மும்பையின் பிரபல
தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள்
பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல்
செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை
படித்ததும் அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த செய்தித்தாள் கீழே
விழுந்த்து.
1918 ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியான அந்த
செய்தித்தாளில், முகம்மது அலி ஜின்னா, தின்ஷாவின் மகள் லேடி ருட்டியை
திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது. இந்த காதல் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. தின்ஷா தனது நண்பரும், வழக்கறிஞருமான முகம்மது அலி ஜின்னாவை டார்ஜிலிங்கில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையிலேயே அழகி என்று கூறப்பட்ட தின்ஷாவின் 16 வயது மகள் ருட்டியும் அங்கு இருந்தார். அந்த சமயத்தில் ஜின்னா இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்காற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ஜின்னாவின் வயது 40 என்றாலும், 16 வயது ருட்டியும் ஜின்னாவும் காதல் வயப்பட்டார்கள். காதலுக்கு வயதோ, உருவமோ கண்ணுக்கு தெரியாது என்ற கூற்று உண்மை என்று நிரூபிக்கும் மற்றொரு சரித்திர சான்று ஜின்னா-ருட்டி காதல்.
தனது டார்ஜிலிங் பயணத்தின்போதே, ருட்டியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கோரிக்கை வைத்தார் ஜின்னா. ஷீலா ரெட்டி எழுதிய `மிஸ்டர் அண்ட் மிஸ்ஸ் ஜின்னா- த மேரேஜ் ஷுக் இண்டியா` (Mr and Mrs Jinnah the Marriage that shook India) என்ற புத்தகத்தில் எழுதியிருக்கும் வரிகள் இவை - 'இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இரவு உணவுக்கு பிறகு ஜின்னா தின்ஷாவிடம் கேட்டார்'.
ஜின்னாவின் வாய்ப்பு
தேச ஒற்றுமை வலுப்படும் என்று என்ற பதிலை சட்டென்று அளித்தார் தின்ஷா. இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாத ஜின்னா, ருட்டியை திருமணம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஜின்னாவின் கோரிக்கை தின்ஷாவை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. வீட்டை விட்டு வெளியே போ என்று கத்திவிட்டார். ருட்டியை திருமணம் செய்துக் கொள்ள தின்ஷாவிடம் கடுமையாகப் போராடிய ஜின்னாவுக்கு கிடைத்தது தோல்வியே.
இரண்டு மதங்களுக்கு இடையே நட்பு என்ற ஜின்னாவின் சூத்திரம் முதல் பரிசோதனையிலேயே தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு தின்ஷா ஒருபோதும் ஜின்னாவிடம் பேசவேயில்லை. இனிமேல் ஜின்னாவை சந்திக்கவேக்கூடாது என்று மகளுக்கு தடை விதித்தார்.
தின்ஷா அத்துடன் விட்டுவிடவில்லை, மைனரான தனது மகள் ருட்டியை ஜின்னா சந்திக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவையும் வாங்கி வைத்துவிட்டார். இருந்தாலும் காதல் கண்ணாமூச்சி விளையாட்டு எந்த சட்ட திட்டங்களும் கட்டுப்படாததாயிற்றே. காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சந்தித்துக் கொண்டனர், கடிதங்களும் எழுதிக்கொண்டனர்.
18 வயதான ருட்டி மேஜரானார்
ஷீலா ரெட்டி கூறுகிறார், "கடிதம் ஒன்றை ருட்டி படித்துக் கொண்டிருப்பதை பார்த்த தின்ஷா, ஜின்னாவின் கடிதமாகத்தான் இருக்கும் என்று யூகித்துவிட்டார். நீதிமன்ற உத்தரவு கையில் இருக்கும்போது, ஜின்னாவை மடக்க கடிதம் ஒன்றே போதுமே?
கத்திக் கொண்டே கடிதத்தை கைப்பற்ற உணவு மேசையை சுற்றி ஓடினார். ஆனால் மகள் ருட்டியோ அப்பாவின் கையில் அகப்படாமல் தப்பிவிட்டார்.
காதல் விஷயத்தில் தின்ஷா எவ்வளவு பிடிவாதமாக இருந்தாரோ, அதைவிட பிடிவாதமாக இருந்தார்கள் காதலர்களும். ருட்டிக்கு 18 வயது ஆகும்வரை பொறுமையுடன் அமைதியாக காதலில் உறுதியாக காதலர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஜின்னாவின் வாழ்க்கை சரிதத்தை புத்தகமாக எழுதியுள்ள ஷரீஃப் அல் முஜாஹித் கூறுகிறார், "மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ருட்டி 1918 பிப்ரவரி 20ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்ததும், ஒரு ஜோடி உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, கையில் குடையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்".
இந்திய சமுதாயம்
ருட்டி ஜின்னா பற்றி புத்தகம் எழுதிய குவாஜா ரஜீ ஹைதர் சொல்கிறார், "இம்பீரியல் சட்டமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்தார் ஜின்னா. சிவில் திருமண சட்டத்தின்படி ஜின்னாவின் திருமணம் நடந்திருந்தால், அவர் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்".
இந்த சிக்கலை தவிர்க்கவே, ருட்டியின் மனப்பூர்வமான சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண மெஹராக (இஸ்லாமிய சமுதாயத்தில், மணமகன் மணப்பெண்ணுக்கு கொடுக்கவேண்டியத் தொகை) 1001 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தன் காதல் மனைவிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மொஹர் கொடுத்தார் ஜின்னா. 1918ஆம் ஆண்டில் இந்தத் தொகை மிகப்பெரிய தொகையாகும்.
தன்னைவிட 24 வயது சிறியவரான பெண்ணை ஜின்னா திருமணம் செய்துக் கொண்டது பழமைவாத பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய சமுதாயத்திலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
த ஸ்கோப் ஆஃப் ஹேப்பினெஸ்' என்ற தனது சுயசரிதையில் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் எழுதியிருப்பது, "செல்வாக்கான பார்சி குடும்பத்தை சேர்ந்த தின்ஷாவின் மகளை ஜின்னா திருமணம் செய்து கொண்டது இந்தியாவில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நானும் ருட்டியும் ஏறக்குறைய ஒரே வயதை உடையவர்கள். ஆனால் இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள். மிகப்பிரபலமான வழக்கறிஞரான ஜின்னா, வளர்ந்து வரும் அரசியல் தலைவராகவும் இருந்தார். இவை ருட்டிக்கு பிடித்திருக்கலாம். எனவே பார்சி சமூகத்தையும் தந்தையையும் எதிர்த்து ருட்டி ஜின்னாவை திருமணம் செய்து கொண்டார்".
ருட்டியின் காதல்
இந்தியாவின் கவிக்குயில் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு டாக்டர் சையத் மஹ்மூதுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜின்னாவின் திருமணம் பற்றி குறிப்பிட்டுள்ளார், 'இறுதியில் ஜின்னா தனது நீண்டநாள் காதலை நிறைவேற்றிக் கொண்டார். அந்த பெண்ணின் தியாகம் மிகப்பெரியது. தனது தியாகத்தைப் பற்றி ருட்டிக்கே தெரியாது. ஆனால் ஜின்னா இந்த மாபெரும் தியாகத்திற்கு தகுதியானவரே. ஜின்னா, ருட்டியை ஆழமாக காதலித்தார், அவருடைய ஆளுமைத்தன்மைக்கு நிதர்சனமான உதாரணம் இது'.
'ஜின்னாவின் ரசிகர்களில் சரோஜினி நாயுடுவும் ஒருவர் என்று கூறுகிறார் குவாஜா ரஜீ ஹைதர். 1916இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஜின்னா பற்றிய கவிதை ஒன்றையும் இயற்றினார் சரோஜினி நாயுடு' என்கிறார் க்வாஜா ரஜீ ஹைதர்.
ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹெக்டர் பொலிதோ தன்னுடைய புத்தகத்தில் ஒரு வயதான பார்சி பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, 'சரோஜினி நாயுடுவும் ஜின்னாவை நேசித்தார் என்று நினைக்கிறேன், ஆனால் சரோஜினியின் காதலை ஜின்னா ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவரது காதல் வெளியில் தெரியவில்லை'.
ஜின்னாவின் காதல்
கவிக்குயில் என்ற பெருமையை பெற்ற பிரபலமாக சரோஜினி நாயுடு இருந்தபோதிலும், அவரது காதலும், இனிமையான குரலும், அறிவுக்கூர்மையும் ஜின்னாவின் காதலை ஈர்க்கவில்லை. சரோஜினி நாயுடு ஜின்னாவை காதலித்ததாக கூறப்படுவது உண்மையா என்று ஷீலா ரெட்டியிடம் கேட்டபோது இல்லை என்று பதிலுரைத்த அவர், ஆனால் சரோஜினிக்கு ஜின்னா மீது மிகுந்த மரியாதை இருந்தது என்கிறார்.
ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதியுள்ளனர். அதில் ஒருவரான அஜீஜ் பேக், ஜின்னா மீதான சரோஜினியின் காதலைப் பற்றி ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார்.
'இரண்டு அருமையான பெண்கள்' (Two Winsome Women) என்ற அந்த அத்தியாயத்தில் அவர் இப்படி எழுதியிருக்கிறார், "ஒரு ஆண்மகனை காதலிக்கும் இரு பெண்கள் ஒருவரையொருவர் வெறுப்பார்கள் என்று பழமொழி உண்டு. ஆனால் சரோஜினி ருட்டியின் மீது பொறாமை கொண்டதில்லை, உண்மையில் ஜின்னா-ருட்டி திருமணத்திற்கு சரோஜினி உதவி செய்தார்".
1918ஆம் ஆண்டில் ஜின்னா-ருட்டியின் காதல் திருமணமாக கனிந்தபோது அவர்களின் ஒளிரும் பிரகாசமான முகங்கள், ஒருவர் மற்றொருவருக்காக படைக்கப்பட்டவர் என்றே அனைவருக்கும் தோன்றியது.
அழகான ருட்டியின் உடல்வனப்பு அனைவரையும் கவரக்கூடியது. பழுப்பு, பொன்னிறம், வெளிர் நீலம் அல்லது இளஞ்சிவப்பு போன்ற மெல்லிய ஆடைகளை அணியும் பழக்கம் கொண்ட ருட்டி, வெள்ளி மற்றும் பளிங்கு சிகரெட் ஹோல்டர்களில் பொருத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டை புகைக்கும்போது, அவரது ஆளுமை நான்கு மடங்கு அதிகரித்து பிரகாசிக்கும்.
நேரில் தோன்றிய தேவதையோ!
ருட்டியின் ஒவ்வொரு செயலும், சில்லறை காசுகள் கொட்டுவது போன்ற அவரது கலகல சிரிப்பும், புன்னகைக்கும்போது பூத்து மலரும் முகமும், நகைச்சுவை உணர்வும் அவரது இருப்பை மேலும் இனிமையாக்கும்.
ருட்டியும் ஜின்னாவும் தேனிலவுக்காக லக்னோவில் இருக்கும் ராஜா அமீர் அகமத் கானின் அரண்மனைக்கு சென்றிருந்தார்கள். அப்போது அமீர் அகமதின் வயது நான்கரை. இருந்தாலும் அவருக்கு ருட்டி பற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.
வெண்ணிற சேலையில் கருப்பு நிற வேலைப்பாடுகளை கொண்ட சேலையை உடுத்தியிருந்த ருட்டியை பார்த்த அவர், கதையில் கேட்ட தேவதை நேரில் வந்துவிட்டாரோ என்றே நினைத்தாராம்.
அதன்பிறகு 1923இல் ஜின்னாவும் ருட்டியும் மெண்டேஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரண்டாவது முறை ருட்டியை சந்தித்திருக்கிறார் அமீர் அகமத் கான். அப்போது விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொள் என்று கூறி 500 ரூபாய் கொடுத்தாராம் ருட்டி.
ஜின்னா தம்பதிகளின் நண்பரான காஞ்சி த்வாரகா தாஸ் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார், "என் கண்களை அவரிடம் இருந்து அகற்ற முடியாது, அவர் அங்கிருந்த சென்றபிறகும் என் கண்களிலேயே நிறைந்திருப்பார்".
அரசு வீடு
குவாஜா ரஜீ ஹைதர் ருட்டி ஜின்னாவை பற்றிய ஒரு சுவையான தகவலை சொல்கிறார். பம்பாயின் கவர்னர் விலிங்ஸ்டன் ஜின்னா தம்பதியினரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்துக்கு சென்றிருந்த ருட்டி, மார்பகங்களின் மேற்புறம் தெரியுமாறு லோ கட் ஆடை அணிந்திருந்தார்.
உணவு மேஜையில் அனைவரும் விருந்து உண்டு கொண்டிருந்தனர். அப்போது கவர்னரின் மனைவி, திருமதி ஜின்னாவுக்கு குளிரும், ஒரு சால்வை கொண்டு வா என்று பணிப்பெண்ணிடம் கட்டளையிட்டார்.
இதைக்கேட்டு நாற்காலியில் இருந்து உடனே எழுந்த ஜின்னா, திருமதி ஜின்னாவுக்கு குளிரடித்தால் அவரே சால்வையை கேட்டுப் பெற்றுக்கொள்வார் என்று கோபத்துடன் பதிலுரைத்துவிட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு கவர்னரின் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
ருட்டியும் யாரிடமும் அச்சம் கொள்ளாமல் மனதிற்கு சரி என்று தோன்றுவதை பேசுபவர்தான் என்று ஷீலா ரெட்டி கூறுகிறார், "1918ஆம் ஆண்டு லார்ட் செம்ஸ்ஃபோர்ட் ஜின்னா தம்பதிகளை ஷிம்லாவில் விருந்திற்கு அழைத்திருந்தார். அப்போது ருட்டி, இந்திய முறைப்படி இரு கரங்களையும் குவித்து வணக்கம் கூறினார். விருந்திற்கு பின்னர் பேசிக்கொண்டிருந்தபோது, ஜின்னா அரசியலில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமானால் ரோமில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவரிடம் நடந்துக் கொள்வதைப் போல் நடந்துக் கொள்ளவேண்டும் என்று செம்ஸ்ஃபோர்ட் அறிவுரை கூறினார்.
அதற்கு ஒரு நொடியும் தாமதிக்காமல் பதிலளித்த ருட்டி, 'எக்ஸலன்சி, நீங்கள் சொல்வதைப் போலவே நான் நடந்து கொள்கிறேன், இந்தியாவில் இந்திய முறைப்படி வணக்கம் சொன்னேன்'" என்றார்
மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்கிறார் குவாஜா ரஜீ ஹைதார். மற்றொரு விருந்தில் வைஸ்ராய் லார்ட் ரெடிங்கின் அருகில் அமர்ந்திருந்தார் ருட்டி. ஜெர்மனியைப் பற்றிய பேச்சு வந்தபோது, லார்ட் ரெடிங் கூறினார், "நான் ஜெர்மனிக்கு செல்ல விரும்புகிறோம். ஆனால் யுத்தத்திற்கு பிறகு நம்மைப் போன்ற பிரிட்டன்வாசிகளுக்கு ஜெர்மன் பிடிக்காது…. எனவே நான் அங்கு போகமாட்டேன்". உடனே பதில் கேள்வி எழுப்பிய ருட்டி, "இந்தியாவிற்கு நீங்கள் எதற்காக வந்தீர்கள் (இந்தியர்களையும் உங்களுக்கு பிடிக்காதே)" என்று கேட்டுவிட்டார்.
திருமணத்தின் தொடக்கத்தில் தம்பதியினரிடையே நிலவிய அன்னியோன்யம், நாளடைவில் குறையத் தொடங்கியது. அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்திய ஜின்னாவுக்கு, அழகான மனைவிக்கும், ஒரே மகளையும் கவனிக்க நேரமில்லாமல் போனது. இருவருக்கும் இடையிலான வயது வேறுபாடும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
ஜின்னாவின் செயலாளரும் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சருமாக பணியாற்றிய எம்.சி சாஹ்லா எழுதுகிறார், "ஜின்னாவும் நானும் மிக முக்கியமான விவகாரங்களை பேசிக் கொண்டிருக்கும்போது மிகவும் அலங்காரமாக அங்கு வரும் ருட்டி, ஜின்னாவின் மேஜையின் மீது அமர்ந்துக் கொண்டு காலை ஆட்டிக் கொண்டிருப்பார். எப்போது பேசி முடிப்போம் என்று காத்துக் கொண்டிருந்து, உடனே அவரை வெளியே அழைத்துக் கொண்டு சென்றுவிடுவார்".
ஜின்னாவின் பதில்
ருட்டியிடம் ஜின்னா கோபத்துடன் பேசியதே இல்லை. ருட்டி இல்லாதபோது மளமளவென்று வேலையை செய்துமுடிப்பார்.
'ரோசஸ் இன் டிசம்பர்' என்ற தனது சுயசரிதையில் சாஹ்லா சுவையான ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார், "ஜின்னாவின் ஆடம்பரமான பெரிய வாகனம் ஒன்றில் `பம்பாய் டவுன்ஹாலுக்குட என்ற ருட்டியின் கையில் ஒரு டிபன் கூடை இருந்தது. அலுவலகத்தின் மாடிப் படிகளில் ஏறிக்கொண்டே ருட்டி சொன்னார், 'ஜே (ருட்டி, ஜின்னாவை செல்லமாக ஜே என்றே அழைப்பார்) உனக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்'.
'என்ன கொண்டு வந்திருக்கிறாய்' என்று கேட்டதற்கு உனக்கு பிடித்த ஹாம் சாண்ட்விட்ச் (பன்றி இறைச்சியால் செய்யப்பட்டது) என்று பதிலளித்தார் ருட்டி.
'மை காட் என்னை தேர்தலில் தோற்க வைக்க முடிவு செய்துவிட்டாயா? நான் முஸ்லிம்களுக்கான தனித்தொகுதியில் போட்டியிடுகிறேன், நான் ஹாம் சாண்ட்விட்ச் சாப்பிட்டது வாக்காளர்களுக்கு தெரிந்தால், எனக்கு ஓட்டுப் போடுவார்களா?'
இதைக் கேட்ட ருட்டியின் முகம் தொங்கிப்போனது. உடனே பையைத் தூக்கிக்கொண்டு படியில் இறங்கி நடந்துபோனார்.
தம்பதிகளின் பிரிவுக்கு அரசியல் காரணங்களும் இருப்பதாக ரஜீ ஹைதர் கருதுகிறார். ஜின்னாவுக்கு 1916இல் இருந்த அரசியல் முக்கியத்துவம் 1926இல் குறைந்துவிட்டது. அதன்பிறகு ஜின்னா வகுப்புவாத அரசியலை கையில் எடுத்தார். ருட்டியின் ஆரோக்கியக் குறைவும் தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாயிற்று.
ருட்டியின் கடைசி தருணங்கள்
நோய்வாய்ப்பட்ட ருட்டி பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு எம்.எஸ் ராஜ்பூதானா என்ற கப்பலில் திரும்பியபோது, ஜின்னாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 'அன்பே, நீ எனக்காக செய்த அனைத்திற்கும் நன்றி. நான் உன்னை விரும்பிய அளவு வேறு எந்த ஆணையும் விரும்பியதில்லை. ஒருமுறை, நீ பறித்த மலரை நீயே கசக்கி எறிந்தாயே, அந்த மலரைப்போல் நான். என்னை நினைவு வைத்துக் கொள்' என்று எழுதியிருந்தார்.
1929 பிப்ரவரி 20ஆம் தேதியன்று ருட்டி ஜின்னா தனது 29-ஆவது வயதில் உயிரிழந்தார். ருட்டியின் கடைசி நாட்களில் அவருடைய நண்பர் காஞ்சி த்வாரகா தாஸ் அவருடன் இருந்தார்.
ஷீலா ரெட்டி கூறுகிறார், "தனது கடைசி காலத்தில் ருட்டி மிகவும் மனச்சோர்வில் இருந்தார் என்று காஞ்சி எழுதியிருக்கிறார். சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று ருட்டியிடம் ஒருமுறை சொன்னபோது, நீங்கள் வரும்வரை நான் உயிருடன் இருந்தால் பார்க்கலாம்… என்று அவர் பரிதாபமான குரலில் சொன்னார்".
ருட்டி அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டதாக பிறகு ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது காஞ்சி கூறியிருப்பதாக ஷீலா ரெட்டி தெரிவிக்கிறார்.
குவாஜா ரஜு ஹைதர் எழுதிய புத்தகம்
ருட்டியின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்ற தகவல் கிடைத்தபோது ஜின்னா, டெல்லியில் வெஸ்டர்ன் கோர்டில் இருந்தார். மும்பையில் இருந்து ஜின்னாவை தொலைபேசியில் அழைத்தவர் ஜின்னாவின் மாமனார் தின்ஷா பெடிட்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு, முன்னாள் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்ட முதல் சந்தர்ப்பம் அது. எந்த மகளை ஜின்னாவுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று தின்ஷா சொன்னாரோ, அதே மகள் உலகை விட்டே செல்லும் இறுதிப் பயணத்தில் இருக்கிறாள் என்று சொன்ன டிரங்கால் செய்தி அது. செய்தி கேட்ட ஜின்னா உடனடியாக ரயிலைப் பிடித்து மும்பைக்கு கிளம்பிச் சென்றார்.
பயணத்தின் நடுவிலேயே வைஸ்ராய் மற்றும் பிற தலைவர்களிடம் இருந்து வந்த டெலிகிராம்கள் மூலம் ருட்டியின் மரணம் ஜின்னாவுக்கு தெரிந்துவிட்டது. ரயில் நிலையத்தில் இருந்து அவர் நேராக கோஜா கல்லறைக்கு சென்றார். இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, ஜின்னாவுக்காக அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஷீலா ரெட்டி கூறுகிறார், "ருட்டியின் உயிரற்ற உடலை கல்லறையில் இறக்கிய பிறகு, அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினரான ஜின்னா, சவக்குழியில் மண்ணை தள்ளியபோது உடைந்து போய் கதறி அழுதார்.
ஜின்னாவின் அழுகையும், உணர்ச்சிகளும் பொதுவெளியில் முதலும் கடைசியுமாக வெளிப்பட்டது காதல் மனைவியின் கல்லறையில்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக