திங்கள், 11 செப்டம்பர், 2017

ஸ்டாலின் :திருச்செங்கோடு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.246 கோடி யாருடையது?...

mayura-akilan. Oneindia : சென்னை: திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அமைச்சரின் பினாமி, 45 சதவீத பணத்தை அபராதமாக கட்டியதால் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார். அந்த அமைச்சர் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கும் நிலையில் 246 கோடி ரூபாய் கருப்புப் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதே? என்று கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ஆம், திருச்செங்கோடு ஐஓபி வங்கியில் 246 கோடி ரூபாய் கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக நானும் பத்திரிகை மூலம் தெரிந்து கொண்டேன். அது தமிழகத்தின் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான பினாமி பணம் என்றும், அதில், 50 சதவிகித பணத்தை வரியாகக் கட்டியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அந்த அமைச்சர் யார் என்பதை ஊடகங்கள் வெளியிட்டால் நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் என்றார்.
கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை தாமாக முன்வந்து கணக்கு காட்டினால் அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதற்காக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தையும் அறிவித்தது. இந்த திட்டத்தின்படி தாமாக முன்வந்து கணக்கு காட்டியவர்களுக்கு 45 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
25 சதவீத பணம் மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. மீதி உள்ள பணத்தில் 4 ஆண்டுகளுக்கு வருமானவரி பிடித்தம் போக 16.5 சதவீத பணம் மட்டுமே 4 ஆண்டுக்கு பிறகு திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 200 தனி நபர்கள் ரூ.600 கோடி வரை டெபாசிட் செய்து இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ரூரல் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு தனி நபர் ரூ.246 கோடியை டெபாசிட் செய்து இருந்தார். அவரிடம் வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிரதான் மந்திரி கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் தனது தவறை ஒப்புக்கொண்டு இந்த பணத்தில் 45% அபராதமாக செலுத்துவதாக அறிவித்தார்.
மேலும் 25 சதவீத பணத்தை அரசு திட்டங்களில் எந்தவித வட்டியும் வாங்காமல் முதலீடு செய்வதாகவும் அறிவித்தார்.
மீதி உள்ள தொகையில் வருமானவரி கட்டியதுபோக 16.5%தொகை மட்டும் 4 ஆண்டுக்கு பிறகு அவருக்கு திரும்ப கிடைக்கும். இந்த பணத்தை டெபாசிட் செய்தவர் அமைச்சரின் பினாமி என்று தற்போது தெரியவந்துள்ளது. அவரது பெயரை வெளியிட வருமானவரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அமைச்சர் யார் என்பதை கண்டறிந்து பெயரை வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக