திங்கள், 11 செப்டம்பர், 2017

புதுச்சேரி - கிரண்பேடியின் 3 புதிய பாஜக எம் எல் ஏக்கள் டெல்லி பயணம்

புதுச்சேரி: 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு டெல்லி அவசர அழைப்புஅங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பால் புதுவை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்திற்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கும்.
இந்நிலையில் புதுவை காங்கிரஸ் அரசின் பரிந்துரை இல்லாமலேயே மத்திய உள்துறை அமைச்சகம் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இவர்கள் நியமன கடிதத்தை தலைமை செயலாளரிடம் அளித்தனர். இதற்காக சிறப்பு அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து 3 பேரும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி கேட்டனர்.

சபாநாயகர் வைத்திலிங்கம், உரிய அதிகாரம் படைத்த நபரிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறி பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பை தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு சட்டமன்றத்தில் இருக்கை, அலுவலகம் ஒதுக்கித்தரும்படி சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.
இதற்கு சபாநாயகர் வைத்திலிங்கம், தங்களைப்பற்றிய குறிப்புகள் ஏதும் தனக்கு வரவில்லையென்றும், தான் பதவிப்பிரமாணமும் செய்து வைக்காததால் சலுகைகள் வழங்க முடியாது என்று கூறி கடிதத்திற்கு பதில் அனுப்பினார்.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட 3 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்களா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. 15 நாளில் தங்களை அங்கீகரித்து சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் இருக்கை இருக்காது என பா.ஜனதா எச்சரிக்கை விட்டது. ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் தன் சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா சென்றார். ஒரு மாதமாகியும் சபாநாயகர் புதுவை திரும்பவில்லை.
இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்றார். டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.
அப்போது மத்திய உள்துறை மந்திரியிடம், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நடந்த விபரங்களை அறிந்துகொள்ள 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்திக்க நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை காலை நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது:-
புதுவை காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற நாள்முதல் மத்திய பா.ஜனதா அரசுக்கு விரோதமாகவும், மோதல் போக்கை கையாளும் வகையில் செயல்பட்டு வருகிறது. கவர்னரோடும் இந்த அரசுக்கு சுமூக உறவு இல்லை. மத்திய அரசு புதுவை மாநில வளர்ச்சிக்கு தேவையானதை செய்ய தயாராக இருந்தும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இணக்கமாக செயல்படாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் மாநில நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத்திய உள்துறை அமைச்சகம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. இந்த நியமனத்தை புதுவை தலைமை செயலாளர் அங்கீகரித்து சிறப்பு அரசாணையும் வெளியிட்டார். ஆனால் எங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் முன்வரவில்லை. எங்களை சபைக்குள் அனுமதிக்கவும் மறுத்துவிட்டார்.
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே விரோதமாக காங்கிரஸ் அரசும், சபாநாயகரும் செயல்படுவதை காட்டுகிறது.
எனவே இதுதொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் புகார் செய்ய உள்ளோம். யூனியன் பிரதேசமான புதுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக