு சொல்ல தட்டச்சு செய்தவர் செல்வகுமார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக