புதன், 6 செப்டம்பர், 2017

BBC :வேலூர் சிஎம்சியில் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது ஏன்?

வேலூரில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கும், உயர் சிறப்புப் படிப்புகளுக்கும் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. தாங்கள் நடத்தும் எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் மாணவர் சேர்க்கைக்கு மிக அவசியம் என்கிறது அந்த மருத்துவக் கல்லூரி. வேலூரில் அமைந்துள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் படிப்பில் 100 மாணவர்களும் எம்.எஸ்., எம்.டி படிப்புகளில் 192 மாணவர்களும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 62 மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இந்த ஆண்டில் தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களை சேர்க்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் உயர் சிறப்புப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச். படிப்புகளுக்கு சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது இந்த மருத்துவக் கல்லூரி. கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிகளுக்காக எம்.பி.பி.எஸ். படிப்பில் ஒரு மாணவரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் ஒரு மாணவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ். படிப்பில் 99 இடங்களும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 61 இடங்களும் காலியாகவே உள்ளன.


உயரிய நோக்கங்களோடு... "எங்களைப் பொறுத்தவரை, உயரிய நோக்கங்களோடு இந்தக் கல்லூரி நடத்தப்பட்டுவருகிறது. இங்கு படிப்பவர்கள் 2 ஆண்டுகள் எங்களுடைய கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். ஆகவே, இங்கு சேர வரும் மாணவர்கள் அதற்குப் பொருத்தமாக இருப்பார்களா என்பதை நாங்கள் ஒரு தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வின் மூலமாக சோதித்து, அதற்குப் பிறகே சேர்த்துக்கொள்வோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் தற்போது பொறுப்பு முதல்வராக இருக்கும் டாக்டர் சாலமன் சதீஷ்குமார். 1946ஆம் ஆண்டிலிருந்து இந்த மருத்துவக் கல்லூரியில், இந்தக் கல்லூரியே நடத்தும் ஒரு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. ஆனால், இந்த ஆண்டு 'நீட்' தேர்வின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கையை நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து இக்கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. "அந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே எங்கள் சேர்க்கை இருக்கும்" என்கிறார் சதீஷ்குமார். இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்குவரவிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.3000 கட்டணம் "வெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்க முடியாது.

எங்கள் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். வகுப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக வெறும் மூவாயிரம் ரூபாய் மட்டுமே வாங்குகிறோம். அப்போதுதான் அந்த மாணவர், இந்த சமூகம் நம்மைப் படிக்க வைத்தது; நாம் அந்த சமூகத்திற்கு நம் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் இருப்பார். அப்படியான மாணவர்களைத் தேர்வுசெய்வது எங்கள் கடமை" என்கிறார் சாலமன் சதீஷ்குமார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் சேர்க்கை முறை குறித்து விரிவாக பிபிசியிடம் பேசிய அக்கல்லூரியின் முதல்வர் அன்னா புலிமூத், "தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முறை, நீட் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொள்கிறது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு சேவை மனப்பான்மை உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், இந்த மருத்துவக் கல்வி மிகக் குறைந்தக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது" என்கிறார். சேவை மனப்பான்மை இந்தக் கல்லூரியில் சேர்க்கைக்கு ஒரு மாணவர் இரண்டு நாட்களை செலவழிக்க வேண்டும். அவரால் எப்படி மற்றவர்களிடம் பேச முடிகிறது, எப்படி குழுவுடன் இணைந்து பணிபுரிய முடிகிறது, சேவை மனப்பான்மை இருக்கிறதா என்பதெல்லாம் இந்த இரண்டு நாள் தேர்வில் முடிவுசெய்யப்படும். இதில் தங்கள் கல்லூரியின் பெரும்பாலான பேராசிரியர்கள் பங்கேற்பார்கள் என்கிறார் அன்னா. "இங்கு சேரும் மருத்துவர்கள் வாழ்நாள் முழுவதும் சேவைசெய்யும் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதனால்தான் இப்படி ஒரு சேர்க்கை முறையை வைத்திருக்கிறோம்.

நாங்கள் ஒருபோதும் தமிழக அரசின் ஒற்றைச் சாளர முறைக்குக் கீழ் வந்ததில்லை. எங்களுக்கு ஆதரவாக 17 உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வியை அளிக்கும்போது, தகுந்த மாணவரைத் தேர்வுசெய்வது எங்கள் பொறுப்பு" என்கிறார் அன்னா புலிமூத். பட்டமேற்படிப்புக்கு முடிந்தது சேர்க்கை எம்.டி., எம்.எஸ். வகுப்புகளுக்கு தங்களுடைய வழக்கமான முறைப்படியே 182 இடங்களுக்கும் சேர்க்கையை இந்த மருத்துவமனை நடத்தி முடித்துவிட்டது. நீட் தேர்வு தொடர்பான உத்தரவு வருவதற்கு முன்பாகவே சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், இந்த சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

 டாக்டர் ஐடா சோஃபியா ஸ்கட்டர் என்பவரால் 1900வது ஆண்டில் ஒரே ஒரு படுக்கையுடன் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை அடுத்த ஆண்டிலேயே 40 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1909ஆம் ஆண்டிலிருந்து செவிலியர்களுக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் துவங்கின. 1918ஆம் ஆண்டில், யூனியன் மிஷன் ஸ்கூல் ஃபார் விமன் என்ற பெயரில் பெண்களுக்கு மருத்துவப் பயிற்சிகள் துவங்கின. 1942லிருந்து இங்கு எம்பிபிஎஸ் படிப்புகள் துவங்கப்பட்டன.

1950லிருந்து எம்.டி., எம்.எஸ்., வகுப்புகளும் 1969லிருந்து பட்ட மேற்படிப்புக்கு பிந்தைய வகுப்புகளும் துவங்கப்பட்டன. எதிர்ப்பு ஆனால், வேலூர் மருத்துவமனையின் இந்த முடிவிற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கையை நிறுத்துவதற்கு அந்த மருத்துவமனைக்கு உரிமை இருந்தாலும், இது சரியான எதிர்ப்பு முறையல்ல என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்திருக்கிறார்.

வேலூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை முறை சிறப்பானதாக இருந்தாலும் சிறுபான்மை நிறுவனம் என்ற பெயரில் இந்தப் போராட்டத்தை நடத்துவதை ஏற்க முடியாது என்கிறார் அவர். பிற சிறுபான்மை நிறுவனங்களும் இதேபோன்ற விலக்கைக் கோரக்கூடும் என்பதால் எந்த சிறுபான்மை நிறுவனத்தையும் நேரடியாக சேர்க்கை நடத்த அனுமதிக்காமல் மாநில அரசின் ஒற்றைச் சாளர முறையிலேயே அனுமதிக்க வேண்டுமெனவும் அவர் கூறியிருக்கிறா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக