ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஓப்ரா வின்ஃப்ரே (அமெரிக்காவின் முதல் கறுப்பின மல்ட்டி பில்லியனர்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: ஓப்ரா வின்ஃப்ரே (அமெரிக்காவின் முதல் கறுப்பின மல்ட்டி பில்லியனர்)minnambalam : அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர், டாக் ஷோ தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், தொழில்முனைவோர், அமெரிக்காவின் சிறந்த நன்கொடையாளர் என பன்முகத் தன்மை கொண்ட உலகின் மிகச் சிறந்த பெண் ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.
வழக்கமாக மிகப்பெரிய தொழில்முனைவோர்களின் வெற்றிக்கதை என்பது சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், அமெரிக்காவின் கறுப்பினப் பெண்ணான ஓப்ரா வின்ஃப்ரேவின் வெற்றிக் கதையோ கடும் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த ஒரு பெண்ணின் உழைப்பின் அடையாளமாகத்தான் பதிந்திருக்கிறது. இன்று தனது உழைப்புக்கான ஆயிரக்கணக்கான அங்கீகாரங்களை வின்ஃப்ரே பெற்றுவிட்டார். இந்த உயரிய நிலையை அடைந்த அவருடைய பயணத்தின் பாதையை நாமும் அறிவோம்.

ஓப்ரா கெய்ல் வின்ஃப்ரே 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு மாகாணமான மிசிசிபியில் உள்ள கொசியஸ்கோவில், திருமணம் செய்துகொள்ளாத இணையர்களான வெர்னிட்டா லீ மற்றும் வெர்ணன் வின்ப்ஃரே ஆகியோருக்கு பிறந்தார். இவர் பிறந்தவுடன் சிறிது காலத்திலேயே கருத்து முரண்பாடு காரணமாக பெற்றோர் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து வின்ஃப்ரே தனது தாய்வழி பாட்டி வீட்டில் வளர்ந்தார். தனது ஆறு வயது வரை மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். குழந்தையாக இருக்கும்போதே தாய், தந்தையைப் பிரிந்து வாழ்ந்ததால் தாய் தந்தையின் அன்புக்கு மிகவும் ஏங்கினார்.

இதனால் தனது ஆறாவது வயதில் பாட்டியிடம் இருந்து அம்மாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் வறுமை வின்ஃப்ரேவை வாட்டியது. மேலும், தனது குடும்ப உறவினர்களாலேயே ஒன்பது வயது முதல் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளார். தனது 14ஆவது வயதிலேயே ஆண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்த குழந்தை பிறந்த சில நாள்களிலேயே இறந்துவிட்டது. இதனால் பாதுகாப்பு கருதி நாஷ்விலில் இருந்த தன்னுடைய தந்தையின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தந்தை மிகவும் கண்டிப்புடன் வின்ஃப்ரேவை வளர்த்தார். அதேசமயம் வின்ஃப்ரேவை, ஊக்குவித்து இவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். தினமும் புத்தகங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்; தினமும் ஐந்து புதிய சொற்கள் படித்துக் கற்றால்தான் இரவு உணவே வின்ஃப்ரேவுக்கு அவருடைய தந்தை வழங்கினார். இதனால் வின்ஃப்ரே கல்வியில் சிறந்து விளங்கினார். மேலும் பள்ளியில் நாடகக் குழு, விவாதக் குழு, மாணவர் குழு போன்றவற்றில் இணைந்து செயல்பட்டார். எல்க்ஸ் கிளப் நடத்திய பேச்சுப் போட்டியில் வென்று பரிசு பெற்றார். அடுத்த ஆண்டில் வெள்ளை மாளிகையில் நடந்த இளைஞர்களுக்கான கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
தனது 17ஆவது வயதில் மளிகைக் கடையில் பணியில் சேர்ந்தார். இவர் செய்த முதல் பணியே இதுதான். மேலும், 17ஆவது வயதில் டென்னீஸ் மாகாண கறுப்பின அழகி பட்டத்தையும் வென்றார். பின்னர் உள்ளூர் வானொலியில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகவும் இணைந்தார். இங்கு இவர் தனது இரண்டாம் ஆண்டு கல்லூரியை முடிக்கும் வரை பணியில் இருந்தார். ஊடகத்துறைக்கான முதல் அடித்தளமாக இவருக்கு அமைந்தது இதுதான் என்றே கூறலாம். பின்னர் நாஷ்விலின் உள்ளூர் தொலைக்காட்சியான டபுள்யூ.எல்.ஏ.சி தொலைக்காட்சியில் முதல் கறுப்பினப் பெண் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1976ஆம் ஆண்டு டபுள்யூ.ஜே.இசட். டி.வி-யில் ஆறு மணிச் செய்திகளில் இணை வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் அந்த தொலைக்காட்சியில் ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்ற சிகாகோ அனுப்பப்பட்டார். வின்ஃப்ரே இந்த நிகழ்ச்சியில் இணைந்த பின் இதைப் பெண்கள் சார்ந்த விவாதமாகவும், நிகழ்கால மற்றும் தர்க்கமான சிக்கல்களைக் கையிலெடுத்தும் விவாதித்தார். மூன்று மாதத்தில் இந்த நிகழ்ச்சி மிகப் பிரபலம் அடைந்தது. 1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியின் பெயர் ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்று பெயர் மாற்றப்பட்டு, ஒரு மணி நேர நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது.

1985ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பெயில் பெர்க் இயக்கிய படத்தில் குயின்ஷி ஜோன்ஸ் உடன் இணைந்து நடிகையாகவும் அறிமுகம் ஆனார் வின்ஃப்ரே. இந்தப் படம் அலைஸ் வாக்கர் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படத்தின் பெயர் தி கலர் பர்ப்பிள். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான வின்ப்ஃரே ஷோ ராக்கெட் வேகத்தில் வளர்ந்தது. இதையடுத்து இந்த நிகழ்ச்சி 138 நகரங்களில் ஒளிபரப்பப்பட்டது. ஒளிபரப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 200 ஆனது. இதைத் தொடர்ந்து இந்த தொலைக்காட்சி நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தது. 1986ஆம் ஆண்டு வின்ஃப்ரே சிகாகோ அகாடமியில் இருந்து பெண்கள் தேசிய அமைப்பின் சாதனையாளருக்கான சிறப்பு விருதைப் பெற்றார். வின்ஃப்ரே முதன்முதலாக 1986ஆம் ஆண்டு சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்த நிறுவனம் சொந்தமாகத் தலைப்புகளைத் தயார் செய்து தொலைக்காட்சி நாடகங்களை உருவாக்கியது.
பின்னர் 2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஓப்ரா வின்ஃப்ரே நெட்வொர்க் (ஓ.டபுள்யூ.என்) நிறுவனத்தைத் தொடங்கினார். ஓப்ரா வின்ஃப்ரே ஷோ இறுதியாக 2011ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை வின்ப்ஃரே இயக்கி வருகிறார். அதேபோல பல்வேறு 'ரியாலிட்டி ஷோ'க்களையும் இவர் தயாரித்துள்ளார். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல், தயாரித்தல் ஆகிய பணிகளுக்கு இடையில் திரைத்துறையிலும் இவருடைய பயணம் 1985ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதனால் இவருடைய சொத்து மதிப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. வட அமெரிக்காவின் முதல் கறுப்பின மல்ட்டி பில்லியனர் என்ற வரலாற்றுப் பெருமையையும் ஓப்ரா வின்ஃப்ரே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் தன்னுடைய பாட்டி வீட்டில் உண்ணவும், உடுக்கவும்கூட போதிய வசதியில்லாமல் வறுமையின் பிடியில் சிரமப்பட்ட இவர் இன்று, மலைகள் மற்றும் கடல்கள் என இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கலிஃபோர்னியாவில் உள்ள மாண்டசிடோ பகுதியில் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்த எஸ்டேட்டில் வாழ்கிறார். அதுமட்டுமின்றி லேவல்ட்டீ, நியூ ஜெர்சி, டெல்லுரைடு, கொலரேடோ, ஹவாலி, மயி, சிகாகோ, இல்லோநிஷ், ஃபிஷர் ஐஸ்லேன்ட், ஃபுளோரிடா ஆகிய பகுதிகளிலும் வின்ஃப்ரேவுக்கு சொத்துகள் உள்ளன.

இவருடைய தொலைக்காட்சி விவாதங்கள் அமெரிக்காவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதே, ஒருமுறை குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்ற தலைப்பில் நடத்திய நிகழ்ச்சியில் அவரே கூறியது. இந்த நிகழ்ச்சி அமெரிக்கா முழுவதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தால் அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டனால் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1993ஆம் ஆண்டு மைக்கல் ஜாக்சனிடம் இவர் எடுத்த பேட்டி அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 3.65 கோடி மக்களால் பார்க்கப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டி அமெரிக்காவின் சிறந்த நன்கொடையாளர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். குறிப்பாக அமெரிக்காவின் முதல் 50 நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையும் இவரையே சேரும். 2013ஆம் ஆண்டில் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிரிக்க - அமெரிக்க வரலாற்றுப் பண்பாட்டு அருங்காட்சியகத்துக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கும் சூழலில், சிறு வயது பல்வேறு இன்னல்களுக்கு ஆளான கறுப்பின பெண் ஒருவர் தனது திறமையாலும், உழைப்பாலும் அமெரிக்காவின் கறுப்பின மக்களின் முதல் மல்ட்டி பில்லியனராக வளர்ந்தது என்பது மிகவும் போற்றப்படக்கூடியது.
- பிரகாசு
மின்னஞ்சல் முகவரி: prakash@minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக