வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் பாஜகவுக்கு?

karl marksஜி. கார்ல் மார்க்ஸ்: இந்த ஆட்சி கலையாது, அவ்வாறு கலைக்க முயலும் தினகரன் போன்றவர்களைக் கைது செய்து உள்ளே போடுவார்கள். இதைக் கலைப்பதற்காகவா மோடி இத்தனை முறை ஓபிஎஸ் வந்து சந்திப்பதற்கு வாய்ப்பளித்தார், இந்த இணைப்பை சாத்தியப்படுத்தினார்?.
முழு ஆட்சிக்காலத்தையும் ஆள்வதற்கு அனுமதித்து அதிமுக கூட்டணியுடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதும் பிறகு அதிமுகவை மொத்தமாக விழுங்குவதும்தான் பிஜேபியின் திட்டம் என்று சீமான் அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். இந்த தியரியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் முழுக்கவும் உண்மையல்ல. ஏன் என்று பார்க்கலாம்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பிஜேபி கடைபிடிக்கிற அணுகுமுறையை ஆராய்வோம். முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அது அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகம் அமைக்கிறது என்றால், பிஜேபியின் செயல்திட்டம் இப்படியா இருக்கும்? அதன் செயல்பாடுகள் எதிலாவது, அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்றுவதற்குத் தேவையான மக்கள் நல நடவடிக்கைகளின் சுவடுகள் இருக்கிறதா?
நீட் விவகாரம் தொடங்கி Hydrocarbon corridor அறிவிப்புகள் வரை எல்லாவற்றிலுமே, அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ளவற்றில் இத்தனை மூர்க்கமாக நடந்துகொள்ள அது விழையுமா? தமிழக மக்களையோ அதன் உணர்வுகளையோ மயிரளவாவது மதித்த பண்பு அதில் தொனித்ததா? இல்லையே ஏன்? இது ஓட்டரசியல் தளத்தில் அவர்களுக்கு பின்னடைவைத்தானே ஏற்படுத்தும்.
ஆக அரசியல் ரீதியாக பிஜேபி பின்னடைவை நோக்கிதான் நடந்து கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி வருகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதே. அரசியல் ரீதியாக அது தமிழகத்தில் காலூன்றத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றினாலும் இதைப் புரிந்துகொள்வதற்கு நாம் “அரசியல் ரீதியாகக் காலூன்றுவது” என்றால் என்ன என்பதை அதன் அடிப்படை அர்த்தத்துடன் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பிஜேபி கையாளும் செயல்திட்டம் என்பது மக்களுடன் உரையாடலின் வழியாக உட்புகுவது அல்ல. மாறாக இங்கு நிலைபெற்றிருக்கிற அரசியலை அதாவது திராவிட அரசியலை அழித்தொழிப்பதன் வழியாக அரசியல் வெற்றிடத்தை உருவாக்குவதும் அதன் வளர்ச்சிப்போக்கில் அந்த வெற்றிடம் வலதுசாரித் தன்மையாக கனிவதை உறுதிப்படுத்துவதுமே.
மற்ற எந்த காலத்தையும் விட தமிழகம் மிகப்பெரிய வாய்ப்பை இப்போது அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கான ஒளிக்கீற்று கருணாநிதியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. திராவிட இயக்க அரசியலின் வெற்றிகளுக்கும் அது சாதித்தவைகளுக்கும் கருணாநிதிக்கு எத்தகைய பங்களிப்பு இருக்கிறதோ அதற்கு நிகரான பங்களிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த சீரழிவிலும் அவருக்கு இருக்கிறது. அதைச் சென்ற பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அவரிடம் செய்து காண்பித்தது. எந்த மிசாவிற்கு எதிரான நெஞ்சை நிமிர்த்தி நின்றாரோ, எந்த எமர்ஜென்சியின் போது அடங்காமல் திரிந்தாரோ அதே கருணாநிதியை தனது காலடியில் கொண்டு வந்து நிறுத்தியது காங்கிரஸ்.

அது காங்கிரசோ பிஜேபியோ அவர்கள் திராவிட இயக்கங்களை சிந்தாந்த ரீதியிலான அச்சுறுத்தும் இயக்கங்களாகத்தான் பார்த்தார்கள். ஏனெனில் வரலாற்றில், அவர்கள் எதிர்பாராத அளவுக்கு சமூகத் தளத்தில் திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு. சமூக சீர்திருத்தம், சமத்துவம், எளியவர்களின் அரசியல் பங்கேற்பு போன்றவற்றை தேர்தல் அரசியலுடன் இணைத்ததில் அவை அடைந்திருந்த வெற்றி அத்தகையது. அதுதான், காங்கிரசை தமிழகத்தில் இருந்து முழுக்கவும் அப்புறப்படுத்தியது. பிஜேபி என்னும் சொல்லையே தமிழகத்தில் இல்லாமலாக்கி வைத்திருந்தது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசும் யாரையும் மனிதகுல விரோதிகளாகப் பார்க்கும் பண்பை அவை வளர்த்தெடுத்து அரசியல் தளத்தில் நிறுவியிருந்தன. இவையெல்லாம் நேர்மறை அம்சங்கள்.
இதன் மற்றொரு பக்கத்தில், எல்லா சாதனைகளையும் தனிமனித சாதனைகளாக முன்வைக்கிற அரசியல்வாத அபத்தத்தை கருணாநிதி செய்தார். மேலும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வாரிசு அரசியல்’ என்னும் பண்பு திராவிட இயக்கங்களின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான சுய சீரழிவை ஊக்கப்படுத்தியது. அது இயக்கத்தின் எல்லா மட்டத்திலும் பரவி நோயைப் போல வளர்ந்தது. ஆக அது இரண்டு வகையில் இயக்கப் பண்பை அழித்தது.
ஒன்று, இயக்கம் என்பதன் அர்த்தத்தை மாற்றியமைத்து தனி மனிதத் துதி, கொள்கையற்ற குழு அரசியல் என்பதாகத் திரியச் செய்தது. இரண்டாவது, சமரசங்களுக்கு எதிராகப் பேசும் தார்மீகங்களை இழந்ததன் வழியாக காத்திரமான புதிய தலைவர்கள் உருவாகும் வழியை அடைத்துவிட்டது.
மேலும் கடந்த பதினைந்தாண்டுகளில் அரசியல் குறித்த புரிதலுக்கு வந்திருந்த இளைஞர் திரளின் முன்னால் கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது. எழுபதுகளில் எது இளைஞர்களின் கோஷமாக இருந்ததோ அதன் முன்னால் இன்றைய தலைமுறை வெட்கித் தலை குனிய நேர்ந்தது.
இதன் மற்றொரு பக்கத்தில் எம்ஜியாரின் அரசியல் என்பது ‘அரசியல் சொரனையை இல்லாமலாக்குவதன் வழியாக மக்களைத் திரட்டுவது’ என்கிற ஆதார அரசியல் அடிப்படையைக் கொண்டதொரு லும்பன் அமைப்புமுறை. அடித்தட்டு மக்கள் பங்கேற்பு, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கியது போன்ற ஜிகினா வார்த்தைகளைப் போட்டு அவரது அரசியலை எவ்வளவு முட்டுக்கொடுத்து நிப்பாட்டினாலும், அதிமுக என்னும் கோபுரம் அடிமைத்தனம் என்னும் அஸ்திவாரத்தில் மட்டுமே நிற்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர் பொன்மனச்செம்மல்.
அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் இருக்கும் தலைவர்களையெல்லாம் உள்ளடக்கி அரசியல் செய்ய வேண்டிய நெருக்கடியாவது கருணாநிதிக்கு இருந்தது. எம்ஜியாருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதன் அடுத்த கட்டம் ஜெயலலிதா. எம்ஜியாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அந்த தத்துவார்த்தப் பின்புலம் பிளஸ் பார்ப்பன மேட்டிமைத்தனமும் சேர்ந்துகொள்ள புதுவித அரசியல் ஃபார்முலா ஒன்று உருவானது. ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் எல்லாம் அடங்கிப்போனது.
ஜெயலலிதாவுக்கு, “தனக்குப் பிந்தைய அதிமுகவின் எதிர்காலம் என்ன..?” என்பது குறித்த எத்தகைய மதிப்பீடுகள் இருந்தன என்பது அடிப்படையான ஒரு அரசியல் கேள்வி. அவருக்குத் தெரியாதா, தான் உருவாக்கி உலவவிட்டிருப்பது முழுக்கவும் பொறுக்கிகளையும் திருடர்களையும்தான் என்று. தெரியும். அது மட்டுமல்ல, தமக்கு தமது கட்சி நிர்வாகிகள் மீது என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்புதான் அவர்களுக்கும் தன் மீதும் இருக்கும் என்றும் அவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு இங்கு இப்போது நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் எது குறித்தும் அதிர்ச்சியே இருக்காது. ஏனெனில் அதனுள்ளேதான் அவரும் இருந்தார். முறையாக கணக்கு வைத்து ஒவ்வொரு அமைச்சரிடம் பணத்தை வாங்கிக் குவித்தது, கணக்கில் ஏமாற்றிய அமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்து மிரட்டியது என்று அவரது செயல்கள் அவர் மீது சுமத்தப்படும் புனித வரையறைகளுக்கு சற்றும் தொடர்பில்லாதவை.
இன்று நம்முன்னால் வளர்ந்து நிற்கிற எடப்பாடி, ஓபிஎஸ் போன்ற ஆபாச ஆகிருதிகளின் ஆதித்தாய் ஜெயலலிதா. இங்கு தகர்த்து எறியப்பட வேண்டியது அவர் மீதான புனித பிம்பம். அவரை அரசியல் ரீதியாக கறாரான விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுதான் மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் யாரும் செய்யவேண்டியது. அவர் இந்நேரம் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, அது நடந்திருக்காது என்பது போன்ற சொல்லாடல்கள் எல்லாம் வெற்று உளறல்கள் அல்லாமல் வேறில்லை. நாளையே மோடி இல்லை என்றால் பிஜேபி சிதைந்துவிடுமா? இல்லையல்லவா? அப்படி ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதும் நிலைக்கச் செய்வதும்தானே தலைமைத்துவம்.
இந்த விஷயத்தில் திமுகவும் இன்னொரு அதிமுகதான். இல்லை… இல்லை… இங்குதான் எங்கள் ஸ்டாலின் இருக்கிறாரே என்று உடன்பிறப்புகள் நினைக்கலாம். ஸ்டாலினுக்குப் பிறகு யார்? இந்த கேள்விக்கான பதிலை நேர்மையாகப் பரிசீலித்து பதில் சொல்ல முயலுங்கள். திமுகவின் எதிர்காலம் அடுத்து யாரை நம்பி இருக்கிறது? உதயநிதியையா? இல்லையா? வேறு யார்…? உங்களால் கைகாட்ட முடிந்த அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே…? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது பிஜேபி கடைபிடிக்கும் மூர்க்கத்திற்கான பதில்.
ஒரு நாற்பதாண்டு காலம் பட்டி தொட்டியெங்கும் நடந்து நடந்து பேசிப் பேசி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் சுயமோகத்தின் பலிபீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நமது சாய்வுகளின் மீதான தீவிர மறுபரிசீலனை என்பது நமது முன்னால் தேர்வு அல்ல. தப்பித்துக்கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால் எதார்த்தம் மிகக் கசப்பானதாக இருக்கிறது. அச்சமூட்டுவதாக இருக்கிறது.
நுணுக்கி நுணுக்கி வார்த்தைகளைத் தேர்ந்து தேர்ந்து மோடியை விமர்சிக்கிறார் ஸ்டாலின். அபத்தமாக இருக்கிறது. நீங்கள் ஓட்டு ஜெயலலிதாவுக்குதானே போட்டீர்கள், இப்போது வந்து ஸ்டாலின் ஏன் நீட்டுக்காகப் போராடவில்லை என்று கேட்காதீர்கள் என்று கொக்கரிக்கிறார்கள் உடன்பிறப்புகள். சரிதான். அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தெருவில் அலையட்டும். உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களுக்காக என்ன நொட்டினீர்கள் என்று 80-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வைத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது கடமை இல்லையா.
அதிமுகவின் தற்போதையை நிலைமையில் இருந்து திமுக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்த படிப்பினைகள் மட்டுமே திமுகவைக் காப்பாற்றும். அத்தகைய ஒரு திமுக மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும். thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக