வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கிணறு ! கிராம மக்களை ஏமாற்றிய பன்னீர்செல்வம் .. லட்சுமிபுரம் மக்கள் போராட்டம்

கிணறு விவகாரம்: ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகப் போராட்டம்!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்குச் சொந்தமான கிணற்றை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி லட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு 2 மிகப்பெரிய கிணறுகள் உள்ளன. மேலும் புதிதாக ஒரு கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
இதனால் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 மாதங்களுக்குக் கிணற்றில் இருந்து இலவசமாகத் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும், கிராமத்தினர் அந்த நிலத்தை வாங்கினால் கிணற்றை தானமாக தருவதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

எனவே, மக்கள் நிதி திரட்டி கிணறு மற்றும் நிலத்தை வாங்க முடிவு செய்தனர். ஆனால் திடீரென கிணறு, நிலம் ஆகியவற்றை பன்னீர்செல்வத்தின் நண்பர் சுப்புராஜ் பெயருக்கு விற்பனை செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 6ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதம், கடையடைப்பு, மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கிணற்றை ஊராட்சிக்குத் தானமாக ஒப்படைப்பதாக ஓ.பி.எஸ். தரப்பில் உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கிணற்றை ஒப்படைக்க எந்தவித நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம கமிட்டியினர் தெரிவித்தனர்.
அதன்படி, ஆகஸ்டு 19ஆம் தேதி வாயில் கறுப்புத் துணி கட்டி அமைதி ஊர்வலம் நடத்த உள்ளோம். மறுநாள் 20ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். கிணறு எங்களுக்குக் கிடைக்கும் என்ற நல்ல முடிவு வரும்வரை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக