புதன், 16 ஆகஸ்ட், 2017

வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் ! சுதந்திர தின சிந்தனைகள் ..

35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
சுதந்திர தினம் குறித்து மக்களின் கருத்தறிய காஞ்சிபுரம் நகரத்தை பெரும் மழையில் வலம் வந்தோம்.
சிலர் சுதந்திர தினம் குறித்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்கத் தயங்கினர். மக்கள் தங்களது பிரச்சினைகைளக் கூறினாலே “ஆன்டி இன்டியன்” என்று முத்திரை குத்துகிறார்கள் காவிக் கட்சியினர்.  அதனாலென்ன? “என் போட்டவோட நான் சொன்னத கொட்ட எழுத்துல போடு.. கொண்டாடுறவனுங்க என் வீட்டுக்கு வரட்டும் நான் பாத்துக்கிறேன்,  என்கிறார்கள் உழைக்கும் பெண்கள்!  சிலரோ எந்த பேப்பர்ல போடுவீங்க? நாளைக்கே போட்டுடுவீங்களா? போலிஸ் பிடிச்சுக்குமே என்று கேட்டனர்!
சுதந்திர தின கேள்வி, பேட்டி என்றதுமே போலீசிடம் சிக்கிய கைதி போல அச்சப்படும் தொழிலாளிகள், “நாட்டு நடப்பு அப்படி இருக்குதுப்பா. உண்மைய சொன்னா எங்களுக்குதான் சிக்கல்” என்று ஆரம்பித்து உள்ளக் குமுறலை கொட்டுகிறார்கள். அவர்களில் சிலரை சந்தியுங்கள்.

சங்கர், எம்.பி.ஏ, தனியார் நிறுவன ஊழியர்

நம்ம சுதந்திரத்த நம்ம தான் பாத்துக்கணும். யாரையும் நம்பி பிரயோஜனம் கிடையாது. வெள்ளக்காரன் அப்ப இங்கிருந்து ஆண்டுட்டு இருந்தான். இப்ப, அவன் நாட்டலருந்தே ஆளுறான். அவன் அரசியல்வாதிய ஆளுறான். அரசியல்வாதி நம்மள அடிமையா நடத்துறான். என்ன பொருத்த வரைக்கும் 71 வருசமெல்லாம் ஒரு பெருமை கிடையாது. படிப்புக்கேத்த வேலை இல்லை, சம்பளமும் இல்ல. 71 வருக்ஷம் சுதந்திரம் கிடைச்சு என்ன பலன் சொல்லுங்க?
மாலா, ஜெயா – மருத்துவமனை துப்புரவு தொழிலாளிகள்.

சுதந்திரமா?…(சிரித்துவிட்டு…) வெள்ளக்காரன்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம்.. அடிச்சுட்டு ரொட்டியாவுது கொடுத்திருப்பான். இவனுங்க சுதந்திரனுமுட்டு இருக்கறத எல்லாம் புடுங்குறானுங்க.
ரெண்டு ரூமு, பிரிட்ஜ் இருந்தா ரேஷன் கிடையாதாம். கஷ்டபட்டு வயித்த வாய கட்டி கௌரவமா இருக்க ஒரு வீடு கட்டுனா ரேஷன் கட்டாம். அப்ப.. ரோட்டுல பொங்கி… தின்னுட்டு.. நடுத்தெருவுல தான் படுத்துக்கணும் போல. GST -னா இன்னானே தெரியல. இட்லி சாப்பிட்டதுக்கு 40 ரூபான்றான். இனி, பசிக்கு சாப்பிட கூட முடியாது போலருக்கு. என்ன மாதிரியான வேல செய்யுறோம். வீட்லயும் நிம்மதி இல்ல. இவனுங்களும் அவன் பங்குக்கு சாவடிக்கிறானுங்க…
நான் சொன்னதெல்லாம் கொட்ட எழுத்துல ஃபோட்டோவோட போடுங்க..சுதந்திரம் கொண்டாடுறவனுங்க எங்க வீட்டுக்கு வரட்டும் பாத்துக்கறேன்!
விஜய குமார், வயது-40,  ஆட்டோ டிரைவர்

சுதந்திரமல்லாம் எங்களுக்கு கிடையாதுன்னு எழுதிக்கோங்க. இந்த ஆட்டோ என் தெய்வம். இ்ப்ப ஒரு சவாரி போனேன். இறக்கி விட்டுட்டு மீதி வாங்குறதுக்குள் ஒரு போலீஸ் முன்னாடி லத்தியிலயே ஓங்கி அடிச்சுது. புது ஆட்டோ அப்படியே பெரிய கீறல் விழுந்துடுச்சு. கேட்டா,எவ்வளவு நேரம் இங்கயே நிறுத்துவ-ன்னு கேக்குறான். 200 ரூபாயயும் புடுங்கிட்டான். அது மட்டும் இல்ல. அந்த கீறலுக்குடிங்கரிங் பண்ணி பெயிண்ட் அடிச்சா 1000 ரூபா ஆயிடும்.
இதுல எங்கங்க எங்களுக்கு சுதந்திரம்? வயித்துக்கு சாப்பிட முடியல. GST -ன்றான் , வெல எல்லாத்தயும் ஏத்திட்டான். 400 ரூபா சம்பாதிச்சா 200 ரூபா மாமூல். எப்படி கேள்வி கேட்பேன்? குடும்பத்த கவனிக்கனுமே. எவ்ளோ பிரச்சினைகள் இருக்கு.. எத சொல்றதுன்னு தெர்ல.. எப்படி தீக்கிறதுனும் தெரியல.. எல்லா ஆட்டோ காரங்களுக்கும் இதான் நிலை. என்ன சுதந்திரம் இருந்து என்ன பிரயோஜனம். வயித்த கழுவ எதயும் கேள்வி கேட்க முடியல…
குமார், வயது-50, நகராட்சி ஊழியர்

நாடு நாடா சுத்தி நம்ம நாட்ட விக்கிறத தவிர வேற எந்த வேலையயும் செய்யல பிரதமரு. நம்ம நாட்டுல என்ன வளர்ச்சி இருக்கு. ஒண்ணும் கிடையாது.
சின்ன கொழந்தயக் கேட்டாக்கூட சொல்லும், சும்மா ஊர சுத்துர மோடிய பத்தி…வெளிநாட்டு முதலாளிங்க கூட கூட்டு வெச்சு நம்ம நாட்டுல வெளிநாட்டு பொருள விக்கிற ஏஜென்டா இருக்கற மோடியப் பத்தி எனக்கு தெரியாதா? (இப்படியெல்லாம் பேசினா நாளைக்கு உன்ன கூண்டுல போட்றுவாங்க என அருகில் இருந்தவர் சொல்ல) அவன் அப்பவூட்டு காசுலயா எனக்கு சம்பளம் வருது… நான் பயப்பட. வரிப்பணத்துல சம்பளம் தர்றான்.. எனக்கு பயமெல்லாம் கிடையாது. சுதந்திரம் எல்லாம் சும்மா!
விநாயகம்,வயது- 25, சலூன் கடை

என்னோட கருத்து வேற மாதிரி இருக்கும். நம்ம அரசியல்வாதிங்க சரி கிடையாது. சுத்தி, சுத்தி எத்தன கட்சி, எத்தன தலைவரு ஆனா ஜனங்க கஷ்டப்பட்டாதான் சோறு. எல்லாரையும் போலத் தான் நானும்.. வீடு கடை, முடிஞ்சா பிக்பாஸ்னு போய்டுவேன். ஜல்லிகட்டுக்காக சேர்ந்த கூட்டம் ஏன் விவசாயிகளுக்காக சேரலன்றதுதான் என்னோட ஆதங்கம்.
நீ ஏண்டா கொழந்தைக்காக போராடுற மொதல்ல? அம்மாவ காப்பாத்துடா. கொழந்தய அம்மா காப்பாத்திக்கும். அம்மாதான் விவசாயி அவனோட குழந்த மாடு; அம்மாவே இல்லாம குழந்த என்னங்க பண்ணும்? சரி.. சுதந்திர நாள சுதந்திரமா கொண்டாடுறமா? இல்ல, ஏழு அடுக்கு பாதுகாப்பு, எட்டு அடுக்கு பாதுகாப்பு னு போட்டு கொண்டாடுறானுங்க.. விவசாயிய காப்பாத்தவே வழி இல்லாத இந்த  நாட்டுல சுதந்திரத்த டிவி -யிலதான் கொண்டாடணும்.
மகேஷ், லோடு வண்டி டிரைவர்

என்ன பொருத்தவரைக்கும் பணக்காரன் கொள்ள அடிக்கறதுதான் சுதந்திரம். குழந்தைக்கு ஒரு கிராம் நகை எடுக்க போனா ஆயிரத்தெட்டு வரி, கூலினு எல்லாத்தையும் நம்ம கிட்ட புடுங்குறான். அதையே திருப்பி கொடுத்தா பாதி விலைக்கு கூட எடுக்க மாட்டான். என்ன மாதிரி டிரைவருங்களுக்கு சவாரிய பொருத்து தான் சாப்பாடு. 35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
வண்டிக்கு பாக்கி கட்டணும். அதுக்கு GST -யும் சேர்த்து கட்ட சொல்றான். ஆனா என்னுடைய வருமானம் மாறவே இல்ல. கவர்மென்ட் எங்க இருக்குன்னு தெரியில. எந்த வேலைக்கு போனாலும் அலைய விடுறான். ஒரு சர்டிபிகேட்ட வாங்க அங்க போ இங்க போன்னு துரத்துறான். அரசியல்வாதிங்க கிட்ட, அவனுங்கள பத்தி  நா சர்டிபிகேட் கேட்டுருக்கணும். அப்படி கேக்காம ஓட்டு போட்டது நம்ப  தப்பு!
செய்தி, புகைப்படம் : வினவு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக