சனி, 9 செப்டம்பர், 2017

ஸ்டாலின் : நீட் தேர்வுக்கு எதிராக 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:

நீட் தேர்வுக்கு எதிராக 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்
மின்னம்பலம் : ‘நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்’ என்றும், ‘விரைவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்’ என்றும் திருச்சி கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததால், தன்னுடைய மருத்துவர் கனவு கலைந்துபோன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவி அனிதாவுக்காக வெகுண்டெழுந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எட்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி நடத்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை முடிவில், நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று (செப்டம்பர் 8) திருச்சி உழவர் சந்தை அருகே கண்டன பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட எட்டு தலைவர்கள் ஒரே மேடையில் உரையாற்ற முடிவு செய்யப்பட்டது.
நீட் போராட்டத்துக்கு எதிராக ஜி.எஸ்.மணி என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது’ என்று கூறி தடை ஆணையை வழங்கி, ‘கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது’ என்று காவல்துறையினர் ஸ்டாலினிடம் கூற சென்றுள்ளனர். ஆனால், அந்த தடை ஆணையை பெற மறுத்த திமுக ஸ்டாலின் நேராக பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
தடையை மீறி நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், மமக ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் கண்டன உரையாற்றிய திருமாவளவன், “கல்வி தொடர்பான அதிகாரங்களைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டுமென்பதற்காகத்தான் இந்தப் பொதுக்கூட்டம். எனவே, இந்த பொதுக்கூட்டம் எந்த வகையிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அவமதிக்கக் கூடிய செயல் அல்ல. இது எதற்காக என்றால் நீட் தேர்வில் மத்திய, மாநில அரசுகள் நடத்திய நாடகம் என்ன என்பதை பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. மக்களின் போராட்டத்தைப் பார்க்காமல் நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு தீர்ப்பு எழுதினாலும்கூட அது மக்களுக்கு எதிராக இருக்குமேயானால் அதை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள்தான் இங்கு அமர்ந்துள்ளோம்.
நீட் தேர்வுக்கு எதிராக நீதி கேட்டு அனிதா உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார். ஆனால், அனிதாவுக்குத் தெரியாது, உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு நீதி அளிக்கக்கூடிய மன்றம் அல்ல என்று. மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று கூறும் தெம்புகூட மாநில அரசுகளுக்கு இல்லை.
நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டம் அறிவிக்கும் நிகழ்வுதான் இந்த பொதுக்கூட்டம். நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படும் என்று கூறி கடைசி நேரத்தில் கழன்றுகொண்டதால் அனிதா போன்றவர்களுக்கு மருத்துவர் கனவு தகர்ந்து போனது. மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம், இன்டர்நேஷனல் பாடத்திட்டம் என பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள நாட்டில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தப்படுகிறது.
ஒரே மாதிரியான பாடத்திட்டங்களைக் கொண்டுவராமல், ஒரே மாதிரியான தேர்வு எப்படி சாத்தியம்? நீட் மருத்துவத்துக்கு மட்டுமல்ல அனைத்து கல்விக்கும் ஒரே தேர்வு வரும். இதன்மூலம் மனுதர்மச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது மத்திய அரசு. இது அனிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் அல்ல, மனுதர்மத்தை எதிர்த்து நடத்தும் யுத்தம்” என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
“தடையை மீறி கூட்டம் நடத்துவோம். அதனால் எத்தனை மாதம் வேண்டுமானாலும் சிறையில் இருப்போம் என்று ஸ்டாலின் கூறினார். யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், ஆனால் சட்டத்துக்குட்பட்டுத்தான் ஆட்சி நடத்த வேண்டும். ஆனால், இன்றைய மோடி தலைமையிலான ஆட்சி என்பது சட்டத்துக்குட்பட்ட ஆட்சி அல்ல. சட்டத்தை மீறுகின்ற ஆட்சியாக உள்ளது.
மனுதர்மத்தை நிலைநாட்டுகின்ற ஆட்சியாக அது உள்ளது. மனு தர்மத்தின்படி சூத்திரர்கள் படிக்கக் கூடாது. நான்கு வர்ணத்தில் ஒன்றைத் தவிர, மற்ற வர்ணங்கள் படிக்கக் கூடாது. எனவே மனுதர்மத்தை நிலை நாட்டுகிற ஆட்சியாக இது உள்ளது. சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறார் மோடி. ஆனால், நமது நாட்டில் சகிப்புத்தன்மைக்கு இடமில்லை. மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மாற்றுக் கருத்தைச் சொல்கிறவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கிடையாது. சமூக நீதிக்கு எதிரானவர்கள் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள்.
தன் தாயைப் போல யாரும் சாகக்கூடாது என்று மருத்துவம் படிக்க நினைத்த அனிதாவைக் கொன்றது யார்? அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை செய்ய தள்ளப்பட்டார். அனிதாவைத் தற்கொலைக்கு தள்ளியது மத்திய, மாநில அரசுகள்தான்.”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
“நீட் தேர்வுக்கு எதிராக கொந்தளித்து அனைவரும் போராடும்போது, எருமை மாட்டில் மழை பொழிந்தது போலத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் நாங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுவிடுவோம் என்று கூறினார்கள். மாணவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கினார்களே அதை செய்தார்களா? அதிக மதிப்பெண் பெற்றும் தன்னுடைய மருத்துவர் கனவு பறிக்கப்பட்டதே என்று அனிதா தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். அனிதாவின் கனவை மத்திய மாநில அரசுகள் சிதைத்துவிட்டன. அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்வதற்குத் தகுதி கிடையாது.
ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கிடையாது. ஆனால், மாநிலக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு உண்டு. அப்படியென்றால் நாம் இளிச்சவாயர்களா? தற்போது நாம் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குத் தயாராவோம் என்பதை அனைத்துக்கட்சி கூட்டம் வாயிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரசை விமர்சிக்கலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், மாற்றுக் கருத்து சொல்லலாம் தடை கிடையாது என்று கூறுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்துவதோ, கருத்தை கூறுவதோ குடிமகனுடைய உரிமை என்று கூறுகிறது. தமிழக மாணவர்களைக் காக்க நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரையில் அனைத்துக்கட்சி சார்பாக நடக்கும் போராட்டம் தொடரும்.”
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
“தமிழகத்தில் மாற்று ஆட்சிக்குத் தயாராக உள்ளோம். ஏமாற்று ஆட்சிக்கு விடை கொடுப்போம். ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனரே என்ற வயிற்றெரிச்சலில் இதை தடுக்க வேண்டும் என்று எண்ணத்தோடு, தகுதி, திறமை என்று சொல்லி அவர்கள் செய்த சூழ்ச்சிதான் நீட் தேர்வு என்பது.
இன்று நடைபெறும் இந்தப் போராட்டம் தொடக்கமே தவிர முடிவல்ல. பல கட்டங்களில் மாறி மாறி நடக்க இருக்கிறது. அனிதாவை சவப்பெட்டிக்குள் அனுப்ப காரணமாக இருந்த நீட் தேர்வை, அதே சவப்பெட்டிக்குள் மூடி ஆணி அடிப்போம். அதற்கு எங்கள் உயிரையும் கொடுப்போம். அனிதாவின் தற்கொலை மூலம் சமூக நீதியைப் பிணமாக்கியிருக்கிறார்கள். அனிதா என்பது உருவமல்ல; நமது சமூக நீதியின் மூச்சுக்காற்று. இனி இங்கே நீட் இருக்கக் கூடாது. நாளுக்கு ஒரு கூத்து நடத்தி மிகப்பெரிய மோசடி நடத்தி விட்டார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து மாணவர்கள் ஏமாந்து விட்டனர். நீட் தேர்வு மோடி அரசின் மோசடி வேலை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்வி வைப்பது ஏன்? சிபிஎஸ்இ பாடத்திட்டம் மட்டுமே உயர்வு அல்ல. சமச்சீர் கல்வி திட்டம் சிறந்த பாடத்திட்டங்களைக் கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி, பன்னீர் ஆகியோர் வாய் திறக்க மறுக்கிறார்கள். மீண்டும் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.”
இறுதியாக பேசவந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,
“கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களில் முதல் தீர்மானம் நீட் தேர்வுக்கு விலக்கு. அனிதாவின் தற்கொலைக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. திருச்சிக்குப் பல வரலாறுகள் உள்ளன. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற ஐம்பெரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது தமிழ்நாட்டில்தான். திமுகவின் பல மாநாடுகள் நடந்தது திருச்சியில்தான். இந்தப் பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் நடத்த மற்றொரு காரணம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் தந்தை இன்றுவரை திருச்சி காந்தி மார்க்கெட்டிலே மூட்டை தூக்கி கொண்டிருக்கிறார்.
கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து தலைவர்களும் பல்வேறு இடங்களிலிருந்து வந்த நேரத்தில், திருச்சி காவல்துறை ஆணையர் எங்களிடம் வந்து, ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்’ என்ற ஆணையை எங்களிடம் தந்தார். அப்படி அவர்கள் கூறினாலும் தடையை மீறி போராட்டம் நடத்த ஏற்கெனவே நாங்கள் முடிவு செய்திருந்தோம்.
ஆனாலும் அவர்களிடம் உச்ச நீதிமன்றத்தின் நகல் கேட்டோம். ‘இல்லை’ என மறுத்தார்கள். இதுகுறித்து டெல்லி, சென்னையிலுள்ள மூத்த வழக்கறிஞர்கள் ஏற்கெனவே விசாரித்து உண்மையான நிலையை எங்களிடம் விளக்கி கூறினார்கள். பொதுக்கூட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை போடவில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த பாதுகாப்பு போட வேண்டும். அதனை கண்காணிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என்றுதான் கூறியுள்ளது. ஆனால், மாநில அரசின் காவல்துறைதான் தடை போட்டுள்ளது. இதற்கு காரணம் பாஜக.
இந்த இரண்டு நாள்களில் சமூகநீதி காக்க, மாநில உரிமைகள் காக்க, மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவி அனிதாவை இழந்துவிட்டு இங்கு திரண்டிருக்கிறோம் அனிதாவின் உயிரை பறித்தது யார்? அனிதாவுக்கு உரிய கல்வியை இந்த அரசு மறுத்ததன் விளைவாக அவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 1176 மதிப்பெண் பெற்ற மாணவி மருத்துவம் படிக்க வேறென்ன தகுதிகள் வேண்டும். 12 வருடங்கள் படித்து 1176 மதிப்பெண் வாங்கிய மாணவியின் திறமையை, மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவது பல மாணவர்களின் நிலைமை இன்று கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவில் முதல் 25 இடம் வட மாநிலத்தவர்கள். இதில் வெட்கக்கேடு என்னவென்றால் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர்கூட அதில் இடம்பெறவில்லை. ஆனால் மாநில பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வை நடத்தியிருந்தால், ஓர் அனிதா என்ன, ஓராயிரம் அனிதாக்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். மத்திய பாடத்திட்டத்திலிருந்து கேள்வியை கேட்டுவிட்டு, தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தரமான கல்வி இல்லை என்றும், கல்வி மோசம் என்றும் பாஜகவில் உள்ளவர்கள் திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தைப் பரப்புகிறார்கள். தமிழக மாணவர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டை விட இந்தியாவில் தரமான கல்வி முறை எங்காவது உண்டா? இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை உள்ளது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, நீட் தேர்வு எழுதியா மருத்துவம் செய்தார்? இதனால்தான் நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது.
நாளைக்கு பாஜக இங்கே கூட்டம் நடத்த இருக்கிறது. தமிழிசை பத்திரிகைகளுக்கு அறிவித்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கிற விதம் என கூறியுள்ளார். நான் கேட்கும் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல முடியுமா? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.
நீட் தேர்வு தொடர்பாகச் சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்களை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டதே... அந்த தீர்மானம் என்னவானது? ஜனாதிபதியிடம் சென்று சேரவில்லையாமே. நாளை பொதுக்கூட்டம் நடத்தும் பாஜகவினர், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு தருவோம் என்று சொன்னார்கள்... அது என்னவாயிற்று? டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைப் பிரதமர் சந்தித்ததுண்டா? இதற்கு மனசாட்சியுடன் பதில் சொல்ல வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். அப்படி நடத்திவிட்டுத்தான் இங்கு போராட்டம் நடத்துகிறோம். போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலையக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியது. பொதுக்கூட்டத்துக்குத் தடை விதிக்கவில்லை.
அடுத்த கட்டமாக நீட் தேர்வுக்கு எதிராக, வருகின்ற 13ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர் போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நாளை (செப்டம்பர் 10) கவர்னரைச் சந்திக்கிறபோது இதுதான் கடைசிச் சந்திப்பு எனச் சொல்லி இனி சந்திக்க மாட்டோம் என்று கூறவுள்ளோம். எனவே, இந்த ஆட்சி கவிழ்கிற வரை மக்களைத் திரட்டிப் போராட்டம் தொடரும் என்றுதான் கவர்னரிடம் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக