செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ஆணவக் கொலைகளை தடுக்க தனிப் பிரிவு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கால் வெற்றி!

thetimestamil :தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசார ணைக்கு வரவுள்ளதையொட்டி மதுரை மாநகர் மற்றும் சேலத்தில் மட்டும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் விமலாதேவி. இவர் உசிலம்பட்டி போலிப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்க சக்திகள் விமலாதேவியை 1.10.2014 அன்று படுகொலை செய்து எரித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புக்களின் துணையோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் திலீப்குமார் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விமலாதேவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதுடன் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தமிழகஅரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட சிறப்புப்பிரிவு அமைக்கப்படவேண்டும்
24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும்.
அச்சத்தில் உள்ள தம்பதியினரை பாதுகாப்பதற்கு அவர்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும், இதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது வழிகாட்டுதல்களை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை 13.4.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வழங்கினார். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் உ.நிர்மலாராணி, கே.சி.காரல்மார்க்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றுமாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.
ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் தீர்ப்பை செயல்படுத்ததமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சகட்சிக்கும்,நீ திமன்றத்தில் நீதிமன்றஅவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது
இந்த வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளநிலையில் மதுரை மற்றும் சேலத்தில் மட்டும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் வரவேற்கிறது.
சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும் என்பதற்காக சேலம் முதல் சென்னை வரை 400 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டோம்.
அதைத் தொடர்ந்து 29.6.2017 அன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
தமிழகத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
அணைத்து மாவட்டங்களிலும் உடனடியாக சிறப்பு பிரிவை ஏற்படுத்திட வேண்டும்
வழக்கில் உதவிய வழக்கறிஞர்கள், தோழர்கள், நடை பயணத்தில் பங்கேற்ற தோழர்கள், எல்லா நிகழ்விலும் வழிகாட்டி, உடனிருந்து பங்காற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நடைபயணத்தில் பெரும் உதவி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த மகிழ்வான நேரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மையத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக