வியாழன், 14 செப்டம்பர், 2017

தினகரன் எம் எல் ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம்? முடியாது என்கிறார் சேடப்பட்டி முத்தையா .. பேட்டி.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது: சேடப்பட்டி முத்தையா பேட்டி
பேரையூர்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கவர்னர் வித்தியாசாகர்ராவிடம் கடிதம் கொடுத்தனர். இந்த விவகாரத்தில் 19 எம்.எல்.ஏ.க்களும் எனது முன்பு இன்று ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீசு அனுப்பினார். ஆனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது குறித்து தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றிய முழு விவரங்களும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையிலும், தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினர் தகுதியிழப்பு விதிகள் 1986-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு உறுப்பினர் தகுதி இழப்புக்கு மனு கொடுக்கலாம். அதன் மீது சபாநாயகர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முழுமையாக விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.


தற்போது அ.தி.மு.க.வின் சட்டமன்ற கொறடா, சபாநாயகரிடம் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், என்னுடைய அனுமதி பெறாமல் 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும், ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் கூறி உள்ளார். மனுவில் இவ்வாறு கூறப்பட்டதினாலேயே கட்சியில் இருந்து விலகி விட்டதாக கூற முடியாது.

சட்டமன்ற விதிகள் படியும், அரசியல் சட்ட அட்டவணைப்படி தான் உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் சபாநாயகர் கொறடா மனு கொடுத்த போது அதனை ஆராயாமல் விதிமுறைகளை படித்து பார்க்காமல் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். 19 எம்.எல்.ஏ.க்கள், கவர்னரிடம் கொடுத்த மனுவின் உண்மைத்தன்மையை அறிய சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.
சட்டசபைக்குள் நடக்கும் நிகழ்வுகளில் தான் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மீது சபாநாயகர் கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகளில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் எடுத்த முடிவுகள் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அவர் கூறினார் மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக