புதன், 27 செப்டம்பர், 2017

வித்தியா கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை! முழு விபரம் ..

மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வு , படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ,
02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
6 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது./newsfirst.lk/

தினகரன் ":
Rizwan Segu Mohideen
(Pix By: Sulochana Gamage)
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய டரையல் அட் பார் (Trial at Bar) மன்றால் இன்றைய தினம் (27) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வழக்கின் 9 ஆம் எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் மற்றும் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம்,  எதிரிகள் உள்ளடங்கலான 7 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் மற்றும் 7 ஆம் சந்தேகநபர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழு பேருக்கும் தலா 30 வருட ஆயுள் தண்டணையுடன், தலா ரூபா 40 ஆயிரம் - ரூபா 75 ஆயிரம் வரையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கு கடந்து வந்த பாதை

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)
13.05.2015
  • பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா வீடு திரும்பவில்லை.
14.05.2015
  • வித்தியா சடலமாக மீட்பு
  • புங்குடுதீவு மக்கள் ஆர்ப்பாட்டம்.
  • சந்தேகத்தில் மூவர் கைது.

15.05.2015
  • வித்தியாவின் இறுதி ஊர்வலம்.
  • நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
18.05.2015
  • சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது.
04.03.2016
  • வித்தியாவின் கொலைக்கு ஒரு தலை காதலே காரணம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
04.03.2016
  • வித்தியாவின் கொலைக்கு சுவிஸில் இருந்து வந்த மற்றுமொரு சந்தேகநபர் திட்டம் தீட்டி கொடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
20.04.2016
  • வித்தியாவின் வழக்கு விசாரணை தொடர்பில் ஜின் டெக் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளருக்கும், தகவல் ஊடக தொழிநுட்ப மையத்தின் பிரதம பொறியியலாளருக்கும் ஊர்காவற்துறை நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
  • மரபணு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதம் குறித்து மே மாதம் ஐந்தாம் திகதி தலைமை ஆய்வாளர் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
18.05.2016
  • வித்தியா கொலை வழக்கின் முக்கிய மரபணு பரிசோதனை அறிக்கை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
  • வன்புனர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்திலிருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரிகளுடன் வழக்கின் முதல் 9 சந்தேகநபர்களின் விந்தணு மாதிரிகள் பொருந்துகின்றனவா என்பது தொடர்பிலான பரிசோதனை அறிக்கையே ஒப்படைக்கப்பட்டது.
வித்தியாவின் பெற்றோர்
13.07.2016
  • வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
20.09.2016
  • யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் பாலியல் வன்கொடுமை கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதிமன்றம் அறிவித்தது.
15.11.2016
  • புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்த வங்கி தரவுகளை வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
02.02.2017
  • வித்தியா கொலை வழக்கின் பத்தாம் இலக்க சந்தேகநபரின் பிணை மனுவை, யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நிராகரித்தார்.
  • வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தே இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
22.02.2017
  • யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கின் 11 ஆம் இலக்க சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறினார்.
28.04.2017
  • வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 10 மற்றும் 12 ஆம் இலக்க சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
05.05.2017
  • கொலை வழக்கு தொடர்பில் ஜூரி சபை அல்லாத, மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்தார்.
  • ஏழு நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவித்தது.
23.05.2017
  • சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டதுடன், அதன் தலைவராக  நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
  • மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிற்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சட்ட மா அதிபர் தெரிவித்தார்.
12.06.2017
  • வித்தியாவின் படுகொலை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (ட்ரயல் அட்பார்) யாழ் மேல் நீதிமன்றத்தில்  முதற்தடவையாக கூடியது.
  • இந்த வழக்கின் 9 சந்தேகநபர்களுக்கும் எதிராக சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம், யாழ். மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் அவர்களுடன் இணைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். இதன் பிரகாரம் கூட்டு பாலியல் வல்லுறவு, கொலை குற்றச்சாட்டுக்கள் நிரம்பிய 41 குற்றச்சாட்டுக்கள் 9 சந்தேகநபர்கள் மீதும் சுமத்தப்பட்டன.
28.06.2017
  • மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 
  • தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சிகளை சுவிஸ்குமார் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
29.06.2017
  • இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன், சுவிஸ்குமார் சுவிட்சர்லாந்து பிரஜை அல்லவெனவும் சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இலங்கையர் எனவும் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்ததுடன் தேவை ஏற்படின் சட்ட உதவி வழங்கத் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
  • பார்வையாளர்கள் நீதிமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டு வஆம் இலக்க சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
30.06.2017
  • நிதி மோசடி தொடர்பில் பிறிதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மென்பொருள் தயாரிப்பு பொறியியலாளர் ஒருவரே ஆறாவது சாட்சியாக சாட்சியமளிப்பு. இதன்போது மென்பொருளைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட காணொளிகளை மீள தரவிறக்கம் செய்ய முடியுமா என சுவிஸ் குமார் தன்னிடம் வினவியதாகவும், தான் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு விருப்பமாகவுள்ளதாகவும் அதனை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி. சில்வாவிற்கு தெரிவிக்குமாறும்இ இதற்கு இரண்டு கோடி ரூபா வழங்க முடியும் எனவும் தெரிவித்ததாக சாட்சியமளிப்பு.
03.07.2017
  • 36 சாட்சியங்களில் ஐவரின் சாட்சியங்களை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நீதிபதிகள் குழு வழக்கிலிருந்து விடுவித்தது. அத்துடன் 9, 4, 7, 15 ஆம் இலக்க சாட்சிகள் சாட்சியமளிப்பு.
04.07.2017
  • 14, 19 ஆம் இலக்ன சாட்சியாளர்கள் சாட்சியமளிப்பு.
05.07.2017
  • 22 ஆம் இலக்க சாட்சியாளரான தடவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியமளிப்பு. அவர் இதன்போது  13 சான்றுப் பொருட்களை திறந்த நீதிமன்றத்தில் பிரித்துக் காண்பிக்கப்பட்டதுடன், அவற்றையும் சாட்சியாளர் அடையாளம் காண்பித்தார்.
07.07.2017
  • படுகொலை வழக்குடன் தொடர்புடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரான ஸ்ரீ கஜன் வெளிநாடு செல்வதற்கு விமானன நிலையம் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டது.
09.07.2017
  • 25 ஆம் இலக்க சாட்சியான, சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் வி.ரீ.தமிழ்மாறனிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
15.07.2017
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டார்.
16.07.2017
  • சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்கவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் அவரை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
18.07.2017
  • முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
  • 38, 21 ஆம் இலக்க சாட்சியங்கள் பதிவு.
19.07.2017
  • 41, 44, 45, 46, 51 ஆம் இலக்க சாட்சியங்கள் பதிவு. சுவிஸ் குமார் சம்பவ தினத்தில் கொழும்பில் தங்கவில்லையென விடுதி உரிமையாளரான 46 ஆம் இலக்க சாட்சியாளர் தெரிவித்தார்.
20.07.2017
  • 42 ஆம் இலக்க சாட்சியாளர் சாட்சியமளிப்பு.
  • உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜனுக்கு வௌிநாடு செல்லவதற்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
22.07.2017
  • யாழ்ப்பாணம் – நல்லூரில் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
24.07.2017
  • 35, 52, 49 ஆம் இலக்க சாட்சியாளர் சாட்சியமளிப்பு
02.08.2017
  • 35 ஆம் இலக்க சாட்சியாளர் தொடர்ந்தும் சாட்சியமளிப்பு.
09.08.2017
  • சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு
22.08.2017
  • சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
28.08.2017
  • 1, 2, 3, 4 ஆம் இலக்க சாட்சியங்கள் பதிவு. சந்தேக நபர்களே சாட்சிக் கூண்டில் ஏறி அந்தச் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
29.08.2017
  • 7, 8, 9 ஆம் இலக்க பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியமளிப்பு. பிரதான நபரான 9 இலக்க சந்தேக நபர் சுவிஸ் குமார் சாட்சியமளிக்கையில், 2015 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வேலணையிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றபோது வேலணை மக்கள் தன்னை மறித்து வைத்து, 'வித்தியா கொலையுடன் தொடர்புடையவன் இவன்தான்' என கூறி மின்கம்பத்தில் கட்டி அடித்ததாகவும், அன்றிரவு 11.30 அளவில் அமைச்சர் விஜயகலா அவருடைய சாரதியுடன் அங்கு வருகை தந்து தன்னைக் காப்பாற்றி விடுவித்ததாகவும் சுவிஸ் குமார் கூறினார்.
  • அத்துடன் சுவிஸ் குமாரின் மனைவியும் சாட்சியமளித்திருந்தார்.
04.09.2017
  • சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் ஊர்காவத்துறை நீதிமன்றில் நிறைவு 
12.09.2017
  • சாட்சியங்களின் தொகுப்புரைகளின் அடிப்படையில் வழக்கின் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் மாணவியைக் கடத்தி து‌ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் தெரிவித்தார். மேலும், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டிருந்தது
13.09.2017
  • சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை
  • சந்தேகநபர்கள் சார்பான சாட்சியங்களின் தொகுப்புரைகள் இடம்பெற்றன.
27.09.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக