வியாழன், 28 செப்டம்பர், 2017

ஜெனீவா -- ஐ.நா .வைகோவுக்கு 2 பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் ...

tamilthehindu : ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அமைப்புகள் அளித்த புகாரின்பேரில் ஐ.நா. அமைப்பு, வைகோவின் பாதுகாப்புக்காக 2 அதிகாரிகளை நியமித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 36-வது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்று பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் உரையாற்றிய அவர், “இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார். அவர் பேசி முடித்த பிறகு சிங்களர்கள் சிலர் அவரை தாக்க முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக வைகோவிடம் கேட்டபோது நேற்று அவர் கூறியதாவது: நான் பேசி முடித்தவுடன் இலங்கை பெண் ஒருவர் என்னிடம், இலங்கையைப் பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு நான், ‘இலங்கை தமிழர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள். அவர்களை பற்றி நான் பேசுவதில் என்ன தவறு’ என்று கேட்டேன். அதற்குள் சரத் வீரசேகரா உள்ளிட்ட 4 பேர் என்னை சூழ்ந்துகொண்டு, எல்டிடிஇ-தான் லட்சக்கணக்கானோர் சாவுக்கு காரணம் என்றனர்.
அதற்கு நான், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தவர்கள் நீங்கள்தான் என்றேன். அப்போது, அவர்கள் என்னிடம் தகராறு செய்ய முற்பட்டனர். திட்டமிட்டு பிரச்சினை செய்து என்னை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அந்த சதித்திட்டத்தின் பின்னணி. இதுதொடர்பாக, ஐ.நா.வில் உள்ள தமிழ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்” என்றார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இந்திய அரசும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி: வைகோ மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் குறித்து இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து செப்டம்பர் 27-ம் தேதி (இன்று) சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: சிங்களர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு, இந்தியா தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: வைகோவை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனே இலங்கைத் தூதரை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகோவுக்கு பாதுகாப்பு

வைகோவை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தமிழ் அமைப்புகள் ஐ.நா. அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தன. இதையடுத்து வைகோ பாதுகாப்புக்காக ஐ.நா. சார்பில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் போடப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக